tamilnadu

img

ஒவ்வொரு தோழரின் நலனிலும் அக்கறை கொண்டவர் கே.தங்கவேல்

கோவை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை முன்னாள்உறுப்பினருமான கே.தங்கவேல் உடல் நலக்குறைவின் காரணமாக ஞாயிறன்று அதிகாலை கோவையில் காலமானார். 
அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி பி.ஆர்.நடராஜன்எம்.பி., வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்ப தாவது:  

கே.ரமணி, கே.எஸ்.கருப்புசாமி, ஆர்.வெங்கிடு, டி.பி.முத்துசாமி, எம்.நஞ்சப்பன் போன்ற தலைவர்களோடு நெருக்கமாக இருந்து தொழிலாளர்களின் உரிமைக்கானபோராட்டத்திலும், தொழிற்சங்கத்தை வலுப்படுத்துவதிலும் முன்னின்றவர். கட்சியின் அலுவலக செயல்பாட்டை உறுதிப்படுத்துவதிலும், ஸ்தாபன விரிவாக்கத்திலும் கடுமையான உழைப்பை செலுத்தியவர். மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தின் செயலாளராக 11 ஆண்டுகள் செயல்பட்டவர். தமிழகத்தின் மேற்கு மண்டல பகுதியில் இருந்து தோழர் கே.ரமணிக்கு பிறகு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவிற்கு தேர்வு செய்யப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி பல்வேறு மாவட்டங்களுக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர். திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினராக  தேர்வு செய்யப்பட்டு மக்கள் பணியை திறம்பட மேற்கொண்டவர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளுக்கு உயர்ந்து கொண்டே இருந்தபோதும் கட்சியின் கடைக்கோடி தோழர்கள் ஒவ்வொருவர் நலனிலும் அக்கறை கொண்டவராகவும் தோழர் கே.தங்கவேல் திகழ்ந்தார். தோழர்களின் குறைநிறைகளை சுட்டிக்காட்டுவதும், விமர்சனங்களை நேருக்குநேர் முன்வைப்பதிலும் தனி முத்திரை பதித்தவர். கட்சியின் ஊழியர்களுக்கு அரசியல், ஸ்தாபன வகுப்புகள் எடுப்பதிலும், குறிப்பாக நேர நிர்வாகம் குறித்து இவரின் வகுப்புகள் எப்போதும் தோழர்களின் மனதில் உரைக்கும்படியாக நிற்கும். நமது அன்புத்தலைவர் தோழர் தங்கவேல் அவர்களின் இழப்பு தொழிலாளி வர்க்கம் ஈடு செய்யமுடியாத இழப்பு. மீளாத்துயரோடு ஆழ்ந்த அஞ்சலியை உரித்தாக்கிக்கொள்கிறேன். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தோழர் கே.தங்கவேல் எந்த லட்சியத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தாரோ அத்தகைய மாற்றத்திற்கான இயக்கத்தை இடைவிடாமல் தொடர உறுதியேற்போம்.
இவ்வாறு பி.ஆர்.நடராஜன் எம்.பி., தெரிவித்துள்ளார்.

;