tamilnadu

img

புதைந்தே கிடக்கும் தமிழர் நாகரீகம்

உலகில் இந்தியாவிற்கு என்று தனி இடமுண்டு. இந்தியாவில் தமிழகத்திற்கு என தனி இடமுண்டு. இந்தியாவின் தொன்மை தமிழகம் தான். மத்திய அரசின் தொல்லியல் துறையாகட்டும், தமிழகத்தின் தொல்லியல் துறையாகட்டும் புதைந்து கிடக்கும் தமிழர் நாகரீகத்தை வெளிக்கொணர மறுக்கின்றன. உலகின் மிக பழமையான நாகரீகங்களாக மொசபடோமியா, சீன நாகரீகங்களையொத்த நாகரீகமாக கருதப்படுவது சிந்து சமவெளி நாகரீகமாகும். அதனை அடுத்து ஹரப்பா நாகரீகமும் தான். இந்த இரண்டு நாகரீகமும் திராவிட நாகரீகமாக அல்லது தமிழர் நாகரீகமாக தொல்லியல் ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. சிந்து சமவெளிநாகரீகம் கி.மு. 6 ஆயிரம் ஆண்டளவில் இங்கு மக்கள் குடியேறி வசிததுள்ளனர். கி.மு. நான்காயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்து சமவெளி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட ஒரு கற்கோடாரி மயிலாடுதுறையில் 2007ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. ; சிந்து சமவெளி மக்களும் தமிழர்களும் ஒரே மொழி அதாவது தமிழ் மொழி பேசக்கூடியவர்களாக இருந்திருக்கலாம் என்று காலஞ்சென்ற தொல்லியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் கருத்து தெரிவித்திருந்தார். காவிரி கழிமுகப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மற்றும் முதுமக்கள் தாழிகள் அதில் உள்ள குறியீடுகள் சிந்துசமவெளி நாகரீக பொருட்களையொத்ததாக உள்ளது. 

சுமேரிய நாகரீகம் 

நதிக்கரை நாகரீகங்களாக யூப்ரடிஸ் டைகரீஸ் நதிக்கரையில் வாழ்ந்த ஈராக் நாட்டு மக்களின் நாகரீகம் மெசபடோமியா மற்றும் சுமேரிய நாகரீகங்களாககும். கி.மு. 3500 முதல் 1600 ஆண்டு காலக்கட்டத்தை சேர்ந்தவை மெசபடோமியா நாகரீகம். நைல் நதி நாகரீகமாக எகிப்து நாகரீகத்தை சொல்லலாம். கி.மு. 3100 முதல் 1070 வரையிலானது நைல்நதி நாகரீகம். பாகிஸ்தானில் உள்ள சிந்து நதி கலாச்சாரமாகும் சிந்துவெளிநாகரீகம். சீன நாகரீகம் மஞ்சளாறு மற்றும் யாங்சி பள்ளத்தாக்கில் உருவான நாகரீகமாகும். சுமார் 5ஆயிரம் ஆண்டுகள் பழமையானது சீன நாகரீகம். மலேசிய பல்கலைக்கழத்தின் பேராசிரியர் லோகநாதன் சுமேரிய நாகரீகம் தமிழர் நாகரீகம் என்றும் அதற்கான சான்றுகளை எடுத்து உரைக்கிறார். ஆரியர்கள் கைபர் போலன் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள். அவர்கள் பேசிய சமஸ்கிருத மொழி ஜெர்மன் மற்றும் லத்தீன் மொழிகளோடு தொடர்பு உடையதாக கூறப்படுகிறது. ஆனால் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம். கன்னடம், துளுவம் ஆகிய மொழிகள் சுமேரிய மொழியோடு தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய அரசு தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணர மறுக்கிற போது, தமிழகத்தில் உள்ள அரசு தமிழர்களின் பண்பாட்டையும், நாகரீகத்தையும் வெளிக்கொணர வேண்டும். அத்தகைய திசைவழியை அதன் வழித்தடத்தை நாம் அகழ்வாய் வின் மூலமாகவே கண்டறிய முடியும். ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டம் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 24 கி.மீ தூரத்தில் உள்ளது ஆதிச்சநல்லூர் கிராமம். கி.மு.1600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் ஆதி தொல்லியல் களமாக விளங்குவதாக கூறப்படுகிறது. 

