கடலூர், ஜூன் 6- கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 87 வயது முதியவர் இறந்ததைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. கடலூர் மாவட்டத்தில் புதன்கிழமை வரை 468 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் 36 பேர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடலூர் தண்டபாணி நகரைச் சேர்ந்த 87 வயது முதியவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையின் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் அவரது பேத்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் அவரது குடும்பத்தினர் 5 பேருக்கும் கடந்த மே 28ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். ஏற்கனவே காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையை சேர்ந்த 49 வயது பெண் ஒருவர் கொரோனா பாதிப்பினால் மே 12ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் ஏண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதுவரை 435 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.