tamilnadu

img

உலகம் தன்னால சுத்துதா? - ஜிஜி

காலிங் பெல் அடித்தது. யுகேந்தர் வந்து கதவைத் திறந்தான். ‘‘பிரதர் குட் மார்னிங். புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்தாங்க நம்ம குடியிருப்பு சங்கத்தின் சார்பாக காலண்டர் போட்டிருக்கோம். அதோட இந்தாங்க ஸ்வீட்.’’ என்று காலண்டரையும் இனிப்பையும் நீட்டிய காசிநாதனையும் அவருடன் வந்திருந்த சங்க நிர்வாகிகளையும் கோபத்துடன் பார்த்தான் யுகேந்தர். ‘‘என்ன சார் கிண்டல் பண்றீங்களா? எனக்கு எதுக்கு தர்றீங்க?’’ என்றவனை...    ‘‘தம்பி, நம்ப அப்பார்ட்மெண்ட்ல இருக்கிற எல்லா வீட்டுக்காரர்களுக்கும் புதுவருஷத்துக்காக காலண்டரும் ஸ்வீட்டும் கொடுக்கறோம் உங்களை மட்டும் எப்படி விட்டுட முடியும். நீங்க நம்ப குடியிருப்போர் நல சங்கத்துல உறுப்பினரா இல்லாம இருக்கலாம் இருந்தாலும் நீங்களும் எங்களில் ஒருத்தர்தான்’’ என்று சொல்லி பரிசைக் கொடுத்தார் காசிநாதன். ‘‘சார் உங்களுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரிய மாட்டேங்குது. எனக்கு இந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்கற யாரோட அபிமானமும் வேணாம் மனஸ்தாபமும் வேணாம். உங்க கும்பல்ல என்னைச் சேர்த்துக்காதீங்க. இந்த சங்கம், குடும்பம் உறவுகள்னு யாரும் வேணாம்னுதான் தனியா வாழ்ந்துகிட்டிருக்கேன். எதிர்வீட்டுல இருக்கற உங்களுக்குத் தெரியாதா? நான் எப்படி இருக்கேன்னு’’ 

‘‘தம்பி ஒன்னு கேக்கறேன். இந்த உலகம் தன்னால சுத்துதுன்னு நெனக்கறீங்களா?’’  ‘‘இல்லீங்க அது உங்களாலதான் சுத்துது.’’ என்று சொல்லிவிட்டு கையில் கொடுத்த காலண்டரையும் ஸ்வீட்பாக்ஸையும் அவரிடமே கொடுத்துவிட்டு கதவை அறைந்து சாத்தினான். அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த காசிநாதனுக்கு போன் வந்தது, ‘‘சார் நான் ஜே-1 எஸ்.ஐ. பேசறேன். எங்கே இருக்கீங்க?’’ ‘‘விக்டர் சார் நல்லாயிருக்கீங்களா? சொல்லுங்க, நான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்துகிட்டிருக்கேன். என்ன விஷயம்.’’ ‘‘கொஞ்சம் அப்படியே ஸ்டேஷன் வந்துட்டு போகமுடியுமா? உங்க மேல ஒரு கம்ப்ளயிண்ட் வந்திருக்கு. விசாரிக்கணும்.’’ என்றார்.  ‘‘ஓ... தாராளமா. இன்னும் 20 நிமிஷத்துல ஸ்டேஷன்ல இருப்பேன்.’’ என்றார் காசிநாதன். ‘‘மிஸ்டர் யுகேந்தர். இதுவரைக்கும் இப்படி ஒரு புகாரை நான் பார்த்ததே இல்லை. உங்களை காசிநாதன் அடிக்கடி டிஸ்டர்ப் பண்றார் உங்க பிரைவஸியை கெடுக்கறார்னு புகார் கொடுத்திருக்கீங்க. அப்படி என்னதான் பண்ணாரு அவரு? உங்க வீட்டுக்குள்ள வந்து உங்களை டிஸ்டர்ப் பண்ணாரா?’’

