tamilnadu

பெட்ரோல் ஊற்றி மனைவியை எரித்த கணவருக்கு  ஆயுள் தண்டனை

 கடலூர், அக். 10- கடலூர் அருகே மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஓரையூரைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் தாமஸ் (40). இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த உறவினரான மனோகர் மகள் விஜயகுமாரிக்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தம்பதியினருக்கு 13 வயதில் பெண் குழந்தை, 10 வயதில் ஆண் குழந்தை உள்ளனர்.  இந்நிலையில், மனைவியின் நடத்தையில் தாமஸ் அடிக்கடி சந்தேகப்படுவாராம். இதனால், இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது, இதனையடுத்து அவர் சென்னை மணலியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு குழந்தைகளை அழைத்துச் சென்று விட்டார். அங்கே கூலி வேலைப்பார்த்து குழந்தைகளை கவனித்து வந்தார். இந்நிலையில், பங்குனி உத்திரம் விழாவில் பங்கேற்பதற்காக 28.3.2018 அன்று விஜயகுமாரி சொந்த ஊர் திரும்பினார். விழாவிற்குப் பின்னர் மீண்டும் சென்னை செல்வதற்காக 2.4.18 அன்று வீட்டில் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குச் சென்ற தாமஸ், விஜயகுமாரி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், காயமடைந்த அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் ஏப்.8 ஆம் தேதி பலியானார். இந்த வழக்கு கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி மகாலட்சுமி அளித்த தீர்ப்பில், தாமஸிற்கு ஆயுள் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். இதனையடுத்து, அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக அரசு சிறப்பு வழக்குரைஞர் க.செல்வபிரியா கூறினார்.

;