tamilnadu

குடிநீர் இன்றித் தவிக்கும் கிராம மக்கள் போராட்டத்திற்கு தயாராகும் மார்க்சிஸ்ட் கட்சி

அன்னூர், ஜன. 25- அன்னூர் பகுதியில் முதலாவது குடிநீர் திட்டம் நிறுத்தம் காரணமாக தண்ணீர் இன்றி தவிக்கும் கிராம மக்களுக்கு ஆதரவாகப் போராட்டம்  நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. அன்னூர் ஒன்றியம், பேரூராட்சி ஆகிய பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  கடந்த சில மாதங்களாக முதலாவது குடிநீர் திட்ட விநியோகத்தில் பிரச்சனை இருந்து வந்தது. இச்சூழலில் கடந்த மாதம் இத்திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் குடிநீரை விலைக்கு வாங்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னூர் ஒன்றிய செயலாளர் முகமது முசீர் கூறுகையில், மக்களுடைய அத்தியாவசியத் தேவை குடிநீர். ஆனால் அரசாங்கமோ தண்ணீர் பிரச்சனையை கண்டுகொள்ளாமல் மக்களை தவிக்கவிட்டுள்ளது. முதலாவது குடிநீர் திட்ட தண்ணீர் வருவதில்லை. இங்கு மட்டுமின்றி அவிநாசி சட்டமன்றத் தொகுதி முழுவதுமே குடிநீர் பிரச்சனை தலை தூக்கியுள்ளது. ஆகவே, எதிர்வரும் நாட்களில் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை முன்னேடுக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

;