‘‘அது ஒன்னுதான் பண்ணல சார். அதுக்கு சரிசமமா மத்ததை எல்லாத்தையும் பண்ணிட்டிருக்காரு.  கார்த்திகை மாசம்னா பத்து பதினைஞ்சு ஐயப்ப சாமிகளை அவர் வீட்டுல வச்சுகிட்டு ராத்திரி 11 மணிவரைக்கு பஜனை பண்ணி பாட்டு பாடி ரகளை பண்றார். மார்கழி மாசம் வந்துட்டா காலையில நாலு மணிக்கெல்லாம் பிளாட்ல இருக்கற பொம்பளைங்களை எழுப்பிவிட்டுட்டு கோலம் போடுங்கோ, ஆண்டாள் பாசுரம் பாடுங்கோ, திருப்பாவை டான்ஸ் ஆடுங்கோங்கறார். சனிக்கிழமை காலையில பிளாட்ல இருக்கற பெருசு சிறுசுகளையெல்லாம் கூட்டி வச்சுகிட்டு ஒரே சிரிப்பு சத்தம். என்னன்னு கேட்டா ஸ்மைல்தெரபிங்கறார். திடீர்னு சாண்டா கிளாஸ் தாத்தாவா மாறி வீட்டுக்கதவை தட்டி பரிசு கொடுக்கிறார். வாராவாரம் ஞாயித்துக்கிழமை காலையில 6.30 மணிக்கு சின்னபசங்க ரெண்டுபேரு வந்து கதவை தட்டி அருகம்புல் சாறு குடிங்க, வாழைத்தண்டு சாறு குடிங்க இஞ்சிசாறு குடிங்கன்னு ஒரே கழுத்தறுப்பு. இதுவெல்லாம் போதாம குடியரசு தினம், சுதந்திர தினம், மகளிர் தினம்னு, தினம் தினம் ஒரு வேஷத்துல வந்து நிக்கறாரு. இன்னும்கூட சொல்லலாம் சார் இலவச யோகா பயிற்சின்னு காலையிலயும் சாயங்காலத்துலயும் பிளாட் வராண்டாவுல நடந்து போகமுடியாதபடி எல்லாரையும் உக்கார வச்சு யோகா சொல்லித்தர்றாரு. எதிர்வீட்டுல குடியிருக்கறதுக்கே பயமா இருக்குசார்.’’ ‘‘உங்களைத் தவிர வேற யாரும் அந்த குடியிருப்புல இருந்து கம்ப்ளெயிண்ட் பண்ணலீங்களே.’’ ‘‘நான் தனியா இருக்கேன் சார். எனக்கு தனிமைதான் பிடிக்கும். யாரோட உதவியையும் நான் எதிர்பார்ககலே. என்னிடமிருந்தும் மத்தவங்களுக்கும் எந்தத் தொந்தரவும் இருக்காது.’’

