tamilnadu

img

புதிய சகாப்தத்திற்கு விதை போட்ட சோவியத் ஒன்றியம் - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியும் கம்யூனிஸ்ட்டுகளும்

21.1.2019 அன்று வெளியான தொடரின் தொடர்ச்சி...

எப்படியிருப்பினும், உலகளாவிய முறையில் ஒரு சகாப்தத்தையே புரட்டி போடும் விதமாக நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளால் இந்தியாவில் காங்கிரசின் பின்னால் திரண்டிருந்த வெகுமக்களும், இதர ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும் ஈர்க்கப்பட்டனர். அந்த சமயத்தில் உலக முதலாளித்துவ பொருளாதாரமானது மிக மிக ஆழமான நெருக்கடியில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தது. ஆனால் அதற்கு நேர்எதிராக சோவியத் ஒன்றியத்தின் முதலாவது ஐந்தாண்டு திட்டம் மிகவும் வெற்றிகரமான முறையில் அமலாக்கப்பட்டு, புதிய சகாப்தத்தை துவக்கி வைத்தது. சோசலிசத்தின் கோட்பாடுகள் என்ன சொல்கின்றன என்பது குறித்தும், சோசலிச தத்துவம் என்ன என்பது குறித்தும் பொருளாதார அறிஞர்களால் விவாதிக்காமல் இருக்க முடியவில்லை; அதேவேளை, அந்த கோட்பாடுகள் உலகின் பல்வேறு பகுதிகளில் பரிசோதித்து பார்க்கப்பட்டன; அப்படி பரிசோதித்த போது, நெருக்கடியின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு மாற்றாக, ஒரு உயரிய தத்துவம் சோசலிசம் என்பது நிரூபணம் ஆவதை கண்டார்கள். இந்தியாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள், சோவியத் ஒன்றியத்தில் சோசலிசம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருப்பதை பார்த்து, எதிர்காலத்தில் இந்திய நாடும், இப்படி இருக்க வேண்டும் என்று ஒரு வரைபடத்தை தங்கள் மனதில் உருவாக்கிக் கொண்டார்கள். அது நடக்க வேண்டுமானால், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை தூக்கியெறிந்து, நாடு சுதந்திரமடைந்தால் மட்டுமே சாத்தியம் என்பதையும் உணர்ந்தார்கள். இந்த கருத்துக்கள், மார்க்சிய - லெனினிய சித்தாந்தங்களை சுற்றி வலம்வந்து கொண்டிருந்த காங்கிரசின் பல்வேறு தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே, ஆர்வத்தையும் வேட்கையையும் தூண்டியது. மார்க்சிய - லெனினியத்தின்பால் அவர்களை ஈர்த்தது. அவர்களது மனக் கண்களை திறந்தது. இது, காங்கிரசின் அகில இந்திய தலைவர்களும், இடதுசாரி பாதையை நோக்கி திரும்பும் விதமான சிந்தனைகளை விதைத்தது; அது அவர்களின் பேச்சுக்களில், அறிவிப்புகளில் பிரதிபலித்தது. லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் நேரு ஆற்றிய தலைமை உரையே அதற்கு சான்று.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக தீவிரமடைந்த போராட்டம்

இந்த காலகட்டத்தில் இந்தியாவிற்குள் ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்கள் வேகமெடுத்தன. எண்ணற்ற போராட்டங்கள் நடந்தன. அனைத்தும் உறுதிமிக்க, போர்க்குணமிக்க எழுச்சிகள். ஏனென்றால் இந்த முறை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை பார்க்கும் பார்வை மாறியிருந்தது. முன்பைவிட தற்போது அதற்கான நீண்டகால இலக்கும், நடைமுறை உத்திகளும் வகுக்கப்பட்டு களமிறங்கினார்கள். 1930 ஆம் ஆண்டு எழுச்சிமிகு உப்புச் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 1932 - 33 ஆம் ஆண்டுகளில் இரண்டாவது சட்டமறுப்பு இயக்கம் நடைபெற்றது. இந்த இயக்கங்களில் இரண்டு முக்கியக் கூறுகள் இருந்தன. இந்த மாபெரும் இயக்கங்களுக்கு தேசிய அளவில் மகாத்மா காந்தியால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட அரசியல் சிந்தனையை கொண்டவர்கள் தலைமை தாங்கினார்கள் என்பது உண்மை. ஆனால் ஒருபுறத்தில் இந்த சிந்தனை கொண்ட, நாடாளுமன்ற ஆட்சிமுறையை ஆதரிப்பவர்களும், மறுபுறத்தில் காந்தியின் சித்தாந்தம், திட்டம் மற்றும் கொள்கைகளோடு கடுமையாக முரண்பட்ட தீவிர மற்றும் முற்போக்குவாத காங்கிரசாரும் களத்தில் நின்றார்கள். நாடாளுமன்ற ஆட்சிமுறை தொடர்பாக தனக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு என்று கூறிய காந்தி, எனினும் அந்த சிந்தனை கொண்டவர்களுக்கு தனது ஆசிகள் உண்டு என்றும் கூறினார். இந்த அடிப்படையில் காங்கிரசின் உயர்மட்ட தலைமையின் ஒரு பகுதியினர் இந்த சிந்தனையின் பால் ஈர்க்கப்பட்டு, ஒருவித மாயையில் சிக்கியிருந்தனர். மறுபுறத்தில், 1930 - 32 ஆண்டுகளில் நடந்த இந்த சத்தியாகிரகப் போராட்டங்களில் நாடு முழுவதும் தொழிலாளர் வர்க்கம் நடத்திய மாபெரும் வேலைநிறுத்தங்களும், இதர வடிவங்களிலான பெருவாரியான மக்கள் பங்கேற்ற நேரடி இயக்கங்களும் இந்த சத்தியாகிரகங்களின் வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தன. இந்தப் போராட்ட அனுபவங்கள், தொழிலாளர் வர்க்கத்தை மேலும் மேலும் அணிதிரட்டுவதற்கான வழிகளையும், வாய்ப்புகளையும் கண்டறியும் வேட்கையை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியல் செயற்பாட்டாளர்கள் மத்தியில் உருவாக்கியது. இப்படியாக அவர்கள், கம்யூனிசத்தையும் சோசலிசத்தையும் நோக்கி வரத் துவங்கினார்கள்.

1934 மே மாதம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 1934 அக்டோபரில் பம்பாயில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் காந்தி தலைமையிலான நாடாளுமன்ற திட்ட ஆதரவாளர்களுக்கும், மற்றவர்களுக்கும் இடையே மிகப் பெரிய முரண்பாடும், மோதலும் ஏற்பட்டது. காந்தியின் ஆதரவாளர்களுக்கு காங்கிரஸ் தலைமையில் இருந்த வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் தலைமையேற்றனர். மற்றவர்களுக்கு சோசலிஸ்ட்டுகளால் தலைமை தாங்கப்பட்ட இடதுசாரிகள் வழிகாட்டிகளாக இருந்தார்கள். இந்த தருணத்தில் கிட்டத்தட்ட காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி பிறக்கத் துவங்கிவிட்டது என்று கூறலாம். காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே “ஆளும் குழு”விற்கு எதிராக, காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியானது “எதிர்க்கட்சித் தலைவர்” என்ற நிலையில் இருந்து செயல்பட்டது. காந்தியவாதிகள், நாடாளுமன்றவாதிகள் மற்றும் இதர வலதுசாரிகள் காங்கிரஸ் கட்சிக்குள் “ஆளும் குழு”வாக இருந்தார்கள். கம்யூனிஸ்ட்டுகளை பொறுத்தவரை, பல்லாண்டு காலமாக நடந்து கொண்டிருந்த மீரட் சதி வழக்கிலிருந்து இப்போதுதான் நிபந்தனைகளின் பேரில் வெளியில் வந்திருந்தனர். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி உதயமாவதற்கு சற்று முன்பு பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்கள் ஒன்றாக இணைந்து, மையப்படுத்தப்பட்ட ஒரு தலைமையின் கீழ் செயல்பட துவங்கியிருந்தன என்ற போதிலும், அந்த சமயத்தில் நிலவிய சூழலின் பின்னணியில், புதிதாக அமைக்கப்பட்டிருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மையமானது தலைமறைவாகவே செயல்பட வேண்டிய நிலைமை இருந்தது. ஏனென்றால் பிரிட்டிஷ் அரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்திருந்தது. எனவே, இந்த குறிப்பிட்ட தருணத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் இடதுசாரிகளின் துரித வளர்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பங்களிப்பு முழுவீச்சுடன் மேற்கொள்ளப்பட முடியவில்லை.

(தொடரும்)
 

;