tamilnadu

ஈரோடு முக்கிய செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவு இன்று வெளியீடு கைபேசிக்கு இரண்டு நிமிடங்களில் குறுஞ்செய்தி


அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி 


ஈரோடு, ஏப். 18-பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளியன்று) வெளியிடப்படுகிறது. இதன் முடிவுகள் வெளியான 2 நிமிடத்தில் மாணவர்களின் பெற்றோர் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.கோபியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் குள்ளம்பாளையம் வாக்குச்சாவடியில் தனது வாக்குப்பதிவை பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெள்ளியன்று பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் சரியாக காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். வெளியிடப்பட்ட இரண்டு நிமிடங்களில் மாணவர்களின் பெற்றோர் கைபேசியில் குறுஞ்செய்தியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். இணையம் மூலமாகவும் முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் நல்ல முறையில் வெற்றி பெற்று மேல்படிப்பிற்கு செல்ல மாணவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்வில் தோல்வியடையும் மாணவர்கள் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோடை விடுமுறையில் மாணவர்கள் அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தனியார் பள்ளிகள் அரசு அறிவித்துள்ள கட்டளைகளை ஏற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி நடைபெறவில்லை என்றால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சில பள்ளிகளுக்கு இது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 


வாக்குச்சாவடியில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு


ஈரோடு, ஏப். 18-தமிழகத்தில் வியாழனன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குச்சாவடியில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சிவகிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 4 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இங்கு சிவகிரி பேரூராட்சிக்குட்பட்ட 4 வார்டுகளை சேர்ந்த 3 ஆயிரம் வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 16வது வார்டிற்குட்பட்ட கொடுமுடி ரோட்டை சேர்ந்த சடையப்ப கவுண்டர் மகன் முருகேசன் (60) என்பவர், வியாழனன்று காலை 9.15 மணியளவில் வாக்களிக்க வந்தார். அவர் வரிசையில் நின்றபோது திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் இறந்த்து தெரியவந்தது. பின்னர் உறவினர்கள் அவரது சடலத்தை வீட்டிற்கு எடுத்து சென்றனர். 

;