tamilnadu

தேர்தல் டுவென்டி டுவென்டி

இந்தியாவில் இரண்டு பெரிய நிகழ்வுகள் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஒன்று நாடாளுமன்ற தேர்தல், இரண்டு இந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டிகள். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள், தொண்டர்கள், இளைஞர்கள் ஆதரவாளர்கள், வாக்காளர்கள் என எல்லா தரப்பினரும் மிக ஆவலுடன் எதாவது ஒரு வகையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் கடந்த ஐந்தாண்டு கால பாரதிய ஜனதா கட்சியின் பாசிச ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று செயல்படுகிறார்கள். ஆளும் கட்சியினர் மீண்டும் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்று காவலாளி வேசம் போட்டு மக்களை குழப்பி வருகிறார்கள். இரண்டாவது பெரிய நிகழ்வான பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் விளையாடி வருகிறார்கள். இந்த விளையாட்டை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் நேரிலும், தொலைக்காட்சியிலும் பார்த்து வருகிறார்கள். இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து கீழ்க்கண்ட உரையாடல், மதச்சார்பற்ற அணிக்கு அங்குமணி என்றும் மதச்சார்பு அணிக்கு சங்கு மணி என்றும் இவர்களிடம் அம்பயர் அழகேசன் கேள்விக்கணை தொடுப்பவராகவும் தொகுக்கப்பட்டுள்ளது. அந்த உரையாடல் வருமாறு.


அம்பயர் அழகேசன்: இந்த நாடாளுமன்ற தேர்தல் விவசாயிகளின் பிரச்சனைகளை மையமாக வைத்து நடைபெறுகிறது என்று சொல்லப்படுகிறதே இது உண்மையா?

அங்குமணி: அம்பயர் அய்யா, நீங்க சொல்வது உண்மை. ஏன்னா நாடு முழுவதும் ஏராளமான விவசாயிகள் கடந்த ஐந்தாண்டுகளில் தற்கொலை செய்துள்ளனர். ஏராளமான போராட்டங்கள், நடைபயணங்கள், முற்றுகைகள் நடந்துள்ளன. லட்சக்கணக்கான விவசாயிகள் இக்காலத்தில் மோடி அரசுக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளனர்.

சங்குமணி: அம்பயரண்ணே, எங்க பாஸ் மோடி கடந்த தேர்தலில் சொன்னதையே இப்பவும் விவசாயிகளுக்கு சொல்லியிருக்கிறார். விவசாயிகளை பாதுகாக்க திட்டம் உள்ளது. ஆனால் செயல்படுத்த மாட்டோம். எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தூண்டி விடுகிறார்கள். இது அரசுக்கு எதிரானதாக பார்க்கக் கூடாது. இந்த தேர்தல் பாசிசத்தை நிலைநாட்ட நடைபெறுகிற தேர்தலண்ணே. விவசாயிகளுக்கான தேர்தல் இல்லண்ணே.

அ.அழகேசன்: வேளாண்மைத்துறைக்கு தனியாக பட்ஜெட் போடுவீகளா சார்?

அங்குமணி: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தனியாக பட்ஜெட் போடுவோம் என்று தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருக்கோம். 

சங்குமணி: அழகேசண்ணே உங்க கேள்வி எனக்கு சிப்பா வருதுண்ணே. நாங்க ரயில்வே பட்ஜெட்டையே சமாதி கட்டியவங்க, எங்ககிட்ட போய்ய்.... வேளாண்மை.... பட்ஜெட்.... போங்க.... போங்க...

அ.அழகேசன்: வேலையில்லாமல் கோடிக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்கு வேலை வழங்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

அங்குமணி: தமிழ்நாட்டில் ஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர் பணி மற்றும் மக்கள் நல பணியாளர் பணி வழங்கவும்

காலி இடங்களை நிரப்பவும் நடவடிக்கை எடுப்போம்.

