tamilnadu

img

சாதி, மதம் கடந்து தொழிலாளர்களை ஒருங்கிணைப்போம்: அ.சவுந்தரராசன்

காஞ்சிபுரம்:
சாதி, மதம் கடந்து தொழிலாளர்களை ஒருங்கிணைப்போம் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் அழைப்பு விடுத்தார்.

காஞ்சிபுரத்தில் சிஐடியு மாநில மாநாட்டிற்கு தலைமை வகித்து அவர் பேசியது வருமாறு: 
உலகம் போர் மேகம் சூழ்ந்த நிலையில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இராக் உள்ளிட்ட பல நாடுகள் பதற்றமான நிலையிலேயே உள்ளன. எவ்வளவு அழிவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என ஏகாதிபத்திய நாடுகள் கருதுகின்றன. அவர்களுக்கு ஆதிக்கம்தான் முக்கியம். எண்ணெய் உள்ளிட்ட செல்வங்களை கொள்ளை அடிக்க புதுப்புது வழிகளை கண்டுபிடிக்கிறார்கள். சிரியாவுக்கு எதிராக யுத்தம் தொடுத்தார்கள். சீனாவுக்கு எதிராக யுத்தம் தொடுக்க முயற்சிக்கிறார்கள். யுத்தத்திற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும். ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதுதான் தொழிலாளி வர்க்கத்தின் முதல் கடமை.

தனியார்மயம், தாராளமயம், தாராள வர்த்தகம் என உலக வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கி அமெரிக்கா அறிவித்தது. யார் வேண்டுமானாலும் உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் தொழில் தொடங்கலாம் என்று அறிவித்தது. அப்போதே தொழிலாளி வர்க்கம் அதை எதிர்த்தது, எச்சரித்தது. அப்போது நம் நாட்டிற்கு நிறைய முதலீடுகளும், ஏற்றுமதி செய்ய வாய்ப்புகளும் உள்ளதாக முதலாளிகளும், அன்றைய காங்கிரஸ் அரசும் கூறியது. ஆனால் அமெரிக்கா தற்போது தற்காப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அங்கே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கடுமையான வரி விதிக்கப்படுகிறது. பல நாடுகளுக்கு எதிராக பொருளாதார தடை விதித்துள்ளது. இராக்கில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் பால், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் 15 லட்சம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பென்சில், சாக்லெட் கூட கிடைக்காத நிலை. இப்படி 10 ஆண்டுகளாக அந்த நாட்டை பலவீனப்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இந்தியாவில் பாதுகாப்புத் துறை, ரயில்வே உள்ளிட்ட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களையும் மத்திய அரசு தனியார்மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. பாதுகாப்புத் துறைக்கு தேவையான பொருட்களை உள்நாட்டில் அரசு உற்பத்தி செய்தால்தானே அதில் பாதுகாப்பு இருக்கும். தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்தால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகாதா?காஷ்மீர் இந்தியாவுடன்தான் இருக்க வேண்டும் என்று ஷேக் அப்துல்லா தலைமையில் அந்த மக்கள்தான் போராடினார்கள். மோடி அரசின் அடக்குமுறையால் இப்போது காஷ்மீரில் தீவிரவாத சக்திகள் வளர்வதற்குத்தான் வழி செய்திருக்கிறார்கள்.எல்லோருக்கும் வேலை, குடிநீர் என்பது பற்றியெல்லாம் மத்திய அரசு கவலைப்படவில்லை. காஞ்சி மாவட்டத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் இருந்தாலும், தொழிற்சங்கம் அமைக்க உரிமை மறுக்கப்படுகிறது. 2006க்குப் பிறகு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். நாட்டின் சுதந்திரமும், ஜனநாயகமும் கேள்விக்குறியாகியுள்ளது. மோடி குறித்தோ, மத்திய அரசு குறித்தோ கருத்து எதுவும் கூறக் கூடாது என்கிறார்கள். தொழிற்சங்கங்களுக்கு எதிராக புதுப்புது தாக்குதல்களை மத்திய அரசு தொடுக்கிறது.

தமிழகத்தில் ஒரு பொம்மை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மத்திய அரசு தமிழகத்திற்கு எதிராக எந்த திட்டங்களை அறிவித்தாலும், மக்களைப் பற்றி கவலைப்படாமல் அதிமுக அரசு உடனே அமல்படுத்துகிறது. ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் தமிழகத்தில் வந்தால் தமிழகம் சுடுகாடாக மாறும். தற்போது கடுமையான தொழில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது. அதைப்பற்றி கவலைப்படாமல் இந்தியை திணிக்க முயற்சிக்கிறார்கள். தற்போது நாட்டில் அடக்குமுறை ஆட்சி நடைபெறுகிறது. மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் மக்களை கூறுபோட நினைக்கிறார்கள். நாம் நம்  பண்பாட்டையும் மரபையும் காக்க ஒன்றிணைந்து போராட வேண்டும். நாம் தொழிலாளி வர்க்கம் என்ற அடிப்படையில் அனைவரையும் சாதி, மதம் கடந்து ஒன்றிணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

;