tamilnadu

img

கொள்ளைபோகும் நீர், நில வளம் கிராம பொதுமக்கள் ஆவேசம்

சிதம்பரம், ஜன. 28- சவுடு மணல் என்ற பெயரில் கிராமத்தின் நீர், நில வளம் சுரண்டப்படுதை எதிர்த்து கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ளது சிலம்பிமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதியில் அதிக அளவு சவுடு மணல் உள்ளதால் மணிலா உள்ளிட்ட மானாவரி பயிர் செய்யப்படுகிறது. சிலர் அரசியல் மற்றும் மாவட்ட அரசு அதிகாரிகள் துணையுடன் சவுடு மணல் குவாரி என்ற பெயரில் அனுமதி பெற்று அனுமதித்த அளவைவிட 25 அடி ஆழத்திற்கு மேல் மணலை எடுத்து வெளிமாவட்டங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு அந்த மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.  இந்த நிலையில், கடந்த இரு மாதத்திற்கு முன்பு மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது மணல் எடுக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தடைவிதிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக அதே இடத்தில் மணல் எடுத்து விற்பனை நடைபெறுகிறது. ஒரு நாளைக்கு 200-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து மணல் அள்ளிச் செல்வதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த பகுதியில் மணல் தொடர்ந்து எடுப்பதால் மிகக் குறைந்த தூரத்தில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் கீழே செல்கிறது. இதே இடத்தில் தாதுமணல் உள்ளது. அதனையும் சவுடு மணல் என அரசை ஏமாற்றி எடுத்துச் செல்கிறார்கள். 6 அடி ஆழத்திற்கு மணல் எடுக்க அரசு அனுமதித்துள்ள நிலையில் 30 அடி வரை பள்ளம் தோண்டி மணலை எடுத்துவிட்டு அப்படியே மாற்று இடத்திற்கு சென்று விடுகிறார்கள். இதனால் அந்த பள்ளங்களில் மனித மற்றும் கால்நடைகளுக்கு உயிர் இழப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளதாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகிறார். எனவே அரசு பொதுமக்கள் நலன் கருதி இந்த மணல் குவாரியை தடைசெய்ய வேண்டும் என்று மணல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் குவாரியில் பரபரப்பு ஏற்பட்டது.  பின்னர்  கிராமத்தின் கனிம வளத்தையும், நிலத்தடி நீர் மட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மீறி குவாரி செயல்பட்டால் இந்த பகுதியில் அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய சாலை மறியல் போராட்டத்தை நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

;