tamilnadu

சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

கரூர்:
கரூரை அடுத்த வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் சரண்யா என்கிற கலைச்செல்வி (29). இவர் தனது வீட்டின் அருகில் குடியிருந்து வந்த சிறுமி ஒருவருக்கு மதுபோதைபழக்கத்தை ஏற்படுத்தி, அவரை கடத்தி சென்று திருப்பூரில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். இச்சம்பவத்தின் பின்னணியில் குமுதவல்லி (36), கல்பனா (32), சந்தனமாரி என்கிற சந்தியா (36), பிரதாப் (29), சிவகுமார் (36), மணி (36) ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேரையும் கைது செய்தனர். இவ்வழக்கு விசாரணை கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இவ்வழக்கில் செவ்வாய்கிழமை மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி சசிகலா, குற்றச் சம்பவத்தின் முதல் குற்றவாளி சரண்யாவுக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், இரண்டு 10 வருட சிறை தண்டனையும், மேலும் 13 வருடம் சிறை தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதித்து தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.இவ்வழக்கின் இரண்டாவது, மூன்றாவதுமற்றும் 7-வது குற்றவாளிகள் முறையே குமுதவல்லி, கல்பனா, மணி ஆகியோருக்கு இரண்டு ஆயுள் தண்டனையும், மேலும் 13 வருடம் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சத்து 35 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் ஆறாவது குற்றவாளி சிவகுமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்தார். நான்காம் குற்றவாளி சந்தியா, ஐந்தாம்குற்றவாளி பிரதாப் ஆகியோரை இவ்வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் ஆறாவது குற்றவாளியான சிவக்குமார் என்பவர் பாலியல் தொழிலுக்கு வாடிக்கையாளராக சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.கரூர் மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் ஒரே வழக்கில் ஐந்து பேருக்கு இரட்டைஆயுள் தண்டனை விதித்து கரூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

;