இங்கு கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் அதில் கிடைத்த இரண்டு பொருட்களை கதிரியக்க கரிம காலக்கணிப்பின் படி ஒரு பொருள் கி.மு. 905, மற்றொன்று கி.மு. 791 ஆண்டு காலக்கட்டத்தை சேர்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது. உலகில் பல முறை அகழ்வாய்வு செய்யப்பட்ட நகரங்களுள் ஒன்று ஆதிச்சநல்லூர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 2004ம் ஆண்டு இங்கு 3.800 ஆண்டுகளுக்கு முந்தைய மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தாமிரபரணி ஆற்றின் நாகரீகமாக ஆதிச்சநல்லூரை சொல்லலாம். எனவே பண்டை தமிழர் நாகரீகத்தின் தொட்டிலாக ஆதிச்சநல்லூரை நாம் பெருமையுடன் இன்றும் நினைவுகூர்கிறோம். கீழடி இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் உலகின் மூத்தகுடியாக தமிழர் களை அறிமுகம் செய்தது. வைகை நதி நாகரீகமாக கீழடி சொல்லப்படுகிறது. கீழடி பண்டைய கால மதுரை மாநகரம் தான் என்றும் சொல்லப்படுகிறது. மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், பரிபாடல், பட்டினப்பாலையில் குறிப்பிடும் பொருட்கள் இங்கு கண்டெடுக் கப்பட்டு நமது சங்க இலக்கியத்திற்கு வலுசேர்த்ததாக இந்த கீழடி அமைந்துள்ளது. மோடி அரசின் நயவஞ்சகத்தால் இந்த கீழடியை ஆய்வு செய்த அரசின் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத்தை முழுமையாக ஆய்வு செய்யவிடாமல் அசாமுக்கு பணியிடமாறுதல் செய்ததோடு கீழடி ஆய்வுக்கு மூடுவிழா செய்தது மோடி அரசு. இந்த கீழடியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருள் கூட மத அடையாளங்கள் இல்லாத பொருட்களாக இருந்ததால் ஆதி தமிழன் மதநம்பிக்கையற்றவனாக இருந்தாக அந்த ஆய்வுகள் திடமாக கூறுகின்றன. ஆதிச்ச நல்லூரில் கிடைத்த பொருட்களிலும் ஏதாவது இந்து மதத்தின் அடையாளம் இருக்கிறதா? என்று இந்துத்துவா வாதிகளின் குறுக்கு புத்தி முத்திரை குத்த பார்த்தது. ஒரு முதுமக்கள் தாழியில் உள்ள எழுத்துக்கீறல்களை ஆய்வு செய்த நடன காசிநாதன் என்பவர் கறிஅரவனாதன் என்று எழுதியிருப்பதாகவும், அதன் அர்த்தம் நச்சுடைய பாம்பை மாலையாக அணிந்த சிவன் என்ற பொருள் உள்ளதாக தெரிவித்தார். அதே தாழியை சத்தியமூர்த்தி என்பவர் ஆய்வு செய்து கதிஅரவனாதன் என்று எழுதியிருப்பதாகவும். அதன் அர்த்தம் கதிரவன் மகன் ஆதன் என்று மறுத்து உரைத்ததால் இந்துத் துவா வாதிகளிடமிருந்து ஆதிச்சநல்லூர் தப்பியது. 

அழகன்குளம்

கீழடியைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே அழகன்குளத்தில் அகழ்வாய்வில் 2016ம் ஆண்டு புதிய தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. 1980களில் இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் பாண்டிய மன்னர்களுக்கும் ரோமானியர்களுக்கும் இடையிலான உறவுகளை சொல்லும் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கி.மு. 375ம் ஆண்டு இரண்டாம் வாலண்டைன் காலத்;து வெற்றிக்கான தேவதை பொறித்த நாணயங்கள் கிடைத்தன. மத்திய தரைக்கடலையொட்டிய மண்டைஓடுகளும், மண்பாண்ட ஓடுகளும் கிடைத்துள்ளன. கி.மு.முதல் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிரம்மி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சிவப்பு நிற மண்பாண்ட ஓடுகள் கிடைத்துள்ளன. குடியம் குகை சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது குடியம் என்ற கிராமம். ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதன் வாழ்ந்த குகை கண்டறியடிப்பட்டுள்ளது. இந்திய தொல்லியலின் தந்தை எனக் கருதப்படுகிற ராபர்ட் புருஸ் பூட் என்பவரால் இந்த குகை கண்டறியப்பட்டு 1962 – 64ம் ஆண்டுகளில் அகழ்வாய்வு செய்யப்பட்டது. தமிழகமே ஒரு தொன்மை நாகரீகத்தின் தொட்டிலாக உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அகழ்வாய்வு மேற்கொண்டால் நமது தமிழர் பண்பாட்டை முழுமையாக வெளிக்கொண்டு வர முடியும், இப்படிப்பட்ட சூழலில் தான் பழனியில் ரவிமங்கலத்தில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த சின்னங்கள் கிடைத்துள்ளன. பழனியிலிருந்து 12 கி.மீ தூரத்தில் உள்ளது ரவிமங்கலம்.

