தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அறியப்பட்ட கோவை ஒருபுறம் பெரு நிறுவனங்களால் நிரப்பப் பட்டிருந்தாலும், அதன் மற்றொரு புறம் கிராமங்களையும், மலைவாழ் பகுதிக ளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. சுருக்கமாகச் சொல்வதெனில், தன் அடையாளத்தாலும், கல்வி, வேலை வாய்ப்புகளாலும் முன்னேறிக் கொண்டி ருக்கும் மக்கள் ஒருபுறம் இருக்கையில், அடிப்படை வசதிகள் என்றால் என்ன வென்றே தெரியாமல் மலைகளும், காடு களுமே தங்கள் உலகம் என வாழ்ந்து வரும் மக்களும் இதே கோவையின் மறு புறத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவற்றில் குறிப்பிடத்தக்க அடையாளமாக சொல்லப்படுவது பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை ஆகும். இப்பகுதியில் உள்ள 9 ஊராட்சிக ளில் 23 கிராமங்கள் மற்றும் 17 வனத்து றைக்குட்பட்ட பகுதிகள் என மொத்தம் 40 மலைவாழ் செட்டில்மெண்ட்கள் உள்ளன. இக்கிராமங்களில் பல்வேறு மலைவாழ் இனங்களைச் சார்ந்த 2 ஆயிரத்து 400க் கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன. இங்குள்ள மக்களின் பிரதான தொழில்கள் கிழங்கு எடுத்தல், தேன் எடுத்தல் மற்றும் காட்டு வேலைகளைச் செய்வதாகும். இதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானமே அவர்களின் வாழ்வாதாரம். இவ்வருமானம் தினப்படி சாப்பிட்டிற்கே பத்தும் பத்தாமல் இருக்கையில் இருப்பிடத்திற்கோ, கல்விக்கோ எதையும் சேமித்து வைக்கும் வாய்ப்பற்றவர்கள்.
தொகுப்பு வீடுகள்
இம்மலைவாழ் கிராமங்களிலுள்ள பல பகுதிகளுக்கு அரசின் தரப்பில் தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. வனத்துறைக்குட்பட்ட பல பகுதிகளில் வீடுகள் கட்டத் தடை என்பதால், வனத்துறையினரால் கிராமத்திற்கு 2 அல்லது 3 என தகர வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. இதுதவிர்த்து பிற மக்கள் மூங்கில் மற்றும் மண்ணால் தாங்களே வீடுகட்டி வசிக்கின்றனர். இன்னும் பல இடங்களில் அது கூட கட்டக்கூடாது என்பதால் கூடாரங்களை அமைத்தும் பல மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், ஆழியாறை தாண்டியுள்ள புளியங்கண்டி என்னும் மலைவாழ் கிராமத்தில் ஒரு குடும்பத்திற்கு ஓர் அறை மற்றும் சமையலறையுடன் வீடு கட்டிக் கொடுத்துள்ளது அரசு. ஆனால், இங்கு கழிப்பறை கிடையாது. மின்சார இணைப்பும் கிடையாது. இவ்வாறு கட்டப்பட்ட வீடுகளிலும் 3 பேருக்கு மேல் இருக்க முடியாது என்கிற நிலையில் 9 பேர் கொண்ட குடும்பத்தினர் வசிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது.
யானைக்காட்டில் கழிப்பிடம்
மேலும், அப்பகுதியில் வீட்டுக்கு ஒரு கழிப்பிடம் அல்ல, ஒட்டுமொத்த கிராமத் திற்கே ஒரு பொதுக்கழிப்பிடம் கூட அர சால் கட்டித் தரப்படவில்லை. இதிலும் கொடுமை என்னவெனில் கழிப்பிட பயன் பாட்டிற்காக ஊருக்கு வெளியே ஒரு காடு உபயோகப்படுத்தப்படுகிறது. யானை மற்றும் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் இப் பகுதியில் அதிகம் என்பதால் அக்காட்டை உபயோகப்படுத்தவும் மக்கள் அஞ்சுகின் றனர். மேலும், 2001 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இவ்வீடுகளில் இதுவரை பலமுறை கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. கிட்டத்தட்ட இக் கிராமத்தில் அரசால் கட்டிக்கொடுக்கப் பட்ட 37 வீடுகளில் 30க்கும் மேற்பட்ட வீடு களின் மேற்கூரை இடிந்த நிலையில் காணப்படுகின்றன. கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்கள் மீது பலமுறை மேற்கூரை சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனாலேயே அங்கு வசிக்கும் மக்கள் கடன்குழுக்களில் கடன் வாங்கி அவ்வீடு களுக்கு வெளியே ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்து தாங்களே கூரை அமைத்து வசித்து வருகின்றனர். இக்கி ராமத்தின் நிலையே தொகுப்பு வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்ட மற்ற கிராமங்களின் நிலையாகும்.
