tamilnadu

img

தலித் ஊராட்சி மன்ற பெண் தலைவரை நாற்காலியில் அமரவிடாமல் தீண்டாமைக் கொடுமை ஜே.கிருஷ்ணாபுரத்தில் அதிமுகவினர் அராஜகம்

கோவை, ஆக. 23 –  கோவையில் அருந்ததிய சமூகத்தைச் சேர்த்த தலித் பெண் ஊராட்சி மன்றத் தலைவரை நாற்காலியில் அமர அனுமதிக்காமல் தீண்டாமைச் செயலில் அதிமுகவினர் ஈடுபட்டு வருகின்றனர். கோவை சூலூர்  சுல்தான்பேட்டையில் உள்ள ஜே.கிருஷ்ணாபுரம்  ஊராட்சி ஒன்றியம் பொதுத் தொகுதியாக இருந்த நிலையில் இதனை தாழ்த்தப்பட்டோருக்கான தொகுதியாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இந்த ஊராட்சியில் அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த சரிதா என்பவர் திமுக சார்பில் போட்டியிட்டு  ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்றார். இவரின் வெற்றியைக் பொறுக்க முடியாத சாதி ஆதிக்கச் சக்தியினர் இவரை தொடர்ந்து பணி செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர். இதுகுறித்து ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் சரிதா கூறுகையில், இந்த தொகுதி எஸ்சி தொகுதி என்பதால் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றேன். இதனைப் பொறுக்க முடியாத இங்குள்ள அதிமுகவைச் சேர்ந்த உசிலமணி (எ) பாலசுப்பிரமணியம் உள்ளிட்டவர்கள் நான் தலித் அருந்ததிய வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர்.

நீ ஒரு அருந்ததியர் எப்படி இந்த நாற்காலியில் அமரலாம்? எங்களுக்கு உத்தரவு போடுகிற நிலைக்கு உயர்ந்து விட்டாயா என்று ஊராட்சி மன்ற நாற்காலியில் அமர்வதற்குக்கூட என்னை அனுமதிப்பதில்லை, பெயர்ப் பலகையில் கூட தலைவரான என் பெயரை எழுத விடவில்லை.  மேலும், எந்த மக்கள் பணியையும் செய்ய விடுவதில்லை. இதுகுறித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் புகார் அளித்து விட்டேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதேநிலை தொடர்ந்தால் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளேன் என தெரிவித்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் இத்தகவலை அறிந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சியின் சூலூர் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, சூலூர் தாலுகா செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் சென்று சரிதாவை சந்தித்து விவரங்களைக் கேட்டறிந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உங்களுடன் உறுதியாக நிற்கும் உறுதியளித்தனர். மேலும், சமூக நீதிக்கட்சியின் தலைவர் பன்னீர் செல்வம், திராவிட தமிழர் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் வெண்மணி ஆகியோரும் ஊராட்சி மன்றத் தலைவருக்கான உரிமையைப் பெற்றுத்தர போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

;