tamilnadu

img

தருமபுரி அருகே நிலத்தை அபகரிக்க முயற்சி

தருமபுரி, ஏப். 23-தருமபுரி அருகே அனுபவ நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயி குடும்பத்துடன் தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள திருமல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகன் காளப்பன் (37). இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவியும், ரித்தீஷ் (8) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில்செவ்வாயன்று காலை தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வந்த காளப்பன், மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனை அறிந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் காளப்பன் கூறியதாவது:- நாங்கள் திருமால் வாடி கிராமத்தில் வசித்து வருகிறோம். அங்கு எங்களுக்கு  பிதுராஜ்யமாக பாத்தியப்பட்ட நிலம் உள்ளது.


நிலத்தில் எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்து விவசாயம் செய்து வருகிறோம். நிலத்திற்கு உண்டான வரிப் பணத்தை செலுத்தி வருகிறோம். இந்நிலையில் எங்கள் பகுதியைச் சேர்ந்த ராமன், பொன்னுசாமி, கணேசன் உள்பட 14 பேர் சேர்ந்து கடந்த 20 ஆம் தேதியன்று நிலத்திற்கு வந்து என்னிடம் நீ விவசாயம் செய்யும் இடம் நத்தம்புறம்போக்கு நிலம் என்றும், ஆதலால் நிலத்தில் நீ விவசாயம் செய்யக் கூடாது என்று மிரட்டி உடனடியாக நிலத்திலிருந்து காலி செய்ய வேண்டும் என்று கூறினார்கள். மேலும், மறுத்தால் நாங்களே நிலத்தை காலி செய்து விடுவோம் என்று கூறிவிட்டு சென்றனர். பின்னர் 21 ஆம்தேதியன்று அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து என்னையும் என் குடும்பத்தாரையும் அடித்தனர். பின்னர் நிலத்தில் இருந்த கிணற்றினை சேதப்படுத்தினர். கிணற்றில் இருந்த தண்ணீர் மோட்டாரை உடைத்தனர். மேலும் நிலத்தில் இருந்த மரங்கள், தக்காளிச் செடிகள், வாழைமரம், சாமந்தி செடி மற்றும் தீவனப் பயிர்களை அழித்து சேதப்படுத்தினர். பின்னர் மேலும் நிலத்தில் இருந்தால்குடும்பத்தோடு காலி செய்து விடுவோம் என்று அனைவரும் மிரட்டிச் சென்றனர்.எனவே எங்களை மிரட்டிய அந்தப் 14 பேர் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து காளப்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

;