அவிநாசி, மே 20-அவிநாசி அடுத்த திம்மனையாம்பாளையத்தில் ஞாயிறன்று மண் கடத்திய டிப்பர் லாரி, ஜேசிபி இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.அவிநாசி ஒன்றியம், திம்மனைபாளையம் கிராமத்தில் இரவு நேரத்தில் அரசு அனுமதியின்றி பட்டா நிலத்தில் மண் எடுத்து வருவதாக வட்டாட்சியர் வாணிலட்சுமி ஜெகதாம்பாளுக்கு ரகசியமாக தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் ஞாயிறன்று இரவு அப்பகுதியிலுள்ள தோட்டத்தில் மண் அள்ளிக் கொண்டு இருந்ததை கண்டறிந்த அதிகாரிகள், மண் அள்ள பயன்படுத்திய ஜேசிபி இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன்பின் அதனை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று நிறுத்தி வைத்தனர். இதுகுறித்து வட்டாட்சியர் வாணிலட்சுமி ஜெகதாம்பாள் கூறுகையில், மண் அள்ளிய வாகனங்கள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் உரிமையாளர்கள் விபரம் இன்னும் சரிவர தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.அதேநேரம், கடந்த மூன்று மாதங்களாக இப்பகுதியில் மண் கடத்தல் அதிகமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கடந்த மாதம் திருப்பூர் மாவட்டகனிமவளத் துறை மூலமாக ஆளுங்கட்சி பிரமுகர்களுடைய இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்யாமல்வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பிடிபட்ட இந்த லாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.