சங்குமணி: அம்பயரே, சிக்கலான கேள்வி கேட்டது போல இருக்கிறீர். இதெல்லாம் எங்களுக்கு சுசூப்பி. ஏன்னா டீ விற்கிற வேலை, பக்கோடா விக்கிற வேலை, இப்போ வாட்சிமேன் வேலை, இப்படி கைவசம் நெறையா இருக்குது என் டுபுக்கு.

அ.அழகேசன்: வெளியுறவு கொள்கை பற்றி என்ன சொல்கிறீர்?

அங்குமணி; அண்டை நாடுகளுடன் நட்புறவை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் அம்பயரே!

சங்குமணி: பக்கத்து நாட்டோட எப்பவும் சண்டை போடுவோம். ஏன்னா பக்கத்து வீட்டோட எப்பவும் சண்டை போடுதமல்லவா? அதுதான் நாட்டின் கொள்கை. மற்றொரு விசயம் பாகிஸ்தான் நாட்டுக்காரங்க நம்ம நாட்டில வந்து கிரிக்கெட் விளையாடிடுவானுங்க. அதனால் சண்டை போட்டுகிட்டே இருக்கோம். யோவ் இத வைச்சித்தாயா பொளப்பு ஓடுது. 

அ.அழகேசன்: நூறுநாள் வேலை திட்டம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

அங்குமணி: கிராமப்புற ஏழை மக்களுக்கு நல்ல திட்டம். ஏற்கனவே ஆட்சியில் இருந்த போது நாங்கள் தான் கொண்டு வந்தோம். இத்திட்டத்தை மேம்படுத்தி செயல்படுத்துவோம். 

சங்குமணி: அம்பயரண்ணே, இந்த திட்டத்தால் தான் விலைவாசி கூடுதுன்னு எங்க சி.இ.ஓ (அருண்ஜெட்லி) ஏற்கனவே சொல்லி யிருக்கிறார். அதனால் இந்த திட்டம் பற்றி இப்ப ஒன்னும் சொல்ல முடியாதுப்பூ.

அ.அழகேசன்: மாட்டுக்கறி சாப்பிட வேண்டும் போல இருக்கு. ஒரு பிரேக் எடுக்கலாமா?

அங்குமணி: அம்பயர் அழகேசண்ணே மே 23க்கு பிறகு நீங்க தாராளமாக ஏராளமாக மாட்டுக்கறி சாப்பிடலாம். ஏன்னா நாங்க ஆட்சிக்கு வந்துடுவோம்.

சங்குமணி: யோவ் அம்பயரே உமக்கு எவ்வளவு தைரியம்? எங்கிட்ட இந்த கேள்வி கேட்ப. கடந்த ஐந்தாண்டுகளில் மாட்டுக்கறிக்காக பல பேர போட்டுத் தள்ளியுள்ளோம். நீ வந்து என்னிடம் சாப்பிடலாமா என்று கேட்க. தேர்தல் முடியட்டும். உனக்கு ஒரு பொங்கல் வைக்கிறேன் பாரு. என்ன தைரியம்? என்ன நெஞ்சழுத்தம்? 

அ.அழகேசன்: மக்களுக்கு மருத்துவ வசதி எப்படி செய்வீர்கள்?

அங்குமணி: உயர்சிகிச்சைகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் ஏழைகளுக்கு தாராளமாக இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுப்போம்

சங்குமணி: கடந்த ஐந்தாண்டுகளில் பல இடங்களில் ஜெனரேட்டர் வசதி இல்லாமல், ஆக்சிஜன் இல்லாமல் ஏராளமானோர் அரசு மருத்துவமனைகளில் பெரியவர்கள், குழந்தைகள் இறந்துள்ளனர். மருத்துவமனையில் எலி கடித்து இறந்த குழந்தைகளும் உண்டு. மருத்துவ துறையில் இதுதான் எங்கள் லட்சணம். பரந்து விரிந்த பெரிய நாட்டில் இது தவிர்க்க முடியாதது அம்பயரே?

