tamilnadu

img

கோல்டு லோன் கேட்டு மாடுகளுடன் குவிந்தனர்

கொல்கத்தா:
நாட்டுமாட்டுப் பாலில் தங்கம் இருப்பதாக மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியிருந்த நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த பலர், மாடுகளுடன் தங்கக் கடன் கேட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை முற்றுகையிடத் வங்கியுள்ளனர்.குறிப்பாக, தங்குனி என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் பசுவுடன் மணப்புரம் நிறுவனத்திற்கு சென்று நகைக் கடன் கேட்டு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.மேற்குவங்க பாஜக தலைவரான திலீப் கோஷ், கொல்கத்தா அருகே பர்த்வான் நகரில் நடைபெற்ற “கோபா அஷ்டமி காரியக்ரம்” என்ற நிகழ்ச்சியில் நீண்ட உரையாற்றியிருந்தார்.அப்போது, “இந்தியப் பசுக்களின் பாலில் சிறிது மஞ்சள் நிறம் இருப்பதற்கு காரணம் அதில் தங்கம் இருப்பதே ஆகும். பசுக்களின் ரத்த நாளமானது சூரிய ஒளியின் உதவியோடு தங்கத்தை உற்பத்தி செய்கிறது. இந்த பாலில் ஏராளமான எதிர்ப்புச் சக்தி உள்ளது. ஒரு மனிதன் பாலை மட்டும் உட்கொண்டு உயிர் வாழ முடியும். வேறு எந்த உணவும் தேவைப்படாது” என்று திலீப் கோஷ் குறிப்பிட்டது, நாடு முழுவதும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. 

பாஜக தலைவர்கள் எப்போதுதான் இதுபோன்ற உளறல்களை நிறுத்திக் கொள்ளப்போகிறார்கள் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், தங்குனி பகுதியில் உள்ள மணப்புரம் நிதி நிறுவனத்துக்கு, பசுமாடுகளுடன் வந்த ஒரு விவசாயி, தன்னுடைய இரு மாடுகளை வைத்துக் கொண்டு தங்கக் கடன் தருமாறு கேட்டு, அதிகாரிகளை மிரட்சியில் தள்ளியிருக்கிறார். எந்த அடிப்படையில் மாடுகளின் பேரில் தங்கக் கடன் கேட்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் அந்த விவசாயியிடம் கேட்டதற்கு, “மாட்டுப்பாலில் தங்கம் இருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதனாலேயே மாடுகளைக் கொண்டுவந்தேன்; என்னிடம் 20 மாடுகள் இருக்கின்றன; வைத்துக் கொண்டு கடன் கொடுங்கள்” என்று கூறியிருக்கிறார். 

அவரிடம், மாட்டுப்பாலில் தங்கமெல்லாம் இல்லை; அது பாஜக-வினர் கிளப்பி விட்ட புரளி; யெல்லாம் நம்பி வங்கிக்கு வராதீர்கள் என்று கூறி அங்கிருந்தவர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.தங்குனி பகுதி விவசாயியைப் போலவே, கரகச்சா என்ற கிராம ஊராட்சியிலும், ஏராளமானோர், அங்குள்ள ஊராட்சித் தலைவரை முற்றுகையிட்டு, பசுக்களின் பெயரில் தங்கக் கடன் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் ஊராட்சித் தலைவர் மனோஜ் சிங் தற்போது தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார்.“தங்களின் பசுக்கள் தினமும் 15 முதல் 16 லிட்டர் வரை பால் கறக்கும் என்றும், தங்களுக்கு எவ்வளவு தங்கக் கடன் கிடைக்கும்? என்றும் என்னிடம் கேட்கின்றனர்; இதையெல்லாம் கேட்டால் எனக்கு அவமானமாக உள்ளது” என்று கூறியுள்ள மனோஜ் சிங், “பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்த கருத்துக்காக அவருக்கு ‘நோபல் பரிசு’தான் கொடுக்க வேண்டும்” என்றும் கிண்டலடித்துள்ளார்.“ஒரு அரசியல் தலைவர் உணவு, உடை, மக்களின் முன்னேற்றம் குறித்து பேசலாம். ஆனால் எந்நேரமும் மதத்தைப் பற்றியேவா பேசிக் கொண்டிருப்பது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ள மனோஜ் சிங், “மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்; அவர்கள் தகுந்த நேரத்தில் பதிலடி கொடுப்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

;