புதுதில்லி:
தில்லியில், சுகாதாரம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற இந்திய ராணுவத் தலைமை தளபதி பிபின் ராவத், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்றுவரும் போராட்டங் களை விமர்சித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்தார்.“தவறான வழிக்கு மக்களை அழைத்துச் செல்வோர் தலைவர்கள் கிடையாது. பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் போன்றவற்றைச் சேர்ந்த பெருவாரியான மாணவர்கள் வீதிகளில் போராடுவதைப் பார்க்கிறோம்; அவர்களை வன்முறை, கலவரங்கள் போன்றவற்றில் ஈடுபட வைப்பது என்பது தலைமை பண்பு கிடையாது” என்று ராவத் கூறியிருந்தார்.
இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகள் மத்தியிலும் தொடர்ந்து கண்டனங்கள் எழுந்து வருகின்றன.இந்நிலையில், கடற்படையின் முன்னாள் தலைமைத் தளபதி எல். ராம்தாஸூம், பிபின் ராவத்தின்கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். “விதிமுறைகள் தெளிவாக உள்ளன. நாம் (ராணுவத்தினர்) நாட்டுக்காக சேவை செய்கிறோமே தவிர, அரசியல் சக்திகளுக்கு இல்லை. நாம் இன்று பேசியது (பிபின் ராவத் பேச்சு) மிகவும் தவறான செயல். உயர் அதிகாரியாக இருந்தாலும் கீழ்மட்டத்தில் பணியில் இருக்கும் வீரராக இருந்தாலும் அரசியல் ரீதியிலான கருத்துக்கள் சொல்வது தவறான செயல்” என்று ராம்தாஸ் கண்டித்துள்ளார்.