திருவனந்தபுரம், ஏப். 8-
சுகாதார ஊழியர்களுக்கு தேவையான கவனிப்பை வழங்க ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு உள்ளது. உலகெங்கிலும் உள்ள மலையாள சமூகம் மற்றும் மலை யாள அமைப்புகள் அனைத்து மட்டங்களிலும் அந்தந்த பகுதிகளில் தலையிட்டு சுகாதார ஊழியர்களுக்கு உதவ வேண்டும். உலகின் பல பகுதிகளிலும் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர்கள் அனுபவிக்கும் சிரமங்களும் கவலைகளும் தம்மை வருத்துவதாக கூறிய கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை பாதுகாக்க பிரதமர் மற்றும் தில்லி, மகாராஷ்டிர முதல்வர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறினார்.
இதுகுறித்து செவ்வாயன்று செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: நிபா வைரஸுக்கு எதிரான நமது போராட்டத்தின் தியாகி லினி. கோட்டயத்தில் கொரோனா பாதித்த வயதான தம்பதிகள் நலம் பெற்றது நமது சுகாதாரத்துறையின் பெருமைக்குரிய சேவையாகும். அவர்களுக்கு சிகிச்சை அளித்தபோது வைரஸ் தாக்கு தலுக்கு உள்ளான செவிலியர் ரேஷ்மா மோகன்தாஸ் சிகிச்சை பெற்று வந்தார். நலமடைந்த உடன் மீண்டும் கொரோனா வார்டில் பணியாற்றத் தயார் என ரேஷ்மா தெரிவித்துள்ளார். அதே கோட்டயத்திலிருந்து மற்றொரு செவிலியர் பாப்பா ஹென்றி கொரோனா பாதிக்கப்பட்ட எந்த மாவட்டத்திற்கும் சென்று பணி யாற்றத் தயார் என சுகாதாரத்துறை அமைச்சரிடம் கூறியதை ஒரு ஊடகம் (ஏசியா நெட்) நேரடியாக ஒளிபரப்பியது.
செவிலியர்கள் நமக்கு அளிக்கும் ஆற்றல் மற்றும் கவனிப்புக்கு இது எடுத்துக்காட்டு. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இதுபோன்ற கவனிப்பை வழங்க வேண்டிய பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. அதனால்தான் தில்லி மற்றும் மும்பையில் கொரோனா பாதிப்புக்குள்ளான செவிலியர்கள் குறித்து நாம் கவலைப்படுகிறோம். எல்லா துன்பங்களிலிருந்தும் நேரடியாக மனித உயிரைக் காப்பாற்ற அவர்கள் செய்த தியாகப் பணிகளில் பெருமை கொள்கிறோம். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டு பிரதமர் மற்றும் தில்லி, மகாராஷ்டிரா முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வர் கூறினார்.
கேரளத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்ப ட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 12 பேர் நலமடைந்து வீடு திரும்பியதாகவும் முதல்வர் குறிப்பிட்டார். காசர்கோட்டில் இருந்து நான்கு, கண்ணூரில் மூன்று, கொல்லம், மலப்புரம் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் நோய் உறுதியாகியுள்ளது. நோய் கண்டறியப்பட்டவர்களில் நான்கு பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள். இருவர் நிஜாமுதீன் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மூன்று பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பழகி யவர்கள் என முதல்வர் கூறினார்.
அதே நேரத்தில் கொரோ னா பாதிப்புக்குள்ளாகி மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 12 பேருக்கு தற்போது கொரோனா இல்லை என பரிசோதனையில் தெரியவந்துள்ளது என்றார். கண்ணூரில் 5, எர்ணாகுளம் 4, திருவனந்தபுரம், ஆலப்புழா, காசர்கோடு மாவட்டங்களில் தலா ஒருவர் என நோயின் பிடியிலிருந்து விடுபட்டுள்ளனர். இதுவரை கேரளத்தில் 336 நபர்கள் கொரோனாபாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். இதில் 263 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். செவ்வாயன்று மட்டும் 131 நபர்கள் மருத்துவமனைகளில் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
கேரளத்தில் உள்ள தொழில் பட்டறைகள் (ஒர்க் ஷாப்) ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளிலும், செல்போன் மற்றும் குளிர்சாதனம், மின்விசிறி ஆகிய வீட்டு உபயோகப் பொருட்கள் ஞாயிறு மட்டும் திறக்கலாம் என முதல்வர் தெரிவித்தார். பதிவு பெற்ற மின்சார பணியாளர்கள் (எலக்ட்ரீசியன்) பழுது பார்க்கும் வேலைகளுக்காக வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் தற்போது நடைமுறையில் உள்ள ஏற்பாடுகளில் பழுது ஏற்பட்டால் அவற்றை சீரமைக்க செல்வோருக்கும் அனுமதி அளிக்கப்படும் என முதல்வர் கூறினார்.