tamilnadu

img

திருப்பூரில் ஆஷர் மில் தியாகி பழனிச்சாமி 69ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு

திருப்பூர், ஏப். 20 -திருப்பூரில் 1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஏவிவிடப்பட்ட அடக்குமுறையின் ஒரு பகுதியாக ஆஷர் மில் பழனிச்சாமி கொடூரமான சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவரது 69ஆம் ஆண்டு நினைவு தினம் சனியன்று எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகமான தியாகி பழனிச்சாமி நிலையம் முன்பாக தியாகி பழனிச்சாமி உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியை மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தியாகி பழனிச்சாமி உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராஜகோபால், என்.கோபாலகிருஷ்ணன், சி.மூர்த்தி, ஜி.சாவித்திரி, வடக்குமாநகரச் செயலாளர் பி.முருகேசன், வடக்கு ஒன்றியச் செயலாளர்கே.பழனிச்சாமி உள்பட கட்சி அணியினர் மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர். மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தியாகி பழனிச்சாமியின் தியாகத்தைச் சுட்டிக்காட்டி நினைவஞ்சலி உரையாற்றினார். நிறைவாக அலுவலகக் கிளைச் செயலாளர் பா.சௌந்தரபாண்டியன்நன்றி கூறினார்.மாலையில் தியாகி பழனிச்சாமி நகரில் உள்ள ஆஷர் மில் பழனிச்சாமி நினைவு ஸ்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கொடியை மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து கே.தங்கவேல், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஈஸ்வரமூர்த்தி உள்பட கட்சி நிர்வாகிகள், ஊழியர்கள், இப்பகுதி பெண்கள் உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இங்கு நடைபெற்ற நிகழ்வில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் ஆகியோர் பழனிச்சாமியின் தியாகத்தை நினைவுகூர்ந்து பேசினர். கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

;