கோவை, மே 4- கோவை நகரில் திறக்கப்பட்ட அனைத்து கடைகளையும் உடனடியாக அடைக்குமாறு காவல் துறையினர் மைக் மூலம் அறிவுறுத்தியதை தொடர்ந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெளிவான அறிவிப்பு எதுவும் கொடுக்கப்பட வில்லை. இந்நிலையில் கோவை நகரில் பெரும்பாலான இடங்களில் திங்களன்று கடைகள் திறக்கப்பட்டது. செல்போன் கடைகள் , ஹார்டுவேர், எலக்ட்ரானிக் கடைகள் திறக்கப்பட்டன. சாலைகளில் வழக்கம்போல் அனைத்து வாகனங்களும் இயங்க துவங்கின. மேலும் 40 நாட்களாக இயங்காமல் இருந்த சிக்னல்களும் இயங்க துவங்கின.
இந்நிலையில் காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், டவுன் ஹால் , இராமநாதபுரம், சிங்காநல்லூர் உட்பட நகரின் முக்கிய பகுதிகளில் திறக்கப்பட்ட அனைத்து கடைகளையும் மூடும்படி காவல்துறை சார்பில் திடிரென பிற்பகலில் அறிவிக்கப்பட்டது. காவல் துறை மைக் மூலம் கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலை தொடர்ந்து திறக்கப்பட்ட அனைத்து கடைகளும் உடனடியாக அடைக்கப்பட்டது.
மேலும், மேலும் கூட்டம் கூட்டமாக மக்கள் நிற்க கூடாது, கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 3 மணிக்கு நடக்கும் கூட்டத்திற்கு பின்னர் கோவை மாவட்டத்தில் கடைகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் , ஏ.சி இருக்கும் கடைகள் கண்டிப்பாக திறக்க கூடாது எனவும் போலீசார் மைக் மூலம் அறிவித்தனர். இதனால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.