தருமபுரி, ஜூலை 8- பாப்பிரெட்டிப்பட்டி அருகே மின்சார வேலி யில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விவசாயி ஒருவரை வனத்துறை யினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட் டம், அ.பள்ளிப்பட்டி வனப்பகுதியில் அதிக அளவில் காட்டெருமைகள் உள்ளன. இந்நிலையில், விவசாய நிலத்தில் காட்டெருமைகள் நுழைவதை தடுக்கும் வகையில், பாப்பம்பாடி பகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி என்பவர் வனப்பகுதியை ஒட்டியுள்ள தமது விவசாய நிலத்தில் மின்சார வேலி அமைத்துள்ளார். மேய்ச்சலுக்காக விவசாய நிலத்தில் நுழைந்த ஒரு காட்டெருமை மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. உயிரிழந்த ஆண் காட்டெருமைக்கு சுமார் 4 வயது இருக்கும். இதையடுத்து, அரசு கால்நடை மருத்துவர் பிரகாசம் தலைமையிலான மருத்துவ குழுவினர் காட்டெருமையை மருத்துவ பரிசோதனைகள் செய்து பின்னர் புதைத்தனர். இந்த சம்பவம் குறித்து தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின்படி அரூர் வனச்சரகர் ஜி.தங்கராஜ் தலைமையிலான வனத் துறையினர் விவசாய நிலத்தில் மின்சார வேலி அமைத்திருந்த விவசாயி கோவிந்தசாமியை கைது செய்தனர்.