நீர்மின் நிலையமிருந்து பயனேது...
அதேபோல், ஆனைமலைக்குட்பட்ட 6 வனத்துறை பகுதிகளில் பெயரளவிற்கு கூட மின்சார வசதி இல்லை. நாகரூத்து மற்றும் கீழ்பூணாச்சி ஆகிய ஊர்களில் நீர்மின் நிலையம் அமைந்துள்ள நிலை யில் அந்த ஊருக்கோ மின்சார வசதி கிடையாது. பலமுறை மக்களின் தரப்பில் கோரிக்கை வைத்தும் புலிகள் பாதுகாப் புப் பகுதிகளாக வருவதால் மின்சாரம் மறுக்கப்பட்டே வருகிறது. நவமலை கிராமத்தைப் பொறுத்த வரை பட்டா என்பதே இக்கிராமமக்க ளுக்கு கிடையாததால் தாங்களே கூரை மேய்ந்து வசித்து வருகின்றனர். தெரு விளக்குகள் மட்டுமே உள்ளதே தவிர வீடுகளுக்கு மின்சார வசதி கிடையாது. ஒரு பேருந்து மட்டுமே அவ்வூருக்கு வரும். மாவுடப்பு கிராமத்தினரின் நிலையோ இன்னும் மோசமாக உள்ளது. மலைக் கிராமமான இவ்வூரில் மூங்கிலால் கட்டப் பட்ட வீடுகளில் 300க்கும் மேற்பட்ட குடும் பங்களைச் சேர்ந்தோர் வசித்து வருகின்ற னர். ஆகவே, பல தலைமுறைகளாக அதேமலைப்பகுதியில் வாழ்ந்துவரும் இம்மக்களின் ஒட்டுமொத்த கோரிக் கையாக இருப்பது மின்சாரம், மருத்துவமனை, கல்விக்கூடங்கள் மற்றும் போக்குவரத்து வசதி ஆகிவையே. குறிப்பாக, அவசர காலத்தில் மருத்து துவமனைக்கு இவர்கள் செல்ல வேண்டுமென்றால் சுமார் 7 கிமீ நடந்து சென்று, பின்னர் பேருந்தில் 20 கி.மீ பய ணிக்க வேண்டும் என்கிற அவல நிலையே இருந்து வருகிறது.
எட்டாக்கல்வி...
இம்மலைவாழ் கிராமங்களில் பெரும் பாலும் அனைத்திலும் 5 ஆம் வகுப்பு வரை பயில பள்ளிகள் உள்ளூரிலே இருப்பினும் 6 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க வேண்டுமென்றால் வேட்டைக் காரன்புதூர், ஆனைமலை, கோட்டூர் பேரூராட்சியில் உள்ள பள்ளிக ளுக்கே அனைவரும் செல்ல வேண்டும். ஆக 40 மலைவாழ் மற்றும் வனப்பகுதிக் குட்பட்ட கிராமங்களிலுள்ள மாணவர்கள் தங்களின் பள்ளிக் கல்வியை நிறைவு செய்ய இந்த மூன்று பள்ளிகளை மட் டுமே நம்பியுள்ளனர். இதன்காரண மாக 6 ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க வேண்டுமென்ற விருப்பம் இருந்தாலும், வெகுதூர பயணம் காரண மாக அக்கிராமங்களைச் சேர்ந்த பெண் குழந்தைகள் பெரும்பாலும் 5 ஆம் வகுப் போடு தங்களது கல்வியை முடித்துக் கொள்ள வேண்டிய அவலம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், வறுமையின் காரணமாகவும் குழந்தைகள் பலர் வேலைக்குச் சென்று விடுகின்றனர். இதன் விளைவு 40 ஊர்களுக்கும் சேர்த்து தற்போது வரை 50 பேர் மட்டுமே பட்டப்படிப்பு படிக்க முடிந்திருக்கிறது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
திருமண ஆர்டர் என்னும் அவலம்
இக்கிராம மாணவர்களின் கல்வி குறித்து அப்பகுதியிலுள்ள தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் கூறுகை யில், எங்கள் பள்ளியில் 4 பழங்குடி பகுதிகளைச் சார்ந்த 67 மாணவர்கள் பயில்கின்றனர். அங்கு வாழும் மக்க ளைப் பொறுத்தவரை காட்டு வேலைக ளைச் செய்து வரும் அவர்கள் வறுமை மற்றும் தூரம் காரணமாகவே குழந்தை களை படிக்க அனுப்புவதற்கு தயங்கு கின்றனர். நிறைய பெற்றோருக்கு படிப் பைப் பற்றிய விழிப்புணர்வும் தேவைப்ப டுகிறது. பெரிய கொடுமை என்னவெனில் திருமண ஆர்டர் என்னும் பெயரில் பெண் பிள்ளைகளை 5 வருடங்களுக்கு வேலை செய்ய அழைத்துச் சென்று இறுதியில் ரூ.50 ஆயிரம் கொடுத்து அனுப்பும் அவலமும் அரங்கேறி வருகிறது. இத னால் யாரானும் ஒரு பெண் தப்பித்தவறி 10 ஆவது வந்தாலும் திருமணம் செய்து தர வேண்டுமென்பதற்காக இவ்வேலைக்கு அனுப்பப்பட்டு விடு வர். அவர்களும் சக்கையாய் உழைப்பை பிழிந்து விட்டு இறுதியில் ஒரு தொகையை கொடுத்து அனுப்பி விடுவார்கள்.
