tamilnadu

img

ஜடேஜா ரன் அவுட் சர்ச்சை கோபத்தில் இந்திய அணி நிர்வாகம்

மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  3 போட்டிகளைக் கொண்ட ஓருநாள் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.சுவாரஸ்யமின்றி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை புரட்டியெடுத்தது. 

ஆட்டத்தின் முடிவு பிரச்சனையின்றி நிறைவுபெற்றாலும், இந்திய அணி பேட்டிங் இன்னிங்ஸின் கடைசிக் கட்டத்தில் ஜடேஜா ரன் அவுட் ஆகிய விதம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. ஜடேஜா ரன் எடுக்க முயன்ற போது மேற்கு இந்தியத் தீவுகளின் இளம் வீரர் ராஸ்டன் சேஸ் ரன் அவுட் செய்வதற்காக ஸ்டெம்பில் பந்தை எறிந்தார். துல்லியமான கணிப்பால் ஸ்டெம்பை பந்து தகர்த்த நிலையில், கள நடுவரிடம் அவுட் கேட்டார். நடுவர் ஷான் ஜார்ஜ்,”அவுட் இல்லை” என வாய்மொழியில் கூற, மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்கள் பீல்டிங்கில் கவனம் செலுத்தத் தயாராக இருந்தனர். மைதானத்தில் உள்ள பெரிய திரையில் ஜடேஜா விவகாரத்தின் உண்மை நிலவரத்தை ஒளிபரப்ப, இதனைக் கண்ட மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் பொல்லார்டு அதைப் பார்த்து நடுவரிடம் 3-வது நடுவர் அனுமதி கேட்டார்.  இதையடுத்து மூன்றாம் நடுவரிடம் இந்த விவகாரம் செல்ல ஜடேஜா ரன் அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது.  ஜடேஜா அவுட் ஆன விதம் இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்த எல்லைக் கோட்டின் அருகே நின்று ஆக்ரோஷ மாகப் பிளிறினார். ஆட்டம் நிறைவு பெற்றவுடன் இந்த விஷயம் தொடர் பாகக் கோலி பல்வேறு கேள்விகள் எழுப் பினார். இந்திய அணி நிர்வாகமும் கடும் அதிருப்தியில் உள்ளது.

சர்ச்சைக்குக் காரணம் என்ன?

பொதுவாக கிரிக்கெட் விளையாட்டில் எந்த ஒரு வீரருக்கும் சந்தேகம் வந்தால் கள நடுவரிடம் தான் முறையிட வேண்டும். நடுவர் கலந்து பேசி 3-ஆம் நடுவரிடம் முறையிடுவார்கள். ரன் அவுட் முதல் வேறு எந்த சந்தேகம் இருந்தாலும் நடுவர் நினைத்தால் மட்டுமே மேல்முறையீடு செய்யமுடியும். புரியும்படி சொன்னால் ஆட்டத்தின் நடுவரை விட கள நடுவர்கள் தான் அதிக அதிகாரம் வாய்ந்தவர்கள். ஜடேஜா ரன் அவுட் ஆன விதத்தில் கள நடுவர் மீது தான் தவறு. அவர் தான் ஜடேஜா ரன் அவுட்டுக்கான மேல்முறையீடு செய்த பொழுது அவுட் இல்லை எனக் கூறினார். அதோடு மேல்முறையீட்டுக்கான காலக்கெடு நிறைவடைந்தது. ஆனால் மைதான திரையில் ஒளிபரப்பு செய்ததைப் பார்த்து மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் பொல்லார்டு மீண்டும் மேல்முறையீடு செய்வது தவறான விஷயம். அதை 3-வது நடுவருக்குக் கள நடுவர் பரிந்துரை செய்தது அதற்கு மேல் செய்த மிகப்பெரிய தவறு. போட்டி நடுவர் இதனைக் கண்டுகொள்ளாமல் இருந்தது ஹாட்ரிக் தவறு. மற்றவர்கள் செய்த தவறுக்கு இந்திய வீரர் ஜடேஜா இரையாகியுள்ளார். இது தான் இந்த சர்ச்சைக்குக் காரணம். ஜடேஜா ரன் அவுட்டில் விதிகள் பயன்படுத்தவில்லை. கள நடுவர் ஷான் ஜார்ஜ் தன்னிச்சையாக செயல்பட்டு அறிவித்துள்ளார். விரைவில் இது விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 

;