tamilnadu

சாக்கடைக்குள் இறந்த 2 மதுரை தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கொச்சி, ஜன.7- சாக்கடை சுத்தம் செய்யும் பணியின்போது ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் உயிரிழந்த மதுரையை சேர்ந்த இரண்டு துப்புரவு தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்குமாறு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2014 ஏப்ரல் 13 ஆம் தேதி கொச்சி மாநகராட்சியில் உள்ள கானல்ஷெட் சாலையில் கழிவுநீர் குழாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மாதவ் (58), ராஜு (50) ஆகிய தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷவாயு தாக்கி இருவரும் உயிரிழந்தனர். ஒப்பந்ததாரர் மூலமாக குடிநீர் ஆணையம் அந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கியது. இதுபோன்ற விபத்துகளில் உயிரிழந்தோருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்ற தீர்ப்பை அடிப்படையாக கொண்டு மீதி தொகையை வழங்குமாறு தலைமை நீதிபதி எஸ்.மணிகுமார், ஷாஜி.பி.சாலி ஆகியோர் உத்தரவு பிறப்பித்தனர். வாரிசுகளை கண்டறிந்து இந்த தகவலை தெரிவிக்க மாவட்ட ஆட்சியருக்கும் உள்ளாட்சிகளின் செயலாளருக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள் தொகையை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவில் தெரிவித்துள்ளனர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பேஸில் அட்டிப்பேற்றி தொடுத்த பொதுநல வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குமாறு கோரியிருந்தார். வழக்கு நடந்துகொண்டிருந்த காலத்தில் அவர் உயிரிழந்தார். வழக்கு தொடுத்தவர் இறந்தாலும் வழக்கை தொடரலாம் என நீதிமன்றம் முடிவு செய்தது. வழக்கை நடத்த சட்ட உதவி ஆணையத்தை நீதிமன்றம் பொறுப்பாக்கியது. வழக்கு தொடுத்தவர் இறந்தாலும் இழப்பீடு வழங்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என சுட்டிக்காட்டி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  

;