பொள்ளாச்சி, மே 26-பொள்ளாச்சி அருகே கட்டப்பட்ட தூய்மை இந்தியா திட்ட கழிப்பிடம் 5 ஆண்டுகள் ஆகியும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வராமல் மூடியே உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சியில் 35ஆவது வார்டுக்குட்பட்ட மாக்கினாம்பட்டி கிராமத்தில்அமைதிநகர் எனும் பகுதி உள்ளது. இப்பகுதியில் 300க்கும்மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திறந்தவெளியில் இயற்கை உபாதைகளைக் கழித்து வந்த நிலையில், இப்பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2015 - 16 ஆம் ஆண்டு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டது. ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் இக்கழிப்பிடமானது பயன்பாட்டிற்கே விடப்படவில்லை. இதனால் இப்பகுதியிலுள்ள பெண் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை திறந்த வெளியைத்தான் இயற்கை உபாதைகளுக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.இதுகுறித்து பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது அவர்கள் பதிலளிக்கவில்லை. இந்நிலையில் சமூக ஆர்வலர் சரவணகுமார் கூறுகையில்,நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பொதுக் கழிப்பிடம் நகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் முடிந்து அன்றைக்கு பூட்டிய பூட்டு இன்றளவும் திறக்கப்படவில்லை. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டித் தந்ததாக கூறினார்கள், ஆனால் இன்றளவும் கழிப்பிடம் திறக்கப்படாமலிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது.எனவே நகராட்சி அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இதுவே எங்கள் பகுதியிலுள்ள அனைத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும் என்றார்.