tamilnadu

img

ஹர்னியா குடல் பிதுக்கம்(Hernia)

குடல் பிதுக்கம் என்னும் ஹர்னியா (ழநசnயை) பல்வேறு காரணங்களினால், மனிதனுக்கும் எக்காலத்திலும் எந்த வயதிலும் வரக்கூடிய ஒரு நோய். மருத்துவத் தந்தை ஹிப்பாரடிஸ் இந்நோயைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் என்று அறியும் போது இந்நோய் மிக நீண்ட காலமாகவே மனித குலத்தை வாட்டி வருகிறது என்பது புலனாகும்.வயிற்றின் உட்புறத்தில் ஜவ்வு போன்ற ஒரு தடுப்பு உறை உள்ளது. இது பிறவிலேயே வயிற்றில் வலுவற்ற இடங்களில் பிதுங்கி இருப்பதாலும், அல்லது பல்வேறு காரணங்களால் வயிற்றில் அழுத்தம் அதிகமாகி, வயிற்றின் உட்புறச் சவ்வுடன் குடல் பிதுக்கிக் கொண்டு வெளி வருவதாலும் உண்டாகிறது. இப்பிதுக்கம் வரக் காரணம் அதிகப்பளு தூக்குதல், காசம், கக்குவான் போன்ற நாட்பட்ட இருமல் வியாதிகள், மூத்திரக்குழாய் அடைப்பு, அடிக்கடி ஏற்படும் மலச்சிக்கல் போன்றவையாகும். மேலும், உடலில் கொழுப்புச் சத்து அதிகமாகிப் பருமனாக இருப்பவர்களுக்கும், அடிக்கடி பிரசவித்த பெண்களுக்கும் இந்நோய் வருவதுண்டு. இளம்பிள்ளைவாதம் என்பது கை கால்களைத் தாக்கும் என்பதை பொதுமக்கள் அறிந்திருப்பார்கள். அந்நோய் வயிற்றைத் தாக்கும் போது குடல் பிதுக்கம் ஏற்படலாம்.


இக்குடல் பிதுக்கம் வரக்கூடிய இடங்கள் அடிவயிறு, தொடையின் மேல்புறம், வயிற்றின் நடுப்பகுதி, தொப்புள், தொப்புளுக்கு மேல் அல்லது கீழ்ப்பகுதி போன்றவை இதில் அதிக அளவு, சுமார் 75 சதவீதம் குடல் பிதக்கம் வரும் பகுதி வயிற்றின் அடிப்பாகந்தான். அடிவயிற்றுக் குடல் பிதுக்கத்தில் வயிற்றைச் சுற்றியுள்ள சவ்வுடன் சிறு குடல், பெருங்குடல், சூர்ப்பை, குடல்வால், மூத்திரப் பை, பெருங்குடலுடன் இருக்கும் கொழுப்புத்திரை ஆகியவையும் பிதுங்கும்.மக்களிடம் அதிக அளவில் காணப்படும் குடல் பிதுக்கத்தில் ஒரு வகையான அடிவயிற்றுக் குடல் பிதுக்கம்: இக்குடல் பிதுக்கம் பெண்களைவிட ஆண்களுக்கே அதிகமாக வரும். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே குடல் இறக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு. முதலில் வயிற்றின் உட்புறச் சவ்வுடன் நீர் மட்டுமே பிதுங்கி இருக்கும். இந்நோய் ஆண்களுக்கு விரைப்பை வரை இறங்கி இரைப்பையையும் பெருக்க வைக்கும். இதுவே பெண்களுக்கு இருப்பின் பெண் மர்ம உறுப்புக்கு இரண்டு அங்குலத்திற்கு மேல் பெருத்துக் கட்டி போல் காணப்படும். இது படுத்தவுடன் வடியும் நடந்தால் பெருக்கும் தன்மையுடையது: இது ஒரு வகை. இக்குடல் பிதுக்கம் கூட இரவில் படுத்தவுடன் வயிற்றினுள் சென்று விடுவதால் விரைப்பை காலையில் பெருத்தும், இரவில் சிறுத்தும் காணப்படும். விரைப்பையில் குடல் இருக்கும்போது அதன் நெளிவைக் காணலாம். நாள்பட நாள்பட இக்குடல் ஏறி இறங்கும் தன்மை இழந்து விரைப்பையில் தங்கிவிடும்.மேலும் கீழே இறங்கிய குடல் ஏறாது கீழேயே தங்கிவிடச் செய்துவிடும். இது அபாயம் அற்றது. ஆனால், குடல் பிதுங்கிய இடத்தின் வாய்ப்பகுதியில் வயிற்றின் உட்புறச்சுவர் இறுக்கமாக இருந்துவிட்டால், குடல் ஏறி இறங்காது. கீழேயே நின்றுவிடும். அப்பொழுது வலி உண்டாகும். வாந்தி வர ஆரம்பிக்கும். மேலும் குடல் இயல்பான தன் அசையும் தன்மையையும் இழந்துவிடும். அப்பொழுது வயிறு வீங்கும். இவ்விறுக்கம் மேலும் அதிகமாகிப் போனால் குடலுக்கு வேண்டிய இரத்த ஓட்டம் தடைப்பட்டுப் பிதுங்கிய குடற்பகுதி அழுக நேரிடும். இந்நிலையில் வயிறு வீக்கம், சுரம், வயிற்றைத் தொட்டாலே வலி போன்றவை உண்டாகும். இந்நிலை வரை நோயாளி பொறுத்திருப்பது தானே தனக்கு மரணத்தைத் தேடிக் கொள்ளும் செயலாகும். ஆகவே நோயாளி தனக்குக் குடல் பிதுக்கம் என்று அறிந்தவுடன் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அறுவை மருத்துவரிடம் செல்ல வேண்டும். இந்நோய்க்கு ஒரே மருத்துவம் அறுவை சிகிச்சை தான். வேறு எம்முறையும் இந்நோய்க்குப் பூரண குணம் தராது என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த இடத்தில் நாம் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய செய்தி ஒன்றுண்டு. அது விரைப்பை வீக்கம் பொதுவாக இரண்டு காரணங்களினால் ஏற்படலாம் என்பதாகும். ஒன்று குடல் பிதுக்கம் இதை ஹர்னியா என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். மற்றொன்று விரைப்பை வீக்கம். இதை ஹட்ரோசில் என்று கூறுவார்கள். இவ்விரண்டிற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. குடல் பிதுக்கத்தை விரை வீக்கம் என்று எண்ணி அதைச் சரியாகப் பரிசோதனை செய்து கொள்ளாமல் சிலர் அறுவை சிகிச்சை அல்லது வீங்கிய இடத்தில் ஊசி போட்டுக் கொள்வது உண்டு.


