tamilnadu

சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை, ஜன.30- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கு ஆசிரியர்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பிப்.1 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி தெரிவித்துள்ளதாவது, கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,மூலமாக தனியார் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியர்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமானது பிப்.1 ஆம் தேதியன்று காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாம் ஆசிரியர்களுக்காக மட்டும் சிறப்பு நிகழ்வாக நடைபெற உள்ளதால் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் என ஆண், பெண் இருபாலரும் தங்களது கல்விச்சான்றுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. பல முன்னணி தனியார் பள்ளிகள் முகாமில் கலந்து கொண்டு பல்வேறு ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை அப்போதே வழங்கப்படும். மேலும் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்நிலையில் முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் பள்ளிகள் மற்றும் வேலைநாடும் மனுதாரர்கள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். எனவே, ஆசிரியர்கள் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

;