tamilnadu

ஈரோடு முக்கிய செய்திகள்

அந்தியூர் அருகே வியாபாரியிடம் ரூ.77 ஆயிரம் பறிமுதல்


ஈரோடு, ஏப்.10-அந்தியூர் அருகே பு.புளியம்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வியாபாரியிடம் ரூ.77 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இப்பணத்தை வட்டாட்சியர் கணேசனிடம் பணத்தை ஒப்படைத்தனர்.ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே அத்தாணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வராஜ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஏற்றும் வாகனத்தை சோதனை செய்தபோது புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் (46) என்பவர் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் அந்தியூர் வழியாக சென்னம்பட்டியில் வாழைக்காய் வாங்குவதற்காக ரூ.77 ஆயிரம் கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதற்கு முறையான ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அந்தியூர் வட்டாட்சியர் கணேசனிடம் ரூ. 77 ஆயிரத்தை ஒப்படைத்தனர்.


தேர்தல் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்கள் வாக்களிக்க ஏற்பாடு


ஈரோடு, ஏப்.10-நாடாளுமன்ற தேர்தல் ஏப்.18ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் வாக்குப் பதிவு பாதுகாப்பு பணியில் தற்போதுபணியாற்றும் காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர் காவல் படையினர், தீயணைப்பு துறையினர், சிறைத்துறையினர், வனத்துறையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஓய்வுப் பெற்ற காவலர்கள், தீயணைப்பு துறையினர், சிறைத்துறையினர், வனத்துறையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே தபால் ஓட்டுகள் தனித்தனியே அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் இன்று (வியாழனன்று) ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் சீருடை பணியாளர்கள் மற்றும் தேர்தல் பணி செய்யும் ஓய்வு பெற்ற சீருடை பணியாளர்கள் என மொத்தம் 1997 பேர் தபால் ஓட்டுகளை பதிவுச் செய்ய வேளாளர் மகளிர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி முதல் நண்பகல் 3.30 மணி வரை மட்டும் ஓட்டளிக்கலாம். ஓட்டுப்பதிவை தேர்தல் அலுவலர்கள் கண்காணிப்பார்கள். தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சீருடை பணியாளர், ஓய்வு பெற்ற சீருடை பணியாளர்கள் யார் வேண்டுமானாலும் இங்கு ஓட்டுகளை பதிவு செய்யலாம். ஓட்டுப்பதிவு குறித்து முன் கூட்டியே தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நிலைக்குழு, பறக்கும்படை, கண்காணிப்பு குழு, நீதிமன்ற பணி உள்ளிட்ட பல்வேறு பணிக்கு சென்ற காவல்துறையினர் ஓட்டளிக்க மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற விபரம் தெரியவில்லை. அவர்கள் தபால் மூலம் தங்கள் ஓட்டுகளை அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


பணத்திற்காக பீகார் இளைஞர் படுகொலை


ஈரோடு, ஏப்.10-பணத்திற்காக வட மாநில இளைஞர் துண்டு, துண்டாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோடு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பீகார் மாநிலம் கல்யாண்பூரை சேர்ந்தவர் நவீன்குமார் பட்டேல் (23). மனைவி சசிகலா (22). கடந்த 6 மாதத்துக்கு முன் ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி சாயப்பட்டறைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளனர். இவர்கள், தங்கள் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் நட்பாக பழகி, பின் கடத்தி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.இவர்கள் ரயிலில் பீகார் செல்லும் போது, அதே மாநிலத்தை சேர்ந்த நித்திஷ்குமார் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. நித்திஷ்குமார் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நாச்சியார்பட்டி நான்கு ரோடு பகுதியில் ஒரு மினரல் வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்தார். அவருடன் அவரது தாயாரும் உடனிருந்தார். இதற்கிடையே நித்திஷ்குமாரிடம் நவீன்குமார் அங்கு ஏன் கஷ்டப்படுகிறாய் ஈரோட்டுக்கு வந்துவிடு நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று கூறியுள்ளார். அவரின் பேச்சைக்கேட்டு நித்திஷ்குமார் ஈரோடு வந்தார். ஆனால் அவருக்கு சொன்னபடி நவீன்குமாரும் அவரது மனைவியும் வேலை வாங்கி தரவில்லை.நித்திஷ்குமாரை ஒரு அறையில் அடைத்து ரூ.1 லட்சம் பணம் கொடு இல்லையென்றால் கொன்று விடுவோம் என கூறியுள்ளனர். அதற்கு நித்திஷ்குமார், என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது என கூறியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஈரோடு சென்ற மகனைப்பற்றி எந்த தகவலும் இல்லாததால் திண்டுக்கல் காவல்துறையில் அவரது தாயார் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.இதற்கிடையே நித்திஷ்குமாரின் தாயாருக்கு நவீன்குமார் போன் செய்து உன் மகன் வேண்டுமானால் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் திண்டுக்கல் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். அவரது செல்போன் சிக்னலை வைத்து காவலர்கள் ஈரோடு வில்லரசம்பட்டி என தெரிந்தது. உடனே தனிப்படையினர் ஈரோடு வில்லரசம்பட்டிக்கு விரைந்தனர். வில்லரசம்பட்டியில் ஒரு வீட்டு முன் ரத்தக்கறை படிந்திருப்பதை கண்ட காவலர்கள் உள்ளே சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த ராகுல்தத்தா வெளியே ஓடி விட்டார். உள்ளே இருந்த நவீன்குமாரும், அவரது மனைவி சசிகலாவும் சிக்கி கொண்டனர். வீட்டின் உள்ளே 3 சாக்கு மூட்டை இருந்தது.இதில் கேட்ட பணம் கொடுக்காததால் நித்திஷ்குமாரை கணவன்-மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் கொலை செய்து உடலை வெளியே கொண்டு போக துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைக்குள் கட்டி இருந்தது தெரியவந்தது.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்தனபாண்டியன், துணை காவல்கண்காணிப்பாளர் ராதா கிருஷ்ணன் மற்றும் காவல்துறை ஆய்வாளர்கள் பன்னீர்செல்வம், சுப்புரத்தினம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



;