tamilnadu

கோவையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் அரசு நிதியுதவி

கோவை, ஏப். 24-கோவை பன்னிமடை அருகே பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது. கோவை மாவட்டம், பன்னிமடை பகுதியில் கடந்த மாதம் 25 ஆம் தேதி 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டதில், சதீஷ் என்பவரை காவல்துறையினர் கைதுசெய்தனர். மேலும், சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்றும், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு உரிய நிவாரண உதவி வழங்கிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், ஜனநாயக மாதர் சங்க ம்உள்ளிட்ட பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த அறிக்கையில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதுடன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

;