tamilnadu

ஈரோடு மாட்டு சந்தையில் ரூ.2.5 கோடிக்கு மாடுகள் விற்பனை

ஈரோடு, ஏப். 25-ஈரோட்டில் வியாழக்கிழமை கூடிய மாட்டுச்சந்தையில் பசு,எருமை கறவை மாடுகள், வளர்ப்புக்கன்றுக்குட்டிகள் ஆகியவை சுமார்ரூ.2.5 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.ஈரோடு கருங்கல்பாளையத்தில் காவிரிக் கரை சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. அதில், புதன்கிழமை வளர்ப்பு மாடுகளும், வியாழக்கிழமை கறவைப் பசு மாடுகளும், எருமை மாடுகள், வளர்ப்புக் கன்றுக்குட்டிகளும் விற்பனை செய்யப்படுகின்றன. தென்னிந்தியாவின் மிகப்பெரிய இச்சந்தைக்கு, ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், சேலம், திருப்பூர், திண்டுக்கல், கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வளர்ப்பதற்காகவும், விற்பனைக்காகவும் வாங்குவதற்கு ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இங்கு கொண்டு வரப்படும் மாடுகள் தரமாக உள்ள காரணத்தால் அவற்றை கொள்முதல் செய்ய கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கோவா ஆகிய மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் வருகின்றனர். வாரந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், வியாழனன்று கூடிய சந்தையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வியாபாரிகள் குறைந்தே காணப்பட்டனர். இதனால், அனைத்து மாநில வியாபாரிகளும், மாடுகள் வரத்தும் சென்ற வாரத்தைவிட குறைவாகவே காணப்பட்டது. விவசாயிகள் வருகையும் குறைந்தே காணப்பட்டது.இதுகுறித்து, மாட்டுச்சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறுகையில், தென் மாநிலங்களைச் சார்ந்த வியாபாரிகளில் கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைத்தவிர பிற மாநில வியாபாரிகள், விவசாயிகள் வழக்கம் போல வந்திருந்தனர். அதனால், விற்பனை விலை குறைந்தே காணப்பட்டது. இந்த வாரச் சந்தையில் 400 பசு மாடுகள், 300 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், பசுமாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.34 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.18ஆயிரம் முதல் ரூ.36 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியுள்ளது. மொத்தத்தில் சுமார் ரூ.2.5 கோடிக்குமாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

;