tamilnadu

img

கொரோனா வைரஸ்:அபாயத்தில் 2.5 கோடி வேலைகள்

அபாயத்தில் 2.5 கோடி

உலகம் முழுவதும் சுமார் 3.4 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இந்த எண்ணிக்கை 464. இது உலகளாவிய அளவில் ஏற்பட்ட சுகாதார மற்றும் உடல் நல பாதிப்பு மட்டும் அல்ல, தொழிலாளர்களையும் அவர்களை தொடர்ந்து பொருளாதாரத்தையும் மிகத் தீவிரமாக பாதிக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது. உலகளாவிய அளவில் 2.5 கோடி வேலைகள் அபாயத்தில் இருப்பதாகவும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது.

கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க, வீட்டில் இருந்தபடி அலுவலக பணி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள், இந்நிலையில் பணியில் ஈடுபடும் நேரம் குறைந்து, அதற்கேற்ப ஊதியமும் குறைக்கப்படும். எனவே வேலைவாய்ப்பின்மை அதிகளவில் ஏற்படும் என்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் நெருக்கடி நேரத்தில் சுய தொழிலில் ஈடுபடுகிறவர்களுக்கு பெரும்பாலும் பாதிப்பு இருக்காது. ஆனால் தற்போது சரக்குகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதால் சுய தொழில் செய்பவர்களுக்கும் பாதிப்பு இருக்கும் என்று தெரிகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்தியாவிலும் விமான போக்குவரத்து, விடுதிகள், சில்லறை வணிகம் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து துறைக்கு பாதிப்பு அதிகம்

100க்கும் மேற்பட்ட நாடுகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள தடை விதித்துள்ளன. ஏற்கனவே விமான பயணத்திற்காக முன் பதிவு செய்த பயணிகள், தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளதால், விமான போக்குவரத்து நிறுவனங்களும் விமான சேவையை ரத்து செய்துள்ளன. நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை 36 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இந்தியா தடை விதித்துள்ளது. அதே போல இந்தியர்களும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

உணவு விடுதிகளுக்கு என்ன பாதிப்பு?

வைரஸ் குறித்த அச்சம் காரணமாகவும், அரசாங்கங்களின் அறிவுரையாலும் மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர முடியாது. இதனால் உணவு விடுதிகள் மிகுந்த நஷ்டத்தை எதிர்கொள்கின்றன. பல மாநிலங்களில் உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. தலைநகர் தில்லியிலும் பல உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ளன. உணவு விடுதிகளில் பணியாற்றியவர்கள் ஊதியம் இன்றி தவிக்கின்றனர். இந்திய சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கூட்டமைப்பின் மூத்த நிர்வாக அதிகாரி ஆஷிஷ் குப்தா கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, மக்கள் யாரும் பயணம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டதால் ரூ.5 லட்சம் கோடி பணப் புழக்கம் உள்ள சுற்றுலாத் துறையில் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது’’ என்கிறார்.

இந்திய சுற்றுலாத் துறையில் 5.5 கோடி பேர் வேலை செய்கின்றனர். இதில் விடுதியில் பணிபுரிகிறவர்கள், சுற்றுலாவிற்கு பயன்படும் வாகன ஓட்டுனர்கள், கைவினை பொருட்கள் செய்யும் கலைஞர்கள் என பலருக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த நிலை தொடர்ந்தால், 60லிருந்து 70 சதவீதம் மக்கள் வேலை இழக்க வாய்ப்பு உள்ளது. இந்த நெருக்கடியை சமாளிக்க ஆஷிஷ் குப்தா பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுக்கிறார். “வங்கிகளில் மாதக் கடன் செலுத்துபவர்களுக்கு, 12 மாதம் வரை கால அவகாச நீட்டிப்பு தேவை. அந்த 12 மாதங்களில் மக்கள் ஓரளவு சமாளிக்க பணம் சேர்க்க முடியும். மேலும் வட்டி இல்லாமல் வங்கிகளிடமிருந்து பண மூலதனத்தைப் பெற மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

வருமான வரி வசூலித்தல், சரக்கு மற்றும் சேவை வரி, உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணம் உள்ளிட்டவற்றை 12 மாதங்களுக்கு தள்ளி வைக்கவேண்டும். வேலை இழப்பவர்களுக்கு நிலைமை மேம்படும் வரை நேரடியாக பணம் கிடைக்கும் வகையில் அரசாங்கம் ஒரு நிதியை ஒதுக்க வேண்டும். சுற்றுலா செல்வதற்கான ஜி.எஸ்.டி வரியை அரசாங்கம் சில காலத்திற்கு தள்ளுபடி செய்தால் மக்கள் ஆர்வமுடன் பயணம் மேற்கொள்ள வழிவகுக்கும்.

விமானத்துறை நிறுவனங்கள்

சமீபத்தில் விமான போக்குவரத்து மையம் ஏர் இந்தியா உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து விமான சேவை நிறுவனங்களும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் 2020 வரை 600 மில்லியன் டாலர்கள் இழப்பை எதிர்கொள்ள நேரிடும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று இண்டிகோ விமான சேவை நிறுவனம், தங்களின் மூத்த ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்வதாக அறிவித்தது. இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி ரோனோஜோய், தன் ஊதியத்தில் இருந்து 25% பிடிக்கப்படும் என கூறினார். விமானத்தின் காக்பிட் குழுவில் பணிபுரியும் ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் பிடிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

விமான சேவைத் துறையில் பணப்புழக்கத்தை முடக்கிவிடாமல் அரசாங்கம் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் வரும் மே மாதத்திற்குள் பல விமான சேவைகளை முடக்கும் நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் ரோனோஜோய் தெரிவித்துள்ளார். ‘கோ ஏர்’ நிறுவனம் தனது வெளிநாட்டு விமானிகளின் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளது. மேலும் தனது சர்வதேச விமான சேவைகளை நிறுத்துவதாகவும், ஊதியம் இல்லாத திட்டத்தின்படி தனது ஊழியர்களை சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுமாறும் அறிவித்துள்ளது.

சமமான ஊதியம் வழங்க முடியாது

சர்வதேச தொழிலாளர் அமைப்பை பொறுத்தவரை சில பிரிவுகளில் வேலை இழப்புகளின் தாக்கம் உலகம் முழுவதும் செய்யும் வேலைக்கு சமமான ஊதியம் வழங்கும் சூழல் நிலவாது. பாதுகாப்பின்றி குறைந்த ஊதியம் பெறும் பணியாளர்களுக்கும் இது பொருந்தும். வேலை வாய்ப்பு இருந்தாலும் வறுமை நிலவும்.

வேலையின்மை நிலவினால், அவர்களிடம் பணம் இருக்காது, தேவையான பொருட்களையும் வாங்க முடியாது. இதனால் மக்களின் நுகர்வு குறையும். இதனால் வர்த்தகத்தில் நேரடி பாதிப்பு இருக்காது. ஆனால் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு நிலவும். கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் பாதிக்கிறது என அமெரிக்காவின் ஃபிட்ச் ரேட்டிங் முகமை, குறிப்பிடுகிறது. 2020 - 2021ம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் முன்பு கணித்ததைவிடக் குறையும் என்கிறது அந்த அமைப்பு.

இத்தகைய பின்னணியில் சமூகத்தின் பாதுகாப்பிற்காக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு கூறுகிறது. குறைந்த கால வேலைத்திட்டம், ஊதியத்துடன் விடுமுறை, மற்றும் சில சலுகைகளை நிறுவனங்கள் வழங்க வேண்டும். சிறு, குறு வணிகத்திற்கு தேவையான நிதி உதவிகள், வரி விலக்குகளை வழங்கி வர்த்தகர்களை ஊக்குவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.