tamilnadu

img

இந்துத்துவா ஊடுருவலை அகற்ற வேண்டும் மேதின பொதுக்கூட்டத்தில் கே.தங்கவேல் பேச்சு

கோவை, மே 2- மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஆர்எஸ்எஸ் ஊடுருவியுள்ளது. இதனை கண்டறிந்து அகற்றுவது இடதுசாரிகளின் தலையாய பணி என மேதின பொதுக்கூட்டத்தில் கே.தங்கவேல் குறிப்பிட்டார்.133 ஆவது மே தினத்தையொட்டி சிஐடியு மற்றும் ஏஐடியுசி சார்பில் புதனன்று கோவை சூலூரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோவை திருச்சி சாலை பெட்ரோல் நிலையம் முன்பு இருந்து துவங்கிய பேரணி சூலூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அண்ணா சீரணிகலையரங்கத்தில் நிறைவுற்றது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு ஏஐடியுசி மாவட்ட தலைவர் சி.தங்கவேல் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணை தலைவர் எஸ்.ஆறுமுகம் வரவேற்றார். இக்கூட்டத்தில் ஏஐடியுசி தமிழ்நாடு மாநில தலைவர் கே.சுப்பராயன், சிபிஎம் மாநிலசெயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் ஆகியோர் மேதின சிறப்புரையாற்றினர். இதில் கே.தங்கவேல் பேசுகையில், சமூக சீரழிவுக்கு பிரதான காரணம் வேலையின்மையே ஆகும். மோடி ஆட்சியில் இதற்கு தீர்வு காணப்படவில்லை. விவசாயிகளின் பிரச்சனை தீர்க்கப்படாமல், விளைநிலங்கள் கார்பரேட்டுகளின் பயன்பாட்டிற்காக பல வழிகளில் பறிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் விலைவாசி குறையும் என்றார்கள். ஆனால் குறையவில்லை. மாறாககோவை, திருப்பூர் மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள தொழில்கள் அனைத்தும் பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. மருந்து வாங்கினாலும், ஹோட்டலில் சாப்பிடுவதற்கும் வரிகட்ட வேண்டிய நிலையை மோடியின் ஆட்சி சுமத்தியுள்ளது.

அரசியல் ஆதாயத்திற்காக பிளவுவாத அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. இந்திய நாட்டின் முக்கியமான அனைத்து துறைகளிலும் ஆர்எஸ்எஸ் இந்துத்துவ சிந்தனையாளர்கள் நுழைந்துள்ளனர். தற்போது நடைபெறும் தேர்தலில் ஆர்எஸ்எஸ்-சின் நேரடி ஊழியர்கள் 84 பேரை பாஜக வேட்பாளர்களாக நியமித்துள்ளது. இவர்கள் வெற்றிபெற்றால் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும். ஆனால், நிச்சயம் மோடி அரசு மே23க்குப் பிறகு தூக்கி எறியப்படும். அதேநேரம், தேர்தல் முடிந்துவிட்டது இனி எல்லாம் சரியாகி விடும் என இடதுசாரிகள் சும்மா இருக்க முடியாது. இந்திய அரசின் அனைத்து துறைகளிலும் ஊடுருவியுள்ள ஆர்எஸ்எஸ், இந்துத்துவ சக்திகளை கண்டறிந்து அகற்றிடும் தலையாய பணி உள்ளது. மேலும், இந்திய நாட்டில் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் பொதுத்துறையை பாதுகாக்க அதற்கான ஒன்றுபட்ட போராட்டத்தை தொழிற்சங்கங்கள் மேற்கொள்வதே மேதினத்தின் சூளுரையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.பொய்யர் மோடிஏஐடியுசி மாநில தலைவர் கே.சுப்பராயன் பேசுகையில், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த ஒரு தலைவர் பகிரங்கமாக டிவி பேட்டியில், கேரள முதல்வர் பினராய் விஜயன் தலையை கொண்டுவந்தால் ஒருகோடி ரூபாய் பரிசு என்று அறிவிக்கிறார். இன்னொருவர் சொல்லுகிறார் மம்தாவின் முடியை பிடித்து இழுத்து கழுத்தை அறுத்துகொண்டு வந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு என்று அறிவிக்கிறார்.

இன்னொருவர் சொல்லுகிறார் திரைப்பட நடிகை தீபிகா படுகோனேவின் மூக்கை அறுத்துக் கொண்டு வந்தால் 50 லட்சரூபாய் பரிசு என்று அறிவிக்கிறார். இத்தகைய கொலைவெறி அறிக்கைகளை வெளியிடுகிறவர்கள் மீது மோடி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, கண்டனத்தை கூட பதிவு செய்யவில்லை. எனவே மோடி எப்படிப்பட்ட பேராபத்து மிக்க நபர் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். மேலே உயர் பதவியிலே இருப்பதனால் மட்டுமே ஒருவன் மேன்மகன் ஆகிவிட முடியாது. காற்றடித்தால் குப்பைகள் கூட கோபுரத்திற்கு சென்றுவிடும். மீண்டும் ஒரு காற்றடித்தால் அந்த குப்பையை மீண்டும் தெருவுக்கே வந்துவிடும். அதேபோல் இந்த தேர்தல் தீர்ப்பு பலரை தெருவுக்கு அனுப்பிவிடும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்மநாபன், செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஆர்.வேலுசாமி, சிபிஎம் சூலூர் தாலுகா செயலாளர் எம்.ஆறுமுகம், எல்ஐசி ஊழியர் சங்கத்தின் துளசிதரன் மற்றும் இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மௌனசாமி, வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மீனாட்சி சுப்பிரமணியம், பி.எஸ்.ராமசாமி, திராவிட முன்னேற்ற கழக தெற்கு ஒன்றிய செயலாளர் தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக நடைபெற்ற பேரணியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, சிபிஐ மாவட்ட செயலாளர் வி.எஸ்.சுந்தரம் உள்ளிட்ட சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கத்தை சார்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.

;