tamilnadu

img

நியூஸி.க்கு எதிரான டி-20 போட்டி மீண்டும் சூப்பர் ஓவர்... இந்தியா வெற்றி

நியூஸிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடரின் முதல் 3 ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று  தொடரைக் கைப்பற்றிய நிலையில், 4-வது டி-20 போட்டி நியூஸிலாந்து நாட்டின் முக்கிய நகரான வெலிங்டனில் வெள்ளியன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி வழக்கம் போல பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா, ஷமி, ஜடேஜா ஆகியோருக்கும், நியூஸிலாந்து அணி தரப்பில் கேப்டன் கனே வில்லியம்சனுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. இதனால் நியூஸிலாந்து அணியின் கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தி களமிறங்கினார்.      

முதலில் களமிறங்கிய இந்திய அணி மணீஷ் பாண்டேவின் (50 ரன்கள்)  இறுதிக்கட்ட அதிரடியால் 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. நியூஸிலாந்து அணி தரப்பில் இஷ் சோதி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.    166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி தொடக்கத்தில் திணறியது. எனினும் தொடக்க வீரர் காலின் முன்ரோ (64 ரன்கள்), விக்கெட் கீப்பர் செய்பேர்ட் (57 ரன்கள்) ஆகியோரின் அசத்தலான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளுடன் நியுஸிலாந்து அணி 165 ரன்கள் எடுத்து போட்டியை டை செய்தது. வெற்றியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் கொண்டுவரப்பட்டது. முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 6 பந்துகளில் 13 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 1 பந்து மீதம் வைத்து 16 ரன்களுடன் மீண்டும் சூப்பர் ஓவரில் வெற்றியை ருசித்தது. ஒரே தொடரில் அடுத்தடுத்து சூப்பர் ஓவர் வைப்பது இதுவே முதல் முறையாகும்.

;