tamilnadu

வாகன நிறுத்த இடநெருக்கடிக்கு தீர்வுகாண

மாவட்ட நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

உதகை, மே 29-வாகன நிறுத்த இடநெருக்கடிக்கு தீர்வுகாண உதகை ரேஸ்கோர்ஸ் மைதானத்தை கையகப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு கூட்டம் உதகையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜே.ஆல்தொரை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர்கள் டி.ரவீந்திரன், ஆர்.பத்ரி, மாவட்ட செயலாளர் வி.ஏ.பாஸ்கரன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும், மாவட்டக்குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு, ஒவ்வொரு ஆண்டும் உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் வருகையாலும், உள்ளூரில் வாகனங்கள் அதிகரிப்பதாலும், உதகை நகரில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி உருவாகி வருகிறது. இந்த ஆண்டுஉதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த போதுமான இடம் இல்லாததால், சுற்றுலா தலங்களை பார்காமலேயே திரும்பி செல்லும் நிலையே இருந்தது. ஆகவே, சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏதுவாக உதகையில் உரிய வாகன நிறுத்த ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விரைந்து ஏற்படுத்திட வேண்டும். இதற்காக உதகை நகரின் மையப்பகுதியில் சுமார் 55 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் உதகை ரேஸ்கோர்ஸ் மைதானத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கையகப்படுத்த வேண்டும். அரசுக்கு சொந்தமான இவ்விடத்தை நீண்டகால குத்தகைக்கு எடுத்துள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப், இந்த இடத்திற்கான குத்தகை தொகையினையும் பல ஆண்டுகாலமாக செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளது. மேலும் கோடைக்காலத்தில் ஒரு சில நாட்களில் மட்டுமே இங்கு குதிரை பந்தயம் நடைபெறுகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம் தற்போதைய நிலையையும், தேவையையும் உணர்ந்து உதகை ரேஸ்கோர்ஸ் மைதானத்தை கையப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்டக்குழு கேட்டுக்கொள்கிறது. இந்த மைதானத்தை கையகப்படுத்தி வாகன நிறுத்தமாக மாற்றினால் உதகை நகரின் போக்குவரத்தின் நெரிசலுக்கு பெருமளவில் தீர்வு கிடைத்திடும் என்பதால், அதற்காக அனைத்து நிர்வாக ரீதியான மற்றும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இக்கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தொடர் இயக்கங்களை நடத்துவது எனவும், இந்த இயக்கங்களுக்கு பொதுமக்களும் பேராதரவு தர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.