tamilnadu

img

விளையாட்டுக்கதிர் - ஜிம்னாஸ்டிக்கின் அரசி ! - சி.ஸ்ரீராமுலு

சமீபகால இணையதள கூகுள் தேடலில் அதிகம் தேடிய வீடியோவாக முதலிடத்தை பிடித்திருக்கும் அந்த வீடியோவை பார்க்கும் அனைவரையும் ஆச்சரியத்தில் வாய்ந்த அடைத்து விடுகிறார் அந்த இளம் வீராங்கனை. ஒன்றல்ல, இரண்டல்ல, மூன்று முறை அந்தரத்தில் சுழன்று சுழன்று காட்டிய மாயவித்தை ரசிகர்களின் கண்களை கட்டி போட்டது என்றால் மிகையல்ல. அந்த வித்தைகளை நேரடியாக கண்டு களித்த ஆர்ப்பரித்த ரசிகர்கள் ஒருசேர எழுப்பிய கரவொலியால் அதிர்ந்தது அந்த விளையாட்டு அரங்கம். உருவத்தில் மெலிந்தும், உயரத்தில் 4 அடி 8 அங்குலமாக இருந்தாலும் அந்த இளம் வீராங்கனை படைத்திருக்கும் சாதனையோ மிக நீளமானது. அவர் யார்? என்பதை தெரிந்து கொள்ள  அந்த வீடியோ மட்டுமே போதுமானதல்ல. அமெரிக்காவின் ஓஹியோ கொலம்பஸில் 1997 ஆம் ஆண்டு மார்ச் 14-ஆம் தேதி பிறந்த சீமோன் அரியான் பைல்ஸ் உலகின் தலைசிறந்த ஜிம்னாஸ்டிக் கலைஞர். அட்ரியா, ஆஷ்லே, டேவின்  ஆகிய மூவரும் உடன் பிறந்தவர்கள். மூன்றாவது மகள் சீமான் பைல்ஸ். விளையும் பயிர்... 16 வயதிலேயே ஜிம்னாஸ்டிக் கலையில் அமெரிக்கா, உலக ஆல் ரவுண்டர் பட்டங்களை வென்று சாதனை படைத்தார். ஆறு வயதில் ஜிம்னாஸ்டிக் கலைஞர்களின் சாகசங்களை பார்த்து ஆச்சரியப்பட்டது மட்டுமன்றி அதுபோன்று தானும் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டார். போதைப்பொருள் பிரச்சனையில் சிக்கி சீரழிந்த தந்தையால்  குழந்தைகளுக்கு ஒரு வேலை சாப்பாட்டிற்கு வழியில்லை. தாய் ஷானனும் குழந்தைகளும் வறுமையில் பரிதவித்தனர். தாய்வழி தாத்தா ரானும், அவரது சகோதரி ஹரியட்டும் அந்த குழந்தைகளை தத்தெடுத்தனர். பொதுப் பள்ளியில் படித்த வந்த சிமோன் பைல்ஸ், ஜிம்னாஸ்டிக் கலைக்காக சீமோன் பைல்ஸை வீட்டு பள்ளிக்கு மாற்றினார் அவரது தாத்தா.

அமெரிக்காவின் புகழ்பெற்ற பானன் பயிற்சி மையத்தில் சேர்ந்து அமி பூர்மன்னிடம் ஜிம்னாஸ்டிக் கலைகளை கற்றுக்கொண்டார். 10 வயதிலேயே போட்டி களத்தில் குதித்து சீனியர் வீராங்கனைகளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்த அவர், பெலாரஸ் வீராங்கனை விட்டலி ஷெர்போ (33), ரஷ்யா வீராங்கனை லாரி சாலத்தினினா (32) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் 30 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்தாலும் ஜிம்னாஸ்டிக் உலகில் இவர் நிகழ்த்தாத சாதனைகளே இல்லை என்றே சொல்லலாம். சரித்திரம்... 2013 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் விளையாட்டில் ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் 19 தங்கம் உட்பட 25 பதக்கமும் குவித்து அசைக்க முடியாத சக்தியாக வரலாற்றில் முத்திரை பதித்தார். 2016  ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி அவரது வாழ்நாளில் மறக்க முடியாது. 19 வயதில் ஆர்டிஸ்டிக் ‘வாலட்’ , ஆல் ரவுண்ட், குழு ஜிம்னாஸ்டிக் உள்ளிட்ட 4 பிரிவுகளில் தங்கத்தை அள்ளிய தோடு ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று உலகமே திரும்பிப் பார்க்க செய்தார். பசிபிக் ரிம், உலக கோப்பை போட்டிகளில் நான்கு தங்கப் பதக்கத்தையும் அள்ளினார். தொழில்முறை  வீராங் கனையாக போட்டிகளில் பங்கேற்ற மிகக்குறுகிய காலத்தில்  27 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கம் என 35 பதக்கங்களுடன் ஜிம்னாஸ்டிக் உலகில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைத்து வருகிறார். சாகச ராணி... ஜிம்னாஸ்டிக் கலையில் வல்லமை படைக்கும் வீரர்கள் தாங்களாகவே உருவாக்கிய திறன்களை  ரசிகர்கள் மற்றும் தேர்வுக்கு முன்பு செய்து காட்டி அதிக புள்ளிகளை குவித்து சாதனைப் படைப்பது அவரவர் திறமையைப் பொறுத்தது. 2011 ஆம் ஆண்டு முதன்முதலாக ஜூனியர் உலகில் அமெரிக்க கிளாசிக் நிகழ்ச்சிகள் தனது அரங்கேற்றம் செய்து மூன்றாவது இடத்தைப் பிடித்து ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். கரடு முரடான பாதைகளை கடந்த 2011 ஆம் ஆண்டு தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க செய்த தேர்வுக்குழுவின் நம்பிக்கை வீண் போகவில்லை. அமெரிக்கா கிளாசிக், அலமோ கிளாசிக், ஹூஸ்டன் நேஷனல் என பல்வேறு தொடர்களிலும்  தொடர்ச்சியாக அசத்தினார். சீனியர் வீராங்கனைகளான எலிசபெத், கையிலோ ரோஸ்  இருவரும்  2013ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது.

