tamilnadu

img

மூன்றடுக்கு பாதுகாப்புடன் வாக்கு பதிவு இயந்திரங்கள்

கோவை, ஏப்.19-நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் அரசுபொறியியல் கல்லூரி வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல்வைக்கப்பட்டன.கோவை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கு.ராசாமணி, தேர்தல் மேற்பார்வையாளர் ரேணு ஜெயபால் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் ஸ்டிராங் ரூமில் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி, 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் ஸ்டிராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டு காவல் துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை துவங்கும் வரை சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படும். வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி 3 அடுக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் 150 காவல்துறையினர் ஈடுபடுத்தபட்டுள்ளதாக கூறினார். மேலும் 112 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் வாக்குஎண்ணும் மையம் கண்காணிக்கப்படுவதாக கூறிய அவர், வேட்பாளர்மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் இவற்றை கண்காணிக்கத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை காவல் துறை கட்டுப்பாட்டில் இந்த வளாகம் இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். 


நீலகிரி


நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் உதகையிலுள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. விடிய விடிய வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும்மையத்திற்குக் கொண்டு வரப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 


ஈரோடு


ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம், காங்கயம் மற்றும் தாராபுரம் ஆகியசட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்களின் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டன. இவை வாக்கு எண்ணும் மையமான சித்தோடு சாலை மற்றும் போக்குவரத்து தொழில்நுட்ப (ஐஆர்டிடி))கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன. விடிய விடிய நடைபெற்ற இப்பணி வெள்ளிக்கிழமை காலை வரை நீடித்தது. துணை இராணுவம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, உள்ளூர் காவல்துறை மற்றும் சிசிடிவி மூலம்வாக்கு எண்ணும் மையம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு 4 அடுக்கு பாதுகாப்பில் வாக்கு எண்ணும் நாளான மே-23ம் தேதி வரை பாதுகாப்பு தொடரும் என தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி


பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் சட்டமன்றம் வாரியாக வைக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள அறையை சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


சேலம்


சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள தனித்தனி பாதுகாப்பு அறைகளில் தொகுதி வாரியாக வைக்கப்பட்டு, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான ரோஹிணி மற்றும் தேர்தல் பார்வையாளர் ராஜேஷ் மஞ்சுமேற்பார்வையில் ஆறு சட்டமன்றதொகுதி ஸ்ட்ராங் ரூம்கள் சீல் வைக்கப்பட்டன.சீல் வைக்கப்பட்ட அறைகளுக்கும் 3 அடுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஸ்ட்ராங் ரூம் பகுதியிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாகவும், சுழற்சி முறையில் 24 மணி நேரமும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி தெரிவித்தார்.

;