குழந்தையாக இருந்தால் பிறந்த மூன்று மாதங்களுக்குப் பின்னர் தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடியும். பெரியவர்களாக இருப்பின் குடல் பிதுக்கம் என்று கண்டுபிடித்தவுடன், அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது. ஏனெனில் அறுவை சிகிச்சையைத் தவிர இந்நோயை மருந்து கொடுத்துக் குணப்படுத்த முடியாது. படுத்தால் வடிந்து, நடந்தால் பெருத்துவிடும் தன்மையுடைய இக்குடல் பிதுக்கத்தால் சில சமயம் குடல் ஏறி இறங்குவது நின்று, குடல் அடைப்பு ஏற்படும். இந்நிலையில், நோயாளி கட்டிலில் கால்புறத்தை உயர்த்தி வைத்துப் படுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் முழங்காலை மடக்கித் தொடையை உட்புறம் வைத்து மெதுவாகக் குடலைத் தன் கையாலேயே தள்ளிவிட வேண்டும். குடலைத் தள்ளும்பொழுத அதிக பலத்துடன் தள்ளக்கூடாது. அதிக பலத்துடன் குடலைத் தள்ளினால் குடல் தெரித்துப் போகவோ நசுங்கிப் போகவோ வாய்ப்புண்டு. நசுங்கிய குடல் வயிற்றுக்குள் சென்றால் அங்கு அழுகி உடலுக்குப் பெருந்தீங்கை உண்டு பண்ணும்.அடிவயிற்றுக் குடல் பிதுக்கத்தை தடுக்க இடுப்பில் வார் போட்டுக் கட்டிக் கொள்வது ஒரு முறை. இந்த வார் போட்டுக் கொள்பவர்கள், அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடியாத இருதய நோய் அல்லது நுரையீரலோடு தொடர்புடைய இருமல் நோய் உள்ளவர்களாகத்தான் இருப்பர். இவர்கள் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவசியம் இந்த வாரைப் போட்டுக் கொள்ள வேண்டும். வாரைப் போட்டுக் கொள்ளும் போது முழுக்குடலும் உள்ளே சென்று விட்டதைத் தீர்மானித்த பிறகு தான் போட்டுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வெளியே பிதுங்கி இருக்கும் குடலை வார் அழுத்தியும் அதன் காரணமாகக் குடல் அழுக நேரிடலாம்.அறுவை சிகிச்சையும், அதற்குக் கொடுக்கப்படும் மயக்க மருந்துகளும் முன்னேற்றம் அடையாத காலத்தில்தான் மருத்துவர்கள் இந்த இடுப்பு வாரை சிபாரிசு செய்தனர். தற்பொழுது இவ்விரண்டும் வியக்கத்தக் கஅளவு முன்னேற்றம் அடைந்து விட்டமையால் இடுப்பு வாரைப் பெரும்பாலும் சிபாரிசு செய்வதல்லை. ஏனெனில் வார் போட்ட பிறகு அறுவை சிகிச்சை செய்வது சிரமம். அதன் பலனும் குறைவு. வாரை உபயோகிக்காது ஆரம்ப காலத்திலேயே அறுவை சிகிச்சை கொள்பவர்களுக்கு இந்நோய் மீண்டும் வருவதில்லை. இந்நோயை முற்றவிட்டுப் பிதுக்கத்தில் அடைப்பு ஏற்பட்ட பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதில் அதிகப் பயன் இல்லை. ஆபத்தும் இதில் அதிகம்.