அடுத்த வினாடியே தேர்வுக்குழுவினர் சீமோன் பைல்ஸை களம் இறங்கினர். மிக இளம் வயதிலேயே சீனியர் பிரிவு உலக கோப்பைக்கு தேர்வு செய்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு விபத்து என்றாலும் துவக்கத்தில் சற்று தடுமாறினார். பலமுறை கீழே விழும் சூழலும் ஏற்பட்ட போதும் துவண்டு போகவில்லை. பயிற்ச்சியாளர் கொடுத்த ஊக்கம், தைரியம், நம்பிக்கை ஆல்-ரவுண்டராக முடி சூட்டியது. தரை பயிற்சி 2 திறன்,  வால்ட் பிரிவில் ஒரு திறன், பேலன்ஸ் பீமில் ஒரு திறன் என்று எத்தகைய அழுத்தத்திலும் புதிய திறன்களை செய்து காட்ட முடியும் என்று நிரூபித்து காட்டுவதுடன் தனது முந்தைய சாதனைகளை அவரே முறியடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றதோடு ஒலிம்பிக் உட்பட பல்வேறு போட்டிகளில் 30 பதக்கங்களை குவித்து இருக்கும் சிமோன் பைல்ஸ்-க்கு அமெரிக்காவின் ‘சிறந்த ஒலிம்பிக் வீராங்கனை’ பட்டமும் வழங்கப்பட்டது. முதல் குரல்... 2018 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற உலக சீமான் ஸ்பீச் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் போது நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்ட போதும் 4 தங்கம் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றது எப்போதும் முதல் நிலை வீராங்கனை தான்தான் என்பதை நிரூபித்துக் காட்டினார். அவர் களத்தில் மட்டும் வீராங்கனை அல்ல, தனக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை தைரியமாக உலகிற்குச் சொல்லி மற்ற பெண்களையும் தைரியமாக மனம் திறக்க வைத்தார். விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவர் லேரி நாசர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வெளி உலகுக்கு சொன்னவர் இவர் அளித்த புகாரைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. “பல வருடங்களாக எனக்கு தெரிந்தவரே என்னை ஏமாற்றும் போது ஜிம்னாஸ்டிக் கழகத்தை எப்படி நம்ப முடியும். புதியவர்கள் மருத்துவர்களாக வரும்பொழுது என்னைச்சுற்றி சுவர்களை எழுப்பி கொள்கிறேன். எங்களால் செய்ய முடிந்தது அது மட்டுமே. அவர்கள் எங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்ற நம்பிக்கை மட்டுமே. ஆனால் அந்த நம்பிக்கையும் ஒரு ‘டைம் பாம்’ தான். காத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டி ஜிம்னாஸ்டிக் கழகங்களுக்கு எச்சரிக்கை மணி அடித்தது. மூன்றாண்டுகளுக்கு முன்பு தன் வாழ்க்கை வரலாற்றை “கவரேஜ் டு சோர்” என்ற தலைப்பில் ‘மிசேல் பார்போர்ட்’ என்ற பத்திரிகையாளருடன் இணைந்து எழுந்திருக்கும் சீமான் பைல்ஸ், ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லாமல் நாடு திரும்பியது இல்லை என்ற சாதனைக்கு சொந்தமானவர். இந்த ஒலிம்பிக் போட்டி தான் தான் பங்கேற்கும் கடைசி போட்டி என்று அறிவித்திருக்கும் 24 வது வயதில்  அடியெடுத்து வைத்திருக்கும் சீமான் பைல்ஸ் தங்க மங்கையாக ஓய்வு பெற அனைவரும் வாழ்த்துவோம்!

;