tamilnadu

img

கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படும் பாஜக- அதிமுக அரசுகளை தூக்கி எறியவேண்டும் திருப்பெரும்புதூர் பொதுக்கூட்டத்தில் அ.சவுந்தரராசன் பேச்சு

செங்கல்பட்டு, ஏப்.11-கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படும் பாஜக -அதிமுக அரசைஅனைத்து தரப்பு மக்களும் தூக்கி எறிய வேண்டும் என சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் பேசினார்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருப்பொரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவிற்கு ஆதரவாக சிஐடியு சார்பில் திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் புதனன்று (ஏப் 10) பொதுக்கூட்டம் நடைபெற்றது.சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இ.முத்துக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் க.பீம்ராவ், சிபிஎம்பகுதிச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்டக்குழு உறுப்பினர் டி.லிங்கநாதன், சிஐடியு நிர்வாகி திருஞானம் உள்ளிட்ட பலர் பேசினர். கூட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசியதாவது:-நீதிபதிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெறுகின்றது. பாஜகவிற்கு ஆதரவானவர்களை நீதிபதிகளாக நியமிக்கின்றனர். இதை எதிர்த்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கின்றனர். அதில் ஜனநாயகத்தை மக்கள் பாதுகாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இந்தசம்பவம் மோடி ஆட்சியில் தான் நடைபெற்றது. சிபிஐ, ரிசர்வ் வங்கி கூடசுதந்திரமாக மோடி ஆட்சிக் காலத்தில் செயல்பட முடியவில்லை. ரிசர்வ் வங்கி பணத்தை மோடி கேட்கின்றார். அதை எதிர்த்து ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி விலகிச் சென்றதும் மோடி ஆட்சியில் தான் நடைபெற்றது. இதே போன்றுதேர்தல் ஆணையமும் அவர்களின்கைப்பாவையாகச் செயல்படுகின்றது. எதைச் செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என மோடியை கேட்டுதான் தேர்தல் ஆணையமும் செயல்படுகின்றது. இதை எதிர்க்கும் தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்கள் மிரட்டப்படுகின்றது. இங்கு ஜனநாயகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சர்வாதிகார ஆட்சி நடக்கின்றது.பொதுத் துறை சொத்துக்களில் இதுவரையிலும் 85 ஆயிரம் கோடிதனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடுதான் கடந்த மூன்று மாதங்களாக பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்குச் ஊதியம் கொடுக்க முடியாத மோடி விவசாயிகளுக்கு ஆறாயிரம் கொடுக்கப்போகிறாரா?நாள்தோறும் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டம், வாழ் நாள் முழுவதும் ஒப்பந்த ஊழியர்களாகவே சமுக பாதுகாப்பற்ற வாழ்க்கை தொடரும் தொழிற்சாலை விபத்துக்கள் என நாள்தோறும் போராடும் சாதாரண மக்களுக்கான அரசாக செயல்படாமல் பாஜக அரசு கார்ப்பரேட்டுகளுக்காக செயல்படுகின்றது. இந்த அரசை விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாஜக அரசை தூக்கி எறிய வேண்டும்இவ்வாறு பேசினார்.

;