இந்த ரவிமங்கலம் குறித்து பிரபல தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி கூறும் போது, கி.மு 10ம் நூற்றாண்டு முதல் கி.மு. 20 ம் நூற்றாண்டைச் சேர்ந்த பொருட்கள் இங்கு புதைந்துள்ளது. மதுரையிலிருந்து பாரசீகம், கிரேக்கம், ரோம் ஆகிய பேரரசுகளை இணைக்கும் பெருவழிப்பாதையாக கொழுமம் பெருவழிப்பாதையின் தெற்கு எல்லையில் இந்த சின்னங்கள் உள்ளன. 300 ஏக்கர் அளவிற்கு விரிந்து பரந்த இந்த நிலத்தில் 100 ஏக்கரே உள்ளது. இதில் தற்போது 200 சின்னங்களே உள்ளன. ஏராளமான கல்பதுக்கை உள்ளன. புதையல் வேட்டைக்காரர்கள் இந்த இடத்தை வந்து தோண்டுவதால் ஏராளமான தொல் பொருட்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. சங்க காலத்தைச் சேர்ந்த 3 இரும்பு உருக்காலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார் நாராயணமூர்த்தி. இரும்பு உருக்காலைக்கு தேவையான அச்சுஉலைகள், சுண்ணாம்புகட்டிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த 2 புதைகுழிகள் உள்ளன இந்த ரவிமங்கலம் குறித்து எனது தந்தை சிறு வயது முதலே எனக்கு பல விசயங்களை எடுத்துரைத்துள்ளார். ஆதிச்ச நல்லூரில் தற்போதைய தகவல்படி அங்கு கி.மு. 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த தடயங்கள் கிடைத்துள்ளன. ஆனால் ரவிமங்கலம் அதற்கு முந்தைய கலாச்சாரம் பண்பாட்டை உடைய பகுதியாக கருதுகிறேன். கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த மொழியாக சமஸ்கிருதம் கருதப்படுகிறது. ஆனால் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் அதற்கு முந்தைய காலக்கட்டம் என்பதால் உலக அளவில் தமிழ்மொழி மூத்த மொழியாகக் கருதப்படுகிறது. 

ரவிமங்கலம்

ஆதிச்ச நல்லூர் பண்பாட்டைக்காட்டிலும் ரவிமங்கலம் முந்தையதாக நான் கருதுகிறேன். இந்த ரவிமங்கலத்தை ஆய்வு செய்தால் தமிழகத்தின் தொன்மை வரலாற்றுக்கு பேரொளி பாய்ச்சுவதாக இருக்கும். தொல் தமிழனின் வரலாறு இங்கு புதைந்து கிடக்கிறது. அதை தோண்டி எடுத்து இந்த உலகுக்கு எடுத்துச் சொல்வது அரசின் கடமையாக உள்ளது. இதை அறிவியல் முறைப்படி ஆராய்ந்தால் இன்னும் ஏராளமான தொல்லியல் பொருட்கள் கிடைக்கும் என்று நாராயண மூர்த்தி நம்மிடம் தெரிவித்தார். இந்த ரவிமங்கலம் தொடர்பாக நாராயணமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி கிருபாகரன் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். மத்திய அகழ்வாராய்ச்சி துறையும், மாநில தொல்லியல் துறையும் இங்கு அகழ்வாராய்ச்சி செய்ய அங்கு ஏதுமில்லை என்று மறுத்துவிட்டன. ஆனால் நீதிபதி கிருபாகரன் ஜியோ இன்பர்மேசன் சிஸ்டத்தின்படி அதாவது ஜி.ஐ.எஸ்.படி சாட்டிலைட் மூலம் ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். தொல்லியல் ஆய்வில் இந்த முறை உலகிலேயே முதல்முதலாக பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக தமிழக தொல்லியல் துறையாகட்டும், மத்திய அகழ்வாராய்ச்சி அமைப்பாகட்டும். அங்கு பணியாற்றும் அதிகாரிகளுக்கு தொல்லியல் குறித்தான விழிப்புணர்வு இல்லை. சோம்பேறித்தனம் குடிகொண்ட துறையாகவே உள்ளது. போதிய பணியாளர்கள் இல்லை. ஏதோ பெயரளவிற்கு செயல்படுகிற ஒரு துறையாகவே உள்ளது. 

ஓமோ எரக்டசு

ஜெர்மனியில் வாழ்ந்த நியாண்டர்தால் மனித இனம் தான் முதன் முதலில் நெருப்பை பயன்படுத்திய மனித இனமாக கருதப்படுகிறது. குகையில் வாழ்ந்தான், தோல் ஆடை அணிந்தான். இது 25 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இனமாக கருதப்படுகிறது. இந்த நியாண்டர்தால் மனித இனத்திற்கு முந்தையதாக கருதப்படுவது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஓமோ எரக்டசு, ஆசியாவைச் சேர்ந்த ஓமோ எரக்கடசு மனித இனங்களும் ஆகும். ஆப்பிரிக்காவில் தோன்றியதாக கருதப்படுகிற ஓமோ எரக்டசு இனம் இந்தியா இலங்கை, சீனா, ஜார்ஜியா, இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் பரந்து குடியேறியதாக கூறப்படுகிறது. எனவே இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் தமிழகத்தில் பல இடங்களில் ஓமோ எரக்டசு இனம் வாழ்ந்த அடையாளங்களை நமது தொல்லியல் துறை கண்டறிய வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். 

