tamilnadu

img

நாடே வெறுக்கிற மோடியோடு அதிமுக கூட்டணி வைத்தது வெட்கக்கேடு கே.பாலகிருஷ்ணன் பேச்சு

நாடு முழுவதும் மோடிக்கு எதிரான அலையடித்து வருகிறது. நாடே வெறுக்கிற பாஜகவோடு தமிழகத்தில் அதிமுக கூட்டணி வைத்திருப்பது வெட்கக்கேடு என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடினார். திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இதனையொட்டி மாவட்டம் முழுவதும் தீவிர பிரச்சார இயக்கங்கள் நடைபெற்று வருகிறது. இதன்ஒருபகுதியாக கோவை சூலூர் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் செவ்வாயன்று நடைபெற்றது. திமுக மாநிலசெயற்குழு உறுப்பினர் சன் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசுகையில், கலைஞர் மறைவிற்கு பிறகு திமுகவில் பிளவு ஏற்படுத்தி விடலாம் என ஆட்சியில் இருக்கும் அதிமுக சூழ்ச்சியை செய்ய முயற்சித்தது. இதனையொட்டித்தான் கலைஞரின் உடலை அண்ணாவின் சமாதிக்கு அருகில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக, பாஜக தவிர அனைத்து கட்சிளும் இணைந்து வலியுறுத்தினோம். கலைஞர் திமுகவின் தலைவர்மட்டுமல்ல தமிழகத்திற்கே தலைவர், தேசத்தின் மூத்த அரசியல் தலைவர் என்பதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி அதிமுக அரசோ அண்ணா சமாதிக்குஅருகில் அடக்கம் செய்ய இடம் கொடுக்க மறுத்தது. இதனையடுத்து மு.க.ஸ்டாலின் போராட்டம்நடத்தி அதில் வெற்றிபெற்றார்.


ஆகவே கலைஞருக்கு இடம் தர மறுத்த எடப்பாடியின் வெறுப்பு அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்றார். மேலும், நாட்டுமக்களுக்கு துரோகம் இழைத்து, மாநில உரிமைகளை பறித்த மோடி அரசை வீழ்த்தவேண்டும் என்பதற்காக அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமைத்து, அதில் மு.க.ஸ்டாலின் வெற்றியும் பெற்றுள்ளார். கலைஞர் இல்லாத திமுகவை மு.க.ஸ்டாலின் உருக்குபோன்று கட்டியமைத்து வழிநடத்தி வருகிறார். மோடி அலை என்பது எப்போதும் இல்லை. கடந்த தேர்தலில் அனைத்து கட்சிகளும் தனித்தனியாக நின்றதால் வெறும் 31 சதவிகிதம் வாக்குகளை பெற்று மோடி வெற்றி பெற்றார். அப்போதே மோடிக்கு எதிராக 69 சதவிகிதவாக்குகளை எதிர்க்கட்சிகள் பெற்றனர். இப்போது அனைவரும் ஒன்றிணைந்து மோடியை விரட்ட அணிவகுத்துள்ளோம். 2014க்கு பிறகு மோடியின் பாஜக சந்தித்த அனைத்து இடைத்தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்த மாநிலங்களையும் பறிகொடுத்துள்ளது. கடந்த தேர்தலில் இவர்களோடு கூட்டணி வைத்த கட்சிகள் அனைத்தும் வெளியேறிவிட்டது. எந்த மாநிலத்திலும் பாஜவோடு எந்த கட்சியும் கூட்டணி வைக்கவில்லை. கோ பேக் மோடி என்பது உலகளவில் பேசும் பொருளாக மாறியுள்ளது. நாடே வெறுக்கிற மோடியின் பாஜகவோடு தமிழகத்தில் அதிமுக மட்டும் கூட்டணி வைத்திருப்பது வெட்கக்கேடானது. ஆகவே, மோடி அரசின் கைப்பாவையாக இருக்கும் அதிமுக அரசை வீழ்த்த வேண்டும். 


நாட்டை காப்பாற்ற மோடியை வீழ்த்துவோம்

நாடு முழுவதும் விவசாயம், விசைத்தறி, சிறு,குறு தொழில்கள் அனைத்தும்மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியில் சீரழிந்து கிடக்கிறது. பெட்ரோல், டிசல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட அனைத்தும் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும்,சாதி, சமய பாகுபாடின்றி ஒற்றுமையோடு வாழும் நமது பண்பாட்டின் மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது. எழுதுபவர்கள், பேசுபவர்கள் கொலை செய்யப்படுகின்றனர். கருத்துரிமை மறுக்கப்படுகிறது. ஆகவே இந்த நாடாளுமன்ற தேர்தல் மிக முக்கியமானது. மீண்டும் மோடி வெற்றிபெற்றால் மோடி இருப்பார். ஆனால் இந்தியா இருக்காது. ஆகவே இந்திய நாட்டை காப்பாற்ற மோடியை வீழ்த்த வேண்டும். நமது பண்பாட்டை பாதுகாக்க வேண்டும். தமிழகம், புதுச்சேரியின் 40 நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக அணி வெல்லும். இதேபோல் தமிழகத்தில் நடைபெறுகிற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று உறுதியான ஆட்சி மாற்றம் ஏற்படும். அத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை கூட்டணி கட்சியினர் தீவிரமான களப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார். முன்னதாக, இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் திமுக சொத்து பாதுகாப்பு குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர்.நா.பழனிச்சாமி, திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினர் சந்திரன் மற்றும் சி.என்.ராஜன், தளபதி முருகேசன், கபிலன், காங்கிரஸ் கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் வி.எம்.சி.மனோகரன், தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுசாமி, மதிமுக கருணாநிதி, ஆனந்தன், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டசெயற்குழு உறுப்பினர் ஆர்.வேலுசாமி, சூலூர் தாலுகா செயலாளர் ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மௌனசாமி, வசந்தகுமார், பி.எஸ்.ராமசாமி, கொமதேகவின் கணேசன், வி.சி.கட்சியின் ஜெகதீசன், முஸ்லிம் லீக் கட்சியின் இமான் சமது, மனிதநேய மக்கள் கட்சியின் நிஜாம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்றனர். நிறைவாக, கோவை தொகுதி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் ஏற்புரையாற்றினார்.

;