‘‘இந்தகாலத்துல மத்தவங்க உதவி தேவையில்லீங்கறேங்களே? ஆச்சர்யமா இருக்கு.’’ ‘‘ஒய் நாட் சார். சாப்பாடும். டிபனும் வேணுமின்னா ஜொமேட்டோ, ஸ்விக்கி இருக்கு; வெளியில போறதுக்கு உபர், ஓலா வாடகைகார்கள் இருக்கு; ஏதாவது ஊருக்கு போகணும்னா யார்கிட்டேயும் வழிகேக்கணும்னு அவசியம் இல்லைசார். கூகுள் மேப், ஜிபிஎஸ் இருக்கு; ஏதாவது திண்பண்டங்கள் நொறுக்குதீனி வாங்கிப்போட்டு வைக்கணும்னா பிக் பாஸ்கட் இருக்கு; துணிமணிகளை வாங்கறதுக்கு அமேசான், பிலிப்கார்ட் இருக்கு; மனசை ரிலாக்ஸ் பண்ண ஜோக் பார்த்து சிரிக்க வாட்ஸ்ஆப், பேஸ் புக் இருக்கு. இதெல்லாத்தையும் விட கடன் வாங்க, கிரடிட்கார்டு இருக்கு; பணம் கொடுக்க, பேடிஎம் இருக்கு; வீட்டை பராமரிக்க ஏ டூ இசட் மெயிண்டனன்ஸ் சர்வீஸ் இருக்கு. மத்தவங்க உதவி எதுக்கு?’’ ‘‘கல்யாணம், காட்சி, குழந்தை, குட்டிக்கெல்லாம் என்ன பண்ணுவீங்க.’’ ‘‘அந்தக் கண்றாவியெல்லாம் வேணாம்சார். இப்படியே இருப்போம் வாழ்க்கையை அனுபவிப்போம். அப்படியே போய் சேர்ந்துடுவோம் யாருக்கும் தொந்தரவு இல்லாம. இதுதான் என் கொள்கை சார்.’’ ‘‘கொள்கையெல்லாம் பேசறீங்களே  நீங்க என்ன வானத்துல இருந்தா குதிச்சீங்க. உங்க அப்பா அம்மா உதவியில்லாமயா நீ இந்த உலகத்துக்கு வந்தீங்க? ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருக்கணும்னுதான் இந்த உலகம் படைக்கப்பட்டிருக்கு. நீங்க 24 மணி நேரமுமா அலுவலக வேலை பார்க்கறீங்க? அப்படி பாத்தீங்கன்னா பைத்தியமாயிடுவீங்க. கொஞ்சம் அப்பப்ப ரிலாக்ஸ் பண்ணனும் யுகேந்தர். இதையெல்லாம் டிஸ்டர்ப்னு ஏன் நினைக்கறீங்க. உங்க மைண்டை ரிலாக்ஸ் பண்ற சின்ன சின்ன விஷயங்களா இதை நினைச்சு கடந்து போயிடுங்க. ஒன்னு கேக்கறேன், நீங்க அவசர அவசரமாக ஆபீஸ் போக உங்க பைக்கையோ, காரையோ எடுத்துகிட்டு கிளம்பிட்டீங்க. திடீர்னு டிராபிக் ஜாம் ஆயிடுது பிரதமரோ முதல்வரோ வர்றாங்கன்னு ஒரு மணி நேரம் ரோட்லயே நிக்க வச்சுடறாங்க போலீஸ்காரங்க. இது கண்டிப்பா இடைஞ்சல்தான் அதுக்காக நீங்க யாருமேல கேஸ் போடுவீங்க. ஐ.டி. கம்பெனிகளில் வேலை செய்யறவங்களுக்கு இருக்கற மன அழுத்தத்தை விட போலீஸ்காரங்களுக்கு மன அழுத்தம் அதிகமா இருக்கு. எங்களுக்கு வர்ற ஒவ்வொரு போன் காலுமே இடைஞ்சல்னு நெனச்சா மக்கள் எல்லாம் என்ன ஆவறது. எல்லாத்தையும் பிரச்சனையா பாக்காதீங்க அனுபவமா பாருங்க. அடுத்த வீட்டுல என்ன நடந்தா என்னன்னு இருக்கற காலத்துல எல்லாருடனும் அன்போடவும் பிணைப்போடவும் ஒற்றுமை உணர்வோடவும் இருக்கற அந்த குடியிருப்புல குடியிருக்க உங்களுக்கு குடுத்து வச்சிருக்கு சார். இன்னொன்னு சொல்லட்டுமா... உங்க ஏரியாவுலயே உங்க குடியிருப்புலதான் திருட்டு குற்றமும், அடிதடி கேஸும் கிடையாது.’’

