tamilnadu

img

முன்னுதாரணமாக 103 வயதில் வாக்களித்த மூதாட்டி

மே.பாளையம், ஏப். 18-நாட்டில் நடைபெற்ற முதல் தேர்தல் முதல் தற்போதைய நாடாளுமன்ற தேர்தல் வரை தவறாமல் வாக்களித்து வரும் 103 வயது மூதாட்டி எந்த காரணத்தை கொண்டும் நம் வாக்கை வீணடிக்க கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி என்னும் அழகிய விவசாயகிராமத்தை சேர்ந்தவர் ரங்கம்மாள். இவரது வயது 103. இதேதேக்கம்பட்டி கிராமத்தில் கடந்த1916 ஆண்டு விவசாயியான மருதாசலம் வேலம்மாள் தம்பதியினருக்கு பிறந்தவராவார். காலை ஐந்துமணிக்கு எழுந்து இன்று வரைசுறுசுறுப்பு குறையாமல் தனக்கான வேலைகளை தானே செய்து முடித்து விட்டு தனது தோட்டத்திற்கு சென்று விவசாய பணிகளை செய்கிறார். தன் அன்றாட பணிகளை தொடர ரங்கம்மாள் பாட்டிக்கு இன்று வரையாருடைய உதவியும் தேவைப்படுவதில்லை. இன்று வரை பேச்சு, பார்வை, செயல், நினைவு திறன் என அனைத்திலும் எவ்வித குறைபாடும் இன்றி செயல்பட்டு வருகிறார்.


நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தினம் என்பதால், வழக்கம் போல் அதிகாலை எழுந்து புறப்பட்ட ரங்கம்மாள் பாட்டி தனதுவாக்காளர் அடையாள அட்டை மற்றும் தனக்கு வழங்கப்பட்ட வாக்களர் படிவம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தனது வீட்டருகே சுமார் கால் கிலோ மீட்டர்தொலைவில் அமைக்கபட்டிருந்த தேக்கம்பட்டி அரசு நடுநிலைபள்ளி வாக்கு சாவடிக்கு சென்றார். யாருடைய உதவியுமின்றி நடந்தே வந்த ரங்கம்மாள் முதியோருக்கான வரிசையில் நின்று வாக்கு சாவடிக்குள் ஆர்வத்துடன் சென்றார். காண்போரை வியக்க வைக்கும் வகையில் எவ்வித தடுமாற்றமும் இன்றி தனது ஜனநாயக கடமையான வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தி வாக்களித்தார். இதன் பின்னர், தான் நாட்டில் முதல் பொது தேர்தல் முதல் தற்போதைய தேர்தல் வரை பஞ்சாயத் தேர்தல் உட்பட எந்த தேர்தலிலும் வாக்களிக்காமல் இருந்தது இல்லை என கூறிய அவர், அனைவரும் தங்களுக்கு வழக்கப்பட்ட ஜனநாயக உரிமையான வாக்கினை வீணடிக்க கூடாது. நல்லவர்களை தேர்வு செய்து வாக்களிக்க தவறக்கூடாது என்றார். இதனைத் தொடர்ந்து கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் வழக்கம் போல்தனது தோட்டத்திற்கு சென்று விவசாய பணிகளை தொடர்ந்தார். வாக்குப்பதிவு நாளை மற்றுமொரு விடுமுறை தினமாக மட்டுமே நினைத்து பலரும் வாக்கு சாவடிக்கு வராமல் வீட்டினுள் சோம்பி கிடக்கும் சூழலில், தனது தள்ளாத வயதிலும் தளராமல் வாக்களித்த மூதாட்டி ஒரு முன்னுதாரணமாக உள்ளார்.

;