தனிமையின் தவிப்பு
இதுதவிர 10 ஆவது படித்து வெளியே வரும் மாணவர்களை அருகிலுள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அவர் களை வலிய வந்து சேர்த்துக் கொள் ளும். இதனை நம்பி சேரும் மாணவர் கள், பாடதிட்டம் அனைத்தும் ஆங்கிலத் திலேயே இருப்பதால் பாதியிலேயே நின்று விடுகின்றனர். இதனாலும் பல மாணவர்கள் இடைநிற்றலாகின்றனர். இது தவிர மேல்நிலைப் பள்ளியில் 5 ஆவது முடித்து போய் சேறும்போது அதிகளவு தனிமையை உணருகின்றனர். இவற்றைக் களைக்க ஆசிரியர்கள் தரப்பில் ஒருசில முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அதுவும் சரியாக செய்யப்ப டுவதில்லை. இக்காரணங்களால் பழங் குடி மாணவர்கள் பள்ளிக்கு வரவே அஞ்சுகின்றனர். மேலும், பள்ளியில் வருடத்திற்கு மூன்று பருவத்தில் 150 ரூபாய் வரை மாணவர்கள் கட்டச் சொல்கின்றனர். மற்ற மாணவர்கள் அதை ஓரளவு கட்டிவிட் டாலும் மலைவாழ் குழந்தைகளால் கட்ட முடிவதில்லை. அதனாலும் நிறைய பேர் இடைநின்றுள்ளனர்.
அக்குழந்தைகளின் மனநிலையைப் பொறுத்தவரை ஆர்வம் இல்லையெனில் கிடைக்கும் வேலைக்குச் சென்று சம்பாதித்துப் பழகி விட்டால் பின்னர் அவர்களை படிக்க வைக்கும் மனநிலைக்கு கொண்டு வருவது கடினம். இதெல்லாம் களையப்பட வேண்டும். அரசு தரப்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு முதலில் போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும். என்னைப்பொறுத்த வரை வீட்டில் பெற்றோர் தரப்பிலும், பள்ளிகளில் ஆசிரியர் தரப்பிலும், கல்வியை முழுமையாக சாத்தியப்படுத்த அரசின் தரப்பிலும் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். காலையில் எழுந்ததிலிருந்து பிள்ளை கள் படிக்க பாடத்திற்கு ஒரு டியூசன் அனுப்பும் பெற்றோர் இருக்கும் அதே ஊரில் தான், பிறந்ததிலிருந்து தன் குழந்தைகளுக்கு மின்சார விளக்கைக் கூட காட்ட முடியாத பெற்றோர்களும் உள்ளனர். இவ்வாறு படிக்கப் பள்ளி இல்லாதவனிடம் ஆன்லைன் வகுப்பை பயிலச் சொல்வதும், மின்சாரத்தை கண்ணால் பார்க்காதவனிடம் ஏர் கன்டீசர் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுவதெல்லாம் அவர்கள் சிரிப்பதற்கு உதவுமே, தவிர வாழ்வதற்கு உதவாது. கொரோனா தொற்றால் உலகமே தனிமைப்படுத்துத லுக்கு பழக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், பல நூறு ஆண்டுகளாக ஒதுக்கப்படுதலாலேயே தனிமைப்படுத்தலுக்கு பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறார்கள் இந்த மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள்.
-ச.காவியா, எஸ்.கோகுல்