tamilnadu

img

ஆன்மீக தலத்தில் அரசியல் பேசுவதா? ராமகிருஷ்ணா மடத்தினர் மோடிக்கு எதிர்ப்பு

கொல்கத்தா:
ராமகிருஷ்ணா மடத்திற்குள், பிரதமர் மோடி அரசியல் பேசியதற்கு மடத்தின் உறுப்பினர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந் துள்ளது.“அரசியல் தொடர்பில்லாத ஆன்மிகம் சம்பந்தப்பட்ட ஒரு மடத்தில் பிரதமர் மோடி அரசியல் கருத்துக்களை பேசியது தவறு” என்று கூறியுள்ள மடத்தின் உறுப்பினர்கள், “ராமகிருஷ்ணா மடத்திற்கு, மோடியை ஏன், பேச அழைத்தீர்கள்?” என்றும் தலைமை நிர்வாகிகளுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.பிரதமர் நரேந்திர மோடி, ஞாயிறன்றுராமகிருஷ்ண மடத்தின் தலைமையகமான கொல்கத்தா பேலூர் மடத்திற்குச் சென்றிருந்தார். மடத்தில் உள்ள குருமார்களைச் சந்தித்த பின்னர், வழக்கம்போல எதிர்க் கட்சிகளை சாடும் வகையில் அரசியல் கருத்துகளைப் பேசினார்.

“புதிய குடியுரிமைச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறித்துக் கொள்ளாது. மாறாக, வழங்கவே செய்யும். ஆனால்,நாட்டு இளைஞர்களிடம் குடியுரிமைச் சட்டம்குறித்து, தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன” என்று எதிர்க்கட்சிகளை விமர்சித் தார். இது தற்போது சர்ச்சையாகியுள்ளது.“எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதற்கும், குடியுரிமைச் சட்டம் குறித்து விளக்கம் அளிக்கவும்- ஆன்மிக நிறுவனமான ராமகிருஷ்ணா மடம்தானா, கிடைத்தது?” என்றுபலரும் விமர்சனங்களை வைத்துள்ளனர்.ராமகிருஷ்ணா மிஷன் உறுப்பினர் கவுதம் ராய் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “ராமகிருஷ்ணா மிஷன் மிகவும் விரிவான அதிகாரப்பூர்வ புனிதமாக்கல் நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது. மோடிக்கு ஒன்றும் அதிகாரப்பூர்வமாக தீட்சை அளிக்கப்படவில்லை. அவர் அரசியல் ரீதியான கருத்துக்களை பேசுவதற்கு இங்கு அனுமதி இல்லை”என்று கூறியுள்ளார்.

மேலும், “கடந்த சில ஆண்டுகளாக ராமகிருஷ்ணா மிஷன் அரசியல்மயமாகி வருகிறது; ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் தொடர்புடைய மூத்த ஆன்மிகத் தலைவர்கள் இங்குநியமிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு பதவி உயர்வுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடியின் வருகையையும் இதனொரு பகுதியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது” என்றும் முக்கியமான குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.இதேபோல, ராமகிருஷ்ணா மிஷனின் மூத்த சந்நியாசிகள் சிலரும் மோடியின் பேச்சுக்கு மறைமுகமாக எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பக்தர்களைச் சந்திப்பதாக இருந்த அவர்கள், மோடியின் அரசியல்பேச்சுக்குப் பின்னர், திடீரென சந்திப்பு நிகழ்ச்சியை ரத்து செய்துள்ளனர். இது சிலபக்தர்கள் மற்றும் சந்நியாசிகளின் அதிருப்தியின் வெளிப்பாடே என்று கூறப்படுகிறது.இந்நிலையில், ராமகிருஷ்ணா மடத்திற்கான மோடியின் வருகை மற்றும் பேச்சு குறித்த விமர்சனங்கள், எதிர்ப்புகளுக்கு, ராமகிருஷ்ணா மிஷன் பொதுச் செயலாளரான சுவாமி சுவிரானந்தா பதிலளித்துள்ளார்.அதில், “சிஏஏ குறித்து பிரதமர் பேசியது பற்றி ராமகிருஷ்ணா மிஷன் கருத்துக் கூற விரும்பவில்லை; நாங்கள் கண்டிப்பான- அரசியல் தொடர்பில்லாத அமைப்பு. நிலையான கடவுளின் அழைப்பினால் நாங்கள் எங்கள் வீடுகளை விட்டு இந்தத் திருப்பணிக்கு வந்துள்ளோம், நிலையற்ற அழைப்புகளுக்கு நாங்கள் பதிலளிக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ராமகிருஷ்ணா மிஷன் அனைவரையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பு. இங்கு இந்து, இஸ்லாம், கிறித்துவ மதங்களிலிருந்தும் வந்துள்ள சாமியார்கள் இருக்கின்றனர். ஒரே பெற்றோருக்குப் பிறந்த சகோதரர்கள் போல் வாழ்கிறோம். எங்களைப் பொறுத்தவரை நரேந்திர மோடி என்பவர் இந்தியாவின் தலைவர். மம்தா பானர்ஜிமேற்கு வங்கத்தின் தலைவர்” அவ்வளவுதான் என்பதாக குறிப்பிட்டுள்ளார்.

;