tamilnadu

img

தமிழக தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு 4 ஆண்டு தடை...

சென்னை 
இந்திய தடகள உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 800 மீ பிரிவில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.  
அடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் பெறுவதை இலக்காக கொண்டு அதற்காக தீவிர பயிற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த நிலையில், வழக்கமான ஊக்க மருந்து பரிசோதனையில் கோமதியின் ரத்த மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட அனபாலிக் ஸ்டெராய்ட் நான்ட்ரோலன் என ஊக்க மருந்து பொருள் இருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஏ மற்றும் பி என இரண்டு  சாம்பிளிலும் கோமதி தடை செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு 4 ஆண்டுகள் தடை உத்தரவு வழங்கப்பட்டு ஆசிய போட்டிகளில் வென்ற தங்கப்பதக்கம் பறிக்கப்பட்டது. 

மாநிலம், தேசியம் என அனைத்து பிரிவுகளிலும் அவர் பெற்ற பதக்கங்கள், சான்றிதழ்கள், தரவரிசைப்புள்ளிகள், பணம் ஆகியவை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளது. தடகள நேர்மை குழுவுக்கு 28 நாட்களுக்குள் சட்ட மற்றும் உதிரி செலவுகளுக்காக 1000 பவுண்டுகள் (95 ஆயிரம்) செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 2019-ஆம் ஆண்டு மார்ச் 18 முதல் மே 17 வரையிலான இவரது சாதனைகள் அனைத்தும் சாதனைப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டன. 

மேல்முறையீடு 
தன் மீது விதிக்கப்பட்டுள்ள 4 ஆண்டு தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக கோமதி மாரிமுத்து அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விரிவாக கூறியதாவது,"என் மீதான தடையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போகிறேன். இதற்கு மாநில அரசு உதவ வேண்டும். நான் சாப்பிட்ட அசைவ உணவில் தடைச்செய்யப்பட்ட பொருள் இருந்திருக்கலாம் தவிர தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்து எதையும் நான் எடுத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு நடக்கும் என முன் கூட்டியே தெரியப்படுத்தியிருந்தால் நான் இந்த விவகாரத்திலிருந்து மீண்டிருப்பேன். தோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் அவமானத்தைச் சந்திக்க நேர்ந்திருக்காது” என கூறியுள்ளார். 

கோமதி மேல்முறையீடு செய்தாலும் உடனடியாக அதை ஏற்று விசாரிக்கமாட்டார்கள். ஏறக்குறைய ஒரு ஆண்டுகள் இழுத்தடித்து அதன் பின்னரே கோமதி விவகாரத்தை கையில் எடுப்பார்கள். காரணம் அவர்களிடம் பலஊக்க மருந்து சாம்பிள்களும், கொரோனாவின் அச்சுறுத்தலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    
 

;