‘‘சார் நான் உங்க அட்வைஸ் கேக்க வரல. என்னோட பெட்டிஷன் மேல ஆக்சன் எடுக்கசொல்றேன்.’’ ‘‘தாராளமா எடுங்க எஸ்.ஐ. சார் என்றவாறு காசிநாதன் வந்தார். ஆனா எந்த ஆக்ட்படி கேஸ் போடறீங்கன்னு  எனக்கு சொல்லுங்க’’ என்றார். அவர் சொன்னதும் யுகேந்தரை எஸ்.ஐ. பார்க்க.. ‘‘ஆங். எதுனா ஒரு ஆக்ட்ல போடுங்க சார். புகார் கொடுக்க வர்றவங்ககிட்டேதான் ஆக்ட்டெல்லாம் கேப்பீங்களா?’’ ‘‘ஹலோ மிஸ்டர். உங்க புகார்ல எந்த குற்றத்துக்கும் முகாந்திரம் இல்லியே. இருக்குன்னா நீங்கதான் எந்த ஆக்ட்னு சொல்லணும்.’’ ‘‘சார் இது குடியிருப்புக்குள்ள ஒரு வீட்டுக்கு எதிரா நடக்கற வன்முறை.  ‘டொமஸ்டிக் வயலன்ஸ் ஆக்ட்’.படி கேஸ் போடுங்க சார்.’’ ‘‘டொமஸ்டிக் வயலன்ஸ் ஆக்ட் கீழே நாங்களும் உங்களை விசாரிக்க முடியாது. கலெக்டர் ஆபீசுக்கு போய் உங்க புகாரை கொடுங்க.’’ என்றார் எஸ்.ஐ.\

காசிநாதன் கேட்டார், ‘‘தம்பி இப்ப சொல்லுங்க, இந்த உலகம் தன்னால சுத்துதுன்னு நெனக்கறீங்களா?’’ என்றுகேட்க, ‘‘இல்லசார் நீங்கதான் அதை சுத்த வைக்கறீங்க.’’ என்றவாறு புகாரை எடுத்துகொண்டு வெளியேறினான் யுகேந்தர்.    பதினைந்துநாள் கழித்து யுகேந்தர் லிப்டில் மயங்கி விழுந்து 108 ஆம்புலன்ஸ் வந்து கூட்டிப்போனதாக தகவல் தெரிய மருத்துவமனை விரைந்தார் காசிநாதன். மருத்துவமனையில் அவனைப்பார்க்கக்கூட ஆட்கள் யாரும் வரவில்லை. பார்த்துக்கொள்ளவும் ஆள் இல்லை. டாக்டரிடம் விசாரித்தபோது நிறைய இருதயத்தில் அடைப்பு உள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினார். உடனே காசிநாதன், யுகேந்தர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தார். காசிநாதனிடம் டாக்டர் சொன்னார், ‘‘யுகந்தருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதால் அறுவை சிகிச்சை செய்வதற்கு பொறுப்பேற்றுக்கொண்டு அவர் உறவினர் ஒருவர் கையெழுத்து போட வேண்டும்’’ என்று கேட்டார். சற்றும் யோசிக்காமல் காசிநாதன் அந்தப்படிவத்தில் சகோதரர் என்றுசொல்லி கையெழுத்திட்டார். மற்ற பார்மாலிட்டிகளை யுகேந்தரின் அலுவலகத்திலிருந்து வந்த நபர்கள் பார்த்துக்கொள்ள அறுவை சிகிச்சை முடிந்து யுகேந்தர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு வரும் வரை காசிநாதன் உடனிருந்தார். யுகேந்தரை படுக்கையில் படுக்க வைத்துவிட்டு திரும்பும்போது யுகேந்தர் அவர் கைகளை பிடித்துக்கொண்டான். கண்கள் களங்கின. ‘‘சார் நான் ஒன்னு கேக்கட்டா?’’ ‘‘கேளுங்க தம்பி.’’ ‘‘இந்த உலகம் தன்னால சுத்துதுன்னு நெனக்கறீங்களா?’’ ‘‘இல்லப்பா இப்ப அது உன்னால சுத்துது.’’ ‘‘பொய் சொல்லாதீங்க சார் அது உங்களை மாதிரி பெரியவங்க அன்பினாலதான் சுத்துது.’’

;