tamilnadu

img

அனைத்து அத்துமீறல்களும் அரங்கேற்றப்பட்ட ஓபிஎஸ் பிரச்சாரம்

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து செவ்வாயன்று கோவை ராமநாதபுரத்தை அடுத்த ஒலம்பஸ் பகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். இதையொட்டி ஒலம்பஸ் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிமுழுவதையும் அதிமுகவினர் தங்களதுகட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொண்டனர். குறிப்பாக, திருச்சி சாலையை ஒட்டியுள்ள ஒலம்பஸ்சில் பேசுவதற்கு அனுமதிபெற்றுவிட்டு, கோவை - திருச்சி சாலையின் மையத்தில் பிரச்சார வாகனங்களை நிறுத்தி ஓபிஎஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் வாக்கு சேகரித்து பேசினர். அதுவும், எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த சாலையில் காலை 10 மணிக்கு ராமநாதபுரம் சிக்னல்முதல் சுங்கம் வரை சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேல் மூடப்பட்டது. மேலும், திருச்சி சாலையை வந்தடையும் அனைத்து குறுக்கு சாலைகளும் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். அவ்வழியாக ஆம்புலன்ஸ்வாகனங்கள் கூட அனுமதிக்கப்படவில்லை. இதேபோல், பிளக்ஸ் வைக்க தடை இருந்தபோதும், ஒலம்பஸ் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளை சுற்றிலும் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது.முன்னதாக, இந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய ஓபிஎஸ், கோவையின் தொழில் மற்றும் ஜிஎஸ்டி பிரச்சனைகளை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. முழுக்க முழுக்க மோடியின் புகழை மட்டும் பாடிச் சென்றார். இவர் கிளம்பிச் சென்றபின்னர் மதியம் 12 மணிக்கு பின்னரே திருச்சி சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. ஆனால், இதன்பின்னரும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதற்கு பல மணி நேரம் பிடித்தது. அதேநேரம், மற்ற எதிர்கட்சியினர் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரினாலே பல்வேறு கெடுபிடிகளை காட்டி அனுமதி மறுக்கும் தேர்தல் அதிகாரிகளோ, ஆளும் கட்சியினர் அரங்கேற்றிய இத்தகைய அத்துமீறல்களை ஓரமாக இருந்து வெறும் வேடிக்கை மட்டுமே பார்த்து சென்றனர்.(ந.நி)

;