tamilnadu

img

அனுமதி பெற்று வரைந்த சின்னங்களை அழிப்பதா?

திருப்பூர், ஏப். 1-திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் கிராமப்புறங்களில் கட்டிட உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று வரைந்த சின்னங்களை தேர்தல் அதிகாரிகள் அழிப்பதா என்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கேள்வி எழுப்பினர்.திருப்பூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் திங்களன்று திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதில் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி பொது பார்வையாளர் மாணிக்குர்ஷல், செலவின பொதுப்பார்வையாளர்கள் சௌமியா ஜித்தாஸ் குப்தா (பெருந்துறை, பவானி, அந்தியூர்) மற்றும் சிட்னி டி சில்வா (திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, கோபி செட்டிபாளையம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இக்கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். முன்னதாக இக்கூட்டத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் பற்றியும், கண்காணிப்பு ஏற்பாடுகள் பற்றியும் விளக்கினார்.இதைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி பேசும்போது, கிராமப்புறங்களில் சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளர்களிடம் அனுமதி பெற்று வரைந்த கதிர் அரிவாள் சின்னங்களை அதிகாரிகள் தன்னிச்சையாக அழித்துள்ளனர். அதேசமயம் ஆளும் கட்சியினர் வரைந்த சின்னங்கள் அப்படியே உள்ளன. தேர்தல் ஆணையம் பாரபட்சமான அணுகுமுறையை கைவிட வேண்டும் என்று கூறினர். அப்போது ஆளும் கட்சி பிரதிநிதி கூறுகையில், அனுமதி பெறாமல் சின்னங்கள் வரைந்திருக்கிறோம். கட்டிட உரிமையாளர்களிடம் அனுமதி கடிதத்தை வாங்கி உடனடியாக ஒப்படைக்கிறோம் என்றனர்.


சின்னங்கள் வரைவது தொடர்பாக கட்டிட உரிமையாளர்களிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதாது, உதவி தேர்தல் அலுவலர்களிடமும் அனுமதி பெற வேண்டும் என்று சொல்வதை ஏற்க முடியாது. அதிகாரிகள் அனுமதி கொடுக்க வேண்டுமென்றே தாமதம் செய்தால் என்ன செய்வது என்றும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து கட்டிட உரிமையாளர்களிடம் மட்டும் அனுமதி பெற்றால் போதும், அதேசமயம் சம்பந்தப்பட்ட பகுதிகளை தேர்தல் அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், கட்டிட உரிமையாளர்களிடமும் அனுமதி வழங்கியது பற்றி ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.அதேபோல் சுவிதா அலைபேசி செயலி மூலம் அரசியல் கட்சிகள் அனுமதி வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தாலும், சில விபரங்களை பதிவேற்றுவது, செயல்படுவதில் சிக்கல் ஏற்படுகிறது என்று அரசியல் கட்சியினர் தெரிவித்தனர். இத்தகைய நேர்வுகளில் தொடர்புடைய அலுவலர்களிடம் நேரில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் பதில் அளிக்கப்பட்டது.ஊடகங்களில் பணம் கொடுத்து செய்தி (பெய்டு நியூஸ்) வெளியிடுவதைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.தேர்தல் செலவு கணக்குத் தொடர்பாக ஒலிபெருக்கி, இருக்கைகள், வாகனம், குடிநீர், உணவு உள்ளிட்ட செலவுகளுக்கு உரிய கட்டண விபரம் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. அதை சரிப்படுத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. எனினும் பொதுவான விசாரணை அடிப்படையில் ஒவ்வொன்றுக்கான கட்டணமும்நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் விசயங்களில் மறுபரிசீலனை செய்வதாக ஆட்சியர், தேர்தல் அலுவலர் பழனிச்சாமி தெரிவித்தார்.


அத்துடன், தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படவுள்ள வாக்காளர் சீட்டுகள் வாக்காளரின் பாகம் எண், தொடர் எண் போன்றவற்றை விரைவில் அறிந்து கொள்வதற்கான ஆவணமாக மட்டுமே பயன்படுத்த முடியும். இதனை வாக்களிப்பதற்கான அடையாள ஆவணமாக பயன்படுத்த முடியாது. வாக்காளர்கள் தங்களது பெயர் தற்போது நடைமுறையில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதை அறிந்து கொள்ள 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது பெயர் இடம் பெற்றுள்ள பாகம் எண், தொடர் எண், வாக்குச்சாவடி அமைவிடம் போன்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம் என்றார்.இந்நிகழ்வில், திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் சஞ்சய்குமார், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேஷ், திருப்பூர் மாநகர துணை காவல் ஆணையர் இ.எஸ்.உமா, மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.சுகுமார், தாராபுரம் சார் ஆட்சியர் பவன்குமார், திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் செண்பகவள்ளி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கீதாபிரியா, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ், திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், காவல்துறை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



;