tamilnadu

திருப்பூர் முக்கிய செய்திகள்

தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊர் செல்ல  திருப்பூரில் இருந்து சிறப்பு பேருந்து ஏற்பாடு


திருப்பூர், ஏப். 11 –நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கு திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லக்கூடியவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத் தேர்தலுடன், முன்னதாக தமிழ்ப் புத்தாண்டு மற்றும் வார விடுமுறை நாட்கள் தொடர்ச்சியாக வர இருப்பதாலும் ஏப்ரல் 13ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேலத்திற்கு 30 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 13ஆம் தேதி சனியன்று 25 நடைகள், 14ஆம் தேதி 20 நடைகள், 15, 16 தேதிகளில் தலா 10 நடைகள்மற்றும் தேர்தலுக்கு முந்தைய நாளான 17ஆம் தேதி 36 நடைகள், வாக்குப்பதிவு நாளான 18ஆம் தேதி10 நடைகள், 19 ஆம் தேதி 5 நடைகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கும் மேற்கண்ட நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தேர்தலுக்கு முந்தைய நாளான 17ஆம் தேதி மதுரைக்கு 33 நடைகள், தேனிக்கு 25 நடைகள், திருச்சிக்கு 17 நடைகள், திண்டுக்கல்லுக்கு 6 நடைகள் என 110 நடைகள் இயக்கப்படும். தேர்தல் நடைபெறும் 18ஆம் தேதி மதுரைக்கு12 நடைகள், தேனிக்கு 7, திருச்சிக்கு 6, திண்டுக்கல்லுக்கு 9 நடைகள் என 44 நடைகள் இயக்கப்படுகின்றன. சேலம் தவிர்த்து மதுரை, தேனி, திருச்சி, திண்டுக்கல்லுக்கு 130 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த சிறப்புப் பேருந்துகள் தவிர வெளியூர்களுக்கு பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 361 பேருந்துகள் மூலம் 889 நடைகளும், புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 517 பேருந்துகள் மூலம் 952 நடைகளும் இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகள் இயக்கத்தைக் கண்காணிக்க 10 அலுவலர்கள் உட்பட கூடுதல் பணியாளர்கள் பேருந்து நிலையங்களில் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பணி புரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


திருப்பூரில் காவல் துறையினர் தபால் வாக்கு  சிறப்பு முகாம்: 574 காவலர்கள் வாக்குப்பதிவு


திருப்பூர், ஏப். 11 - திருப்பூரில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள காவல் துறையினருக்காக தபால் வாக்கு செலுத்தும் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.இதில் மாநகர காவல் மற்றும் மாவட்டத்தைச் சேர்ந்த 574 பேர் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தபால் வாக்கு செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி (தனி), பல்லடம், காங்கயம், தாராபுரம் (தனி), உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மாவட்ட காவல் துறையினர் மற்றும் மாநகர காவலர்கள் தபால் வாக்குச்சீட்டு விண்ணப்பங்களைப் பெற்றவர்கள் தங்கள் வாக்கினைச் செலுத்த சிறப்பு முகாம் நடந்தது. இம் முகாமினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் உடனிருந்தனர்.இந்த தேர்தலில் காவல் துறையினரிடம், தபால் வாக்குப் படிவத்தில் அவர்கள் வாக்களிக்க விரும்பும் வேட்பாளர் மற்றும் கட்சியை தேர்வு செய்யாமல், கையெழுத்தை மட்டும் போட்டுத் தரும்படி உயரதிகாரிகள் கட்டாயப்படுத்துவதாகவும், காவலர்களின் வாக்களிக்கும் அடிப்படை உரிமையைப் பறிக்கும் இந்த ஜனநாயக விரோத செயலைத் தடுத்து நிறுத்தி, காவலர்களின் வாக்களிக்கும் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூறியிருந்தது. இந்த பின்னணியில் காவலர்கள் தபால் வாக்கு அளிக்கும் சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது. திருப்பூர் மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மாலை 5 மணி வரை நடைபெற்ற சிறப்பு முகாமில், திருப்பூர் மற்றும் மாவட்டத்தை சேர்ந்த 574 காவல் பணியாளர்கள் தபால் வாக்குகளைச் செலுத்தி இருந்தனர்.