tamilnadu

img

ஜனநாயக கடமையாற்ற சொந்த ஊர் திரும்பிய தருமபுரி மாவட்ட மக்கள்

தருமபுரி, ஏப்.18-பிழைப்பைத்தேடி வெளியூர் சென்ற தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தருமபுரி, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, அரூர்(தனி) ஆகிய சட்டமன்ற தொகுதிகளும், சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற தொகுதியும் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளன. தருமபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்.18 (வியாழக்கிழமை) ஆம் தேதியன்று நடைபெற்றது.தருமபுரி மாவட்டம், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய இம்மாவட்டத்தில் தொழிற்சாலைகள் இல்லை, தொடர்ந்துபருவமழை பொய்த்துப்போனதால் விவசாயமும் இல்லை. இதனால் வேலைவாய்ப்பு தேடி 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பெங்களூர், கோவை உள்ளிட்ட இடங்களுக்கு வாழ்வாதாரத்தை தேடி குடிபெயர்ந்துள்ளனர். தற்போது நாடாளுமன்ற தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் வாக்களிக்க தருமபுரி மாவட்டத்தில் உள்ள சொந்த கிராமத்துக்கு ரயில், பேருந்துகள் மூலம் வந்தனர்.


இந்நிலையில் புதனன்று (ஏப்.17) இரவு தருமபுரி பேருந்து நிலையத்தில் வெளியூர் வேலைக்குச்சென்ற ஏராளமான மக்கள் வந்திருந்தனர். இரவுநேரங்களில் வந்தவர்கள் சொந்த கிராமத்துக்கு பேருந்து இல்லாமல் தவித்தனர்.மேலும் தேர்தல் நடக்கும் நாளானஏப்.18 ஆம் தேதியன்று காலை பெங்களூரில் ரயில் மூலம் தருமபுரி ரயில் நிலையத்தில் ஏராளமான மக்கள் வந்திறங்கினர். பின்னர் சொந்த கிராமத்துக்கு வாக்களிக்க சென்றனர்.பெங்களூரில் இருந்து வந்த அம்மாசி (55) கூறுகையில், நான் கட்டுமான வேலைக்கு குடும்பத்துடன் சென்றேன். தேர்தலில் வாக்களிப்பதற்காக நான் காலையில் ரயிலில் இறங்கி என் ஊருக்கு செல்கிறேன் என தெரிவித்தார்.பெங்களூரில் இருந்த வந்த முத்து கூறுகையில், நான் பெங்களூரில் தள்ளுவண்டியில் பழக்கடை வியாபாரம் செய்து வருகிறேன். வாக்களிக்க வேண்டும் என்பதால் நான் குடும்பத்துடன் சொந்த ஊரான மலைக்காரன்கொட்டாய்க்கு சென்று வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார்.


செக்காரப்பட்டி மாதுகூறுகையில், எனக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. மழை இல்லாததால் விவசாயம் செய்ய முடியவில்லை. கடந்த 5 ஆண்டு காலமாக பெங்களூரில் கம்பிகட்டும் வேலை செய்துவருகிறேன். தற்போது தேர்தலுக்காக வந்துள்ளதாக தெரிவித்தார்.இலளிகம் கிராமத்தைச்சேர்ந்த பொறியாளர் இளைஞரான இளவரசன் கூறுகையில், நான் பெங்களூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிவதாகவும் தேர்தலில் வாக்களிக்க வந்ததாக தெரிவித்தார்.


தருமபுரி நகரம் அவ்வையார் அரசு பள்ளியில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக்க வந்திருந்த பெண்கள்.

;