தொன்ம புதையல்கள் நிறைந்த திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்டத்தில் காணும் இடமெல்லாம் தொல்லியல் எச்சங்கள் உள்ளன. ஆனால் தமிழக தொல்லியல் துறையோ, மத்திய அகழ்வாராய்ச்சி நிறுவனமோ எந்த பணியையும் இங்கு மேற்கொள்ளவில்லை. திண்டுக்கல் அருகேயுள்ள பாடியூரில் சங்க காலக்கோட்டை உள்ளது. அது குறித்து அகழ்வாய்வு மேற்கொள்ள நாராயண மூர்த்தி அரசுக்கு கடிதம் எழுதி, முடியாது என்று மறுத்துள்ளது அரசு. இதனையடுத்து தான் ரவிமங்கலம் தொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தை நாடினார். ஆதிமனிதனின் குகை ஓவியங்கள் சிறுமலை, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் ஏராளமாக கிடைக்கின்றன. பொதுவாக பாறை ஓவியங்கள், குகை ஓவியங்கள் 40 ஆயிரம் ஆண்டுகள் பழைமையானதாக இருக்கும். சிறுமலை பாறை ஓவியங்கள் 1984ம் ஆண்டு கண்டறியப்பட்டன. இது கி.மு. 500க்கு முந்தையதாக கருதப்படுகிறது. இதே போல் கோம்பைக்காடு, பாப்பம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பாறை ஓவியங்கள் உள்ளன. 

தாண்டிக்குடி மற்றும் பண்ணைக்காடு பகுதியில் ஏராளமான மெகா லித்திக் சாலத்தைச் சேர்ந்த கல்வட்டங்கள், கல் ;திட்டைகள். பல இடங்களில் நடுகற்கள் போன்ற சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பழனி பகுதியில் ஆய் வேளிர் மன்னர்களின் கோட்டை, கணக்கன்பட்டியில் மலைக்கோவில், உள்ளன. அதிக அளவில் சண்முக நதியின் கரையில் மூதேவி எனப்படுகிற மூத்ததேவி அல்லது ஜேஸ்டா தேவியின் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொடைக்கானல் பகுதியில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய டால்மென்கள் எனப்படுகிற இறந்தவர்களின் நினைவாக வைக்கப்படும் கல்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. செண்பகனூரிலும், பெருமாள் மலையிலும் இது போன்ற ஏராளமான கல்திட்டைகளும், கல்வட்டங்களும் உள்ளன. பழனி அருகேயுள்ள ஐவர் மலையில் சமணப்பள்ளி செயல்பட்டுள்ளது. இங்குள்ள பாறைகளில் வட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மலைக்கோட்டை, அணைப்பட்டி மலை உள்ளிட்ட பல பகுதிகளிலும் சமணப்படுகைகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் எதையும் தமிழக அரசும், மத்திய அரசுகளும் பாதுகாக்க முன்வரவில்லை என்பது மட்டுமல்ல; திண்டுக்கல் மாவட்டத்தில் தொன்மம் வெளிக்கொணர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே வேதனையான ஒன்றாக உள்ளது என்று நாராயணமூர்த்தி தெரிவிக்கிறார். பழனி மலை அடிவாரத்தில் தொல்லியல் துறைக்கு சொந்தமான ஒரு அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை சுற்றி பார்க்க பழனி பகுதியில் உள்ள பள்ளிக்குழந்தைகளை எத்தனை ஆசிரியர்கள் அழைத்துச் சென்றார்கள் என்பது கேள்விக்குறியாகும். இதே போல இன்னொரு அருங்காட்சியகம் மாவட்டத்தின் தலைநகரான திண்டுக்கல்லில் வைக்கப்பட வேண்டும். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் வைக்கப்பட வேண்டும். தொல்லியல் துறைக்கான அலுவலகமும் இங்கு திறக்கப்பட வேண்டும். அப்போது தான் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள தொன்மை சின்னங்கள் பாதுகாக்கப்படும். மேலும் பல ஆய்வுகள் நடைபெற வாய்ப்புள்ளது. எடப்பாடி அரசாங்கம் போன்ற ஏனோதானோ அரசாங்கம் இதனை செய்யுமா என்பது தான் நம் முன் உள்ள கேள்வி.





;