அவிநாசி, ஜூலை 6- அவிநாசியை அடுத்த சென்னிமலை பகுதி ஏடி காலனி குடியிருப்பு பின்புறமாக சாக்கடை நீர் தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. அவிநாசி ஒன்றியம் தெக்கலூர் ஊராட்சிக்குட்பட்ட சென்னிமலை பகுதி ஏ டி காலனி குடியிருப்புகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் குடியிருப்புக்கு பின்புறமாக சாக்கடை நீர் அதிகளவில் தேங்கியுள்ளதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் பல ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். அடுக்குமாடி குடியிருப்பில் இருப்போர் கழிவுநீரை ஏ டி காலனி பின்புறமாக விடுவதினால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு, கொசு உற்பத்தியும் அதிகமாகி அவ்வப்போது நோய் தொற்று களுக்கு உள்ளாகி வருகின்றோம். இதிலும் நாங்கள் குடியிருக்கும் பகுதி தாழ்வானது காரணமாக மழை காலத்தில் கழிவு நீர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மிகவும் அவதிப்படுகிறோம். எனவே தேங்கியுள்ள சாக்கடை நீரை அப்புறப்படுத்தியும், மழை காலங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகாமல் இருக்க ஊராட்சி ஒன்றிய நிர்வா கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.