தொப்புளின் வழியே வரும் குடல்பிதுக்கம்


இது சிறுவர்களுக்கே வரும். பிறந்தவுடன் தொப்புள் கொடியில் புண் ஏற்படுவதால், இந்நோய் உண்டாகிறது. குழந்தை அழும்பொழுது இப்பிதுக்கம் பார்ப்பதற்குப் பெரிதாகத் தோன்றும். மூன்று வயதுவரை இக்குடல் பிதுக்கம் உள்ளே சென்றுவரும். பிறகுதான் இது பெரும்பாலும் குடல் அடைப்புக்கு ஏதுவாகிறது. ஆகவே குழந்தைக்கு இவ்வகைக் குடல் பிதுக்கம் இருந்தால் மூன்று வயது வரை பொறுத்துப் பார்க்கலாம். ஏனெனில் குழந்தை தவழ்ந்து செல்லும் பொழுது வயிற்றின் தசை வளர்ச்சி காரணமாக இது தானாகவே சரியாக வாய்ப்புண்டு. இதற்கு உதவியாகக் குடலை உள்ளே தள்ளிய பிறகு துணியில் ஒரு காசை வைத்துத் தைத்தபிறகு அதைக் குடல் வரும் ஓட்டையிலே மேல் கட்டிவிடலாம்.சில சமயம் தொப்புளுக்கு மேலாகவோ கீழாகவோ குடல் பிதுக்கம் வருவதண்டு. இவ்வகைப் பிதுக்கம் பெரும்பாலும் 35 வயதிற்குமேல் 50 வயதிற்குள் வரும். இது அதிகப்பருமனாக உள்ளவர்களுக்கும் அடிக்கடி குழந்தைப்பேறு உண்டானவர்களுக்கும் அவர்களது வயிற்றுத் தசை வலுவிழுந்து போவதால் உண்டாகும்.இக்குடல் பிதுக்கத்தில் பெருங்குடலும் அதன் கொழுப்புத்திரையும்; சிறுகுடலும் காணப்படும். இதற்கு மருத்துவமாக உடல் பருமனை முதலில் குறைக்க வேண்டும். உணவைக் கட்டுப்படுத்தி, உடற்பயிற்சி செய்து அதன் பின்னர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.


அறுவை சிகிச்சை செய்தபின் உண்டாகும் குடல்பிதுக்கம்


ஏதேனும் நோய்க்காக வயிற்றில் அறுவை சிகிச்சை செய்த பின்னர், அந்த இடத்தில் சீழ் பிடித்தாலும் அல்லது அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட புண் ஆறுவதற்கு முன்னர் அதிக இருமல் வந்தாலும் இவ்வகையான குடல் பிதுக்கம் வரக்கூடும். வயிற்றின் உள் அறை அழற்சியும் இதற்கு வேறொரு காரணமாகும். இந்நோய்க்காளானோர் தங்கள் உடற்பருமனைக் குறைத்து, இருமல் நோய் இருந்தால் அதனையும் சரி செய்த பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது.மருத்துவம் மிக வளர்ந்துள்ள இக்காலத்தில் இக்குடல் பிதுக்கத்தைப்பற்றி அதிகம் கவலைப்படத் தேவையில்லை. இதற்கு மருத்துவம் அறுவை சிகிச்சை ஒன்றுதான். அறுவைச்சிகிச்சை செய்து புண் சுமார் 7 நாட்களில் குணமாகிவிடும். தற்பொழுது இப்பிதுக்கங்கள் துளை அறுவை மூலமும் (லாப்ராஸ்கோபி) செய்யப்படுகிறது.





தஞ்சை டாக்டர் சு.நரேந்திரன்

எம்.எஸ்., பி.எச்.டி, சிறப்பு நிலைப் பேராசிரியர்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் -1



;