tamilnadu

img

அத்தி வரதர் தரிசனம்: கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலி

காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில் நாற்பது வருடங் களுக்கு ஒரு முறை 48 நாட்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவம்  ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியை காண நாளுக்கு நாள்  பெருகி வரும் கூட்டத்தை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் திணறிவருகிறது. இந்நிலையில் வியாழனன்று (ஜூலை 18) கூட்ட நெரிசலில் சிக்கி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த  பழ வியாபாரி நடராஜன் என்பவரும், சென்னை ஆவடியில் போக்குவரத்து காவல் துறையில்  உதவியாளராக பணிபுரியும் முத்துக்குமார்  என்பவருடைய மனைவி சாந்தி என்கிற நாராயணியும்,  ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த கங்கா லட்சுமி என்பவரும்,சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த மருந்து வியாபாரம் செய்து வரும் ஆனந்தவேல் என்பவரும் உயிரிழந்தனர்.இதில் ஆனந்தவேல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற கங்காலட்சுமி , சாந்தி (எ) நாராயணி,  நடராஜன் ஆகிய மூவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது  சிகிச்சை பலனளிக்காமல்  உயிரிழந்தனர். 

இதுவரை 6பேர் பலி
ஏற்கனவே வரதராஜ பெருமாள் கோவிலில் காவலர் ஒருவர் தாக்கியதில் ஆந்திரமாநில மாணவர் ஒருவர் உயிரிழந்தார். வாகன கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் டாடா மேஜிக் வாகன ஓட்டுநர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

சட்டப்பேரவையில் எதிரொலி
கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழக சட்டப்பேரவையில் எதிரொலித்தது. இதனை எழுப்பிய எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான மக்கள் வந்துகொண்டிருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகள் குறித்து முழு விவரம் கிடைத்த பின்னர் உரிய விளக்கம் அளிக்கிறேன் என்றார்.

சிபிஎம் கோரிக்கை
சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் விடுத்துள்ள அறிக்கையில், “அத்தி வரதர் தரிசனத்தை காண வருகை தரும் பக்தர்களுக்கு உரிய அடிப்படை வசதிகளும் நெரிசல் ஏற்படாமல் இருக்க உரியபாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்துதருமாறு விழா தொடங்குவதற்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வலியுறுத்தினோம். ஆனால் மாவட்ட நிர்வாகம் கவனக் குறைவாக நடந்துகொண்டதால் அப்பாவி மக்கள் 4 பேர் உயிரிழக்கவேண்டியதாயிற்று.இனியும் இதுபோன்ற துயரச்சம்வங்கள் நடைபெறாமல் இருக்க உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

;