அ.அழகேசன்: ஏழைகளுக்கு பென்சன் திட்டம் வழங்கப்படுமா?

அங்குமணி: ஐயா நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மாதம் ரூ.6000 வருடத்திற்கு ரூ.72000 ஏழை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்போம். 

சங்குமணி: நாங்கள் வருடத்திற்கு ரூ.6000 விவசாயிகளுக்கு கொடுப்போம் என்று சொல்லிப்புட்டோம். நிறைய பணம் கொடுத்தா மக்கள் செலவு பண்ண கஷ்டப்படுவாங்க. அதனால இதுபோதும் சார்.

அ.அழகேசன்: ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பீர்களா?

அங்குமணி: நிச்சயமாக நடவடிக்கை எப்போம். விசாரணை நடத்தி தவறு செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தருவோம்.

சங்குமணி: எங்க கட்சிக்காரங்களுக்கு நாங்களே ஆப்பு அடிக்க முடியுமா அழகேசண்ணே. அப்படியே நடவடிக்கை எடுத்தால் என்ன ஆகும்? மந்திரி சபைக்கூட்டம் ஜெயிலில் தான் நடத்த வேண்டும். போ போ அம்பயரே, அடுத்த கேள்விக்கு.

அ.அழகேசன்: காவிரி டெல்டாவை அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்படுமா?

அங்குமணி: காவிரி டெல்டா பகுதியை வேளாண்மண்டலமாக மாற்றுவோம். அதற்கான நடவடிக்கை எடுப்போம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்வோம்.

சங்குமணி: ஷேல்கேஸ், ஹைட்ரோகார்பன், மீத்தேன் நாட்டுக்கு எவ்வளவு முக்கியமுன்னு எதிர்க்கட்சிகளுக்கு தெரியலீங்க. எங்களுக்கு நல்லா தெரியும் (கமிஷன்). அதனால தான் வேதாந்தாவுக்கு கொடுத்திருக்கோம். 

அ.அழகேசன்: மக்களுக்கு தேவையான பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது பற்றி

அங்குமணி: மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது ஆட்சியாளர்களின் கடமை. எனவே முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்போம்.

சங்குமணி: குடிநீர் விநியோகத்தை விவிண்டி, சூயஸ் போன்ற கம்பெனிகளுக்கு கொடுத்துள்ளோம். மக்களுக்கு தண்ணீர் தேவை என்றால் அவர்களிடம் காசு கொடுத்து வாங்கி கொள்ள வேண்டும். அரசு தண்ணி வியாபாரம் (டாஸ்மாக்) மட்டுமே செய்யும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். 

அ.அழகேசன்: மெட்ரோ ரயில் திட்டம் வேறு நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படுமா?

அங்குமணி: மதுரை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

சங்குமணி; மெட்ரோ ரயில் திட்டம் முறையாக 50 சதவீதம் கமிஷன் கிடைத்தால் விரிவுபடுத்தப்படும். சல்லிபைசா குறைந்தாலும் திட்டம் அம்பேல் தான். முடிவா சொல்லிப்புட்டோம். 

அ.அழகேசன்: நிலம் கையகப்படுத்துவதில் தங்கள் அரசு எப்படி செயல்படும்? 

அங்குமணி: 2013 ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டப்படி விவசாயிகளுக்கு நிலத்திற்கான இழப்பீடு வழங்கப்படும். அரசின் அவசிய தேவைக்கு மட்டுமே நிலம் எடுக்கப்படும். 

சங்குமணி: எட்டுவழிச்சலை திட்டம், உயர்மின்கோபுர திட்டம் மற்றும் அதானி, அம்பானிக்கு நிலம் எடுத்து கொடுத்தால் எங்களுக்கு நல்ல கமிஷன் கிடைக்கும். இதை பொறுக்க முடியாத எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தூண்டி விட்டு வருகிறார்கள், அம்பயரே.

அ.அழகேசன்: இராணுவத்தை உங்கள் அரசு எவ்வாறு செயல்படுத்தும்?

அங்குமணி: நாட்டையும், மக்களையும் பாதுகாத்திட இராணுவத்தை முறையாக பயன்படுத்துவோம் அம்பயரண்ணே.

சங்குமணி: பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்துவோம். மக்களிடம் எங்கள் செல்வாக்கு குறையும் போது. இராணுவ வீரர்களை நாங்களே போட்டு தள்ளுவோம். அதை பாகிஸ்தான் மீது பழிபோடுவோம். எப்படி எங்கள் திட்டம்.

அ.அழகேசன்: அரசு ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துவீர்களா அல்லது பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவீர்களா? சார்.

அங்குமணி: அம்பயரண்ணே, பழைய பென்சன் திட்டத்தை செயல்படுத்துவோம்

சங்குமணி: எம்.எல்.ஏ களுக்கு சம்பளம், பென்சன் அடிக்கடி உயர்த்துவோம். அது என்ன பழைய பென்சன் திட்டம் அழகேசண்ணே. புரியலையே

அ.அழகேசன்: இயற்கு வளங்களைப் பாதுகாத்திட என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்?

அங்குமணி: இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும். இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சங்குமணி: எதிர்க்கட்சிகளுக்கு இயற்கை வளங்களை பற்றி ஒன்று தெரியாது. எங்களுக்கு அதன் மதிப்பு நல்லா தெரியும். அதனால எங்க ஆட்கள் இயற்கை வளங்களை வெட்டி எடுத்து விற்று கோடீஸ்வரர்களாக மாறி வருகிறார்கள். இது எதிர்க்கட்சிகாரர்களுக்கு பொறாமையாக இருக்கு அம்பயரே. 

அ.அழகேசன்: நீட் தேர்வு ரத்து செய்திட முடியுமா?

அங்குமணி: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை கண்டிப்பாக ரத்து செய்திடுவோம் சார்.

சங்குமணி: சாதாரண வீட்டு பிள்ளைகள் டாக்டருக்கு படிக்கக் கூடாதுன்னு தானே இந்த எளவ எங்க டாடி கொண்டு வந்தாரு.

அ.அழகேசன்: விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

அங்குமணி: நிச்சயமாக, விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சங்குமணி: அம்பயரே இப்படி கஷ்டமான கேள்வி எல்லாம் என்னிடம் கேட்காதீங்க. எங்க அண்ணன் மிக்சர் வரும் போது கேளுங்க.

அ.அழகேசன்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு யார் காரணம் சார்.

அங்குமணி; நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இப்போதைய விலை மாற்றுமுறையை ரத்து செய்து புதிய நடைமுறையை உருவாக்கு வோம். 

சங்குமணி: பெட்ரோல், டீசல் விலையை தினசரி உயர்தினால் தான் பெட்ரோல் போட முடியாமல் மக்கள் கார், பைக் வாங்குவதை குறைத்து கொள்வார்கள். இதனால் ரோட்டில் வாகனம் குறைவாக செல்லும். இப்படியான அரிய யோசனையில் தான் தினசரி உயர்த்துகிறோம். எதிர்க்கட்சிகளுக்கு இது பிடிக்காதே?

அ.அழகேசன்: நீங்கள் சிக்சர் அடிக்க விரும்புவீர்களா?

அங்குமணி: சிக்சர் அடிக்க விரும்புவேன் சார்.

சங்குமணி: அம்பயரே! சிக்சரா அது என்ன? நாங்க டீ அடிக்கத் தான் விரும்புவோம். புரியுதா இது தான் எங்க கிரிக்கெட்டு.

அம்பயர் அழகேசன் அவர்கள் இருதரப்பு. பதில்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆய்வு செய்து அங்குமணி அணி அமோக வெற்றி பெற்றதாக அறிவிக்கிறார். போட்டியை கண்டுகளித்த பொதுமக்கள் அங்குமணி அணிக்கு மிகப்பெரிய வரவேற்பை வழங்குகிறார்கள். 


;