tamilnadu

img

தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் பள்ளிக்கூடம் இடிப்பு அகற்றப்படாத கட்டிட இடிபாடுகளால் மாணவர்கள் அச்சம்

பொள்ளாச்சி, ஏப். 30-கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணியின் போது, இடிக்கப்பட்ட அரசு பள்ளி கட்டிட இடிபாடுகள்அகற்றப்படாமல் இருப்பது மாணவர்களின் உயிருக்கே பெரும்அச்சுறுத்தலாக உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த தொப்பம்பட்டி கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நடைபெறுகிறது. இதனைச்சுற்றியுள்ள சில குக்கிராமங்களிலுள்ள ஏழை, எளிய மாணவர்கள் இதன்மூலம் ஆரம்பக் கல்வி பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடத்தின் பாதியளவு தேசியநெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டடத்தின் மறுபாதியில் தொடக்க கல்வி வகுப்புகளான 1 மற்றும் 2ம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிட கழிவுகளை அப்புறப்படுத்தாமல் உள்ளது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய நிலையில் கம்பிகள் தொங்கிக் கொண்டு உள்ளன. இதனை அகற்ற வேண்டும் என தொப்பம்பட்டி பொதுமக்கள் பல முறை பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என வேதனையுடன் தெரிவித்தனர். மேலும் இடிக்கப்பட்ட பாதிக்கட்டிடம் இன்னும் அச்சுறுத்தலாகவே இருந்து வருவதாக மாணவர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர். 

முன்னாள் மாணவர்கள் கோரிக்கை

முன்னதாக, 2019- 2020 கல்வியாண்டிலாவது புதிய பள்ளிக்கட்டிடம் அமைத்துதர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனிடம் முன்னாள் மாணவர்கள்மனு அளித்துள்ளனர். இதேபோல் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரனிடமும் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் தற்போது வடி இப்பள்ளிக்கு ஒரு விடிவும் கிடைக்கவில்லை என முன்னாள் மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

;