கோப்பை வெல்லும் அணிகளுள் ஒன்றான தென் ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரில் பலமாகக் களமிறங்கினாலும் வீரர்களின் பொறுப்பில்லாத ஆட்டத்தில் தொடர் தோல்வியைச் சந்தித்துத் திணறி வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி யிடம் ஏற்பட்ட தோல்வியைக் கூட ஜீரணித்துவிடலாம். ஆனால் இரண்டாம் லீக்கில் வலுக் குறைந்தவங்கதேசத்திடம் தோல்வி கண்டது தான் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்த தோல்விகளால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஏற்கெனவே துவண்டுள்ள நிலையில், நட்சத்திர பந்துவீச்சாளர் லுங்கிநிகிடி காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து விலகியுள்ளார்.இது தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.
துரத்தும் சோதனை
தோள்பட்டை காயம் காரணமாக டேல் ஸ்டெய்ன் முதல் இரு ஆட்டங்களில் விளையாடவில்லை. இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர் வீசிய பவுன்சர் பந்து அம்லாவின் நெற்றியை முத்தமிட்டு தழும்பை உருவாக்கியதால் பேட்டிங் செய்யத் திணறுகிறார். தற்போது லுங்கி நிகிடி காயத்தால் விலகியுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கிய நிலையில் உள்ளது.