tamilnadu

img

குண்டும் குழியுமாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம்!

கிருஷ்ணகிரி, மே 8-கலைஞர் கருணாநிதி பெயரில் உள்ளது கிருஷ்ணகிரி பேருந்து நிலையம். கடந்த எட்டு ஆண்டுகாலமாகப் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது. தரைகள் பல இடங்களில் பெயர்ந்து அரை அடி, ஒரு அடி, ஆழப் பள்ளங்களாகக் காட்சியளிக்கிறது. ஒரு இடத்தில் சதுரமான சிறு தொட்டி போன்ற குழி உள்ளது. இந்த இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட ஒரு இரும்பு தடுப்பு இப்போதும் அப்படியே நடுவில் உள்ளது. மக்களுக்கும், பேருந்துகளுக்கும் மிகப்பெரும் இடையூறாகவே உள்ளது. பேருந்து நிலையத்தின் உள்ளே வடக்கில் இரண்டு மூலைகளிலும் பெரிய வேகத்தடை உள்ளது. அது குறித்த வெள்ளை சாயம் குறியீடு இல்லாததால் பல நேரங்களில் பேருந்துகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் வேகமாக வந்து திரும்பும்போது பயணிகள் இருக்கைகளிலிருந்து தூக்கியடிக்கப்படுகிறார்கள். இதனால் பல நேரங்களில் பயணிகளுக்கு பேருந்துக்குள்ளேயே காயம் ஏற்படுகிறது. பேருந்துகளும் பழுதாகக் காரணமாகிறது. பொது மக்கள் பயன்படுத்தும் இலவச கழிப்பிடம் பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் மூக்கை பிடித்துக்கொண்டுதான் போக முடிகிறது. இதனால், பெரும்பாலும் இலவச கழிப்பிடங்களைப் பயன்படுத்தாமல் பேருந்து நிலையத்துக்கு உள்ளேயே சுற்றுச் சுவர் ஓரத்திலேயே சிறுநீர் கழித்து வருகிறார்கள்.இந்த பிரச்சனைகள் குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.ஜெயராமன், நகரச் செயலாளர் ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் நஞ்சுண்டன், அழகிரி, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் இளவரசன், சிஐடியு துணைச் செயலாளர் குமுதன், ஆகியோர் கூட்டாக மாவட்ட ஆட்சியருக்குக் கோரிக்கை மனுகொடுத்தனர்.அந்த மனுவில், குண்டும், குழியுமாக உள்ள பேருந்து நிலையத்தை உடனடியாக சீரமைத்துக் கொடுக்க வேண்டும். நட்ட நடுவில் தொட்டி போல் உள்ள குழியை மூட வேண்டும், பேருந்து நிலயத்திற்குள் உள்ள வேகத்தடையை அடையாளப் படுத்தும் வகையில் வெள்ளை நிற குறியீடுகள் போட வேண்டும்.இலவச கழிப்பிடங்களைச் சரி செய்து போதிய தண்ணீர் வசதி செய்து கழிவுநீர் கால்வாய் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தியிருக